Load Image
dinamalar telegram
Advertisement

நாட்டுப்பற்று மிக்க டாக்டர்!

டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்களை அறிமுகப்படுத்தியது தாய் வார இதழ்தான்! 1980களில் தாய் வார இதழுக்குப் பேட்டிக் கட்டுரைகளைத் தயார் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். மருத்துவச் சிறப்பிதழுக்காக டாக்டர் கண்ணப்பன் அவர்களைப் பேட்டி கண்டேன். டாக்டரோடு அன்று ஏற்பட்ட நட்பு இன்றும் அவர்களின் குடும்பத்தோடு எனக்கு தொடர்கிறது.
கண்ணப்பன் அவர்கள் அமரராகி விட்டார். அவருடைய ஏழாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிக்குப் போய் இருந்தேன். கண்ணப்பன் அவர்களின் படத்தைப் பார்த்த போது பழைய நினைவுகள் வந்து மறைந்தன.

1980களில் ஒருநாள் பாம்குரோவ் ஹோட்டலில் எழுத்தாளர் சங்க நிகழ்ச்சி ஒன்று. டாக்டர் கண்ணப்பனும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ஜெமினி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். என் பக்கம் ஒரு கார் வந்து நின்றது. கண்ணப்பன் அவர்கள் மிக கனிவாக 'என்ன கீழாம்பூர்? எங்க போகணும்?' என்று கேட்டார். 'ஐயா எனக்கு வீடு திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெரு, 25ம் நெம்பர் பஸ்ஸில் ஏறி...' என்று முடிப்பதற்குள் கார் கதவை திறந்தார். என்னை உட்காரச் சொன்னார். டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் போக வேண்டிய அவருடைய கார் மவுண்ட் ரோட் பக்கமாகத் திரும்பி பயணித்து, முழு மவுண்ட்ரோடும் சென்று அண்ணாமலையைத் தாண்டி திருவல்லிக்கேணி ஹைரோடு வழியாக என் வீட்டின் முகப்பில் வந்து நின்றது.
இந்த பதினைந்து நிமிட பயணத்தில் நான் யார்? தினமணியில் என் பகுதி நேர பணி என்ன? திரு. ஏ.என். சிவராமனுக்கு (தினமணி ஆசிரியர்) நான் என்ன முறையில் சொந்தம்? எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்தார். உங்களை ஆல் இண்டியா ரேடியோவில் கேட்டிருக்கிறேன். தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். பத்திரிகைகளில் எழுதுகிறீர்கள்? எப்படி நேரத்தைப் பிரித்துக் கொள்கிறீர்கள்? என்பன போன்ற கேள்விகளைக் கனிவாக கேட்டார்.
என்னைப் பற்றி ஒரு டேட்டா பேஸ் அவருக்குக் கிடைத்துவிட்டது. நான் வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத விஷயம் அது? என் வீட்டு மாடிப்படி ஏறி என் பெற்றோர்களைப் பார்க்க வந்தார் டாக்டர் கண்ணப்பன். நான் சாதாரண எழுத்தாளன். அவரோ பி.சி. ராய் விருது வாங்கியவர். சமூகத்தில் எல்லா பெரிய மனிதர்களாலும் மதிக்கப்பட்டவர். அவர் என்னை அவருடைய காரில் அழைத்து வந்து என் வீட்டிற்கு வந்தது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியமாகும்!
என் தாய் தந்தையாருடன் அன்பாகப் பேசினார். என் அப்பா சுந்தரம் ஃபைனான்சில் வேலை செய்வதை அறிந்து டி.வி.எஸ். கம்பெனி பற்றி சில விவரங்களைச் சொன்னார். மோர் மட்டும் கொடுங்கள். வீட்டில் போய் சாப்பிட வேண்டும். என் மனைவி காத்துக் கொண்டிருப்பாள் என்று சொல்லி என் தாய் கொடுத்த மோரை அருந்தினார்.
கிளம்பும்போது ஒரு விஷயத்தை சொன்னார், டாக்டர் சொன்னதை வேத வாக்கக எடுத்துக் கொண்டு இன்று வரை அதில் முனைப்பு காட்டி வருகிறேன்.
'கீழாம்பூர் சுற்றுவதற்க அஞ்சுவதில்லை. பல இடங்களுக்குப் போய் அறிவு பொக்கிஷங்களைத் தேடி வருகிறார். இந்த இளைஞர் எனக்குப் பிடித்தமானவர்' என் அப்பா அம்மாவிடம் டாக்டர் சொன்னபோது மனம் குளிர்ந்து போனது.
மூன்று முறை அவர்களுடைய மருத்துவமனைக்கு என் தாய், தந்தையை கூட்டிக் கொண்டு போனதுண்டு. னெ் தாய் தந்தைக்கு வைத்தியம் செய்ததோடு பல் பற்றி எனக்குப் பெரிய வகுப்பே நடத்திவிட்டார் என்று சொல்லலாம். மிகுந்த பக்திமான், கந்தசஷ்டி கவசத்தைப் பற்களோடு கோர்த்துப் பார்த்த புனிதர், இவர் சப்தம் போட்டு நான் பார்த்ததே இல்லை.
ஆனல் இவர் ஆவேசமாக சாமி ஆடியதுண்டு! இவருடைய குலதெய்வம் வீரபத்திரர். இதற்காக இவரே முன்னின்று நாட்டை நடத்தினார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கையில் வாள் எடுத்து வீரபத்திரராக வலம் வந்து ஆடி, பலரை வியப்பில் ஆழ்த்திய மெய் அன்பர் இவர்.
இவரிடம் எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம் இவருடைய நாட்டுப் பற்று. நான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது டாக்டருக்குத் தெரியும். என்னிடத்தில் ஒரு விஷயத்தைச் சொன்னார். எப்போது தெரியுமா? அவருடைய வீட்டுக்கு 2008-2009 களில் நான் மாதம் ஒரு முறையாவது செல்வது உண்டு. அப்போது!
டாக்டரின் மனைவி திருமதி. வாசுகி கண்ணப்பன் அவர்கள் ஒரு நிறைகுடம். சைவ சித்தாந்தத்தை விரும்பிப் படித்துக் கொண்டிருந்த நேரம். அவரை சென்னைத் தொலைக் காட்சி நிலையத் திரைப்படப் பிரிவு சென்சாருக்கு யு.எம். கண்ணன் அவர்களிடம் சொல்லி உறுப்பினராக்கினேன். எனவே மாதம் ஒரு முறை தொலைக் கட்சி நிலையத்திற்கு திரைப்படத் தணிக்கைச் செல்லும் முன் இவர்கள் வீட்டிற்கு போவேன். நானும் வாசுகி கண்ணப்பன் அம்மாவும் சேர்ந்து தொலைக்காட்சிக்குப் போவோம்.
இங்கே வாசுகி கண்ணப்பன் அவர்களை பற்றியும் நான் சொல்லியாக வேண்டும். நான் பிரமித்து வியந்து பார்த்த பெண்மணிகளில் இவர் ஒருவர். பாடத்தெரியும், சைவ சித்தாந்தம் தெரியும். 58 வயதில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அதற்குப்பின் எம்.ஏ. சைவசித்தந்தமும் படித்தவர். கம்பன், சேக்கிழார் கழகங்களில் உயர்பொறுப்பில் இருப்பவர். அச்சகங்களில் தொண்டாற்றி வருபவர். கட்டுரை, கவிதைகள் எல்லாம் எழுதுவார்.
சென்னையில் எல்லா பொதுநல அமைப்புகளிலும் இலக்கிய அமைப்புகளிலும் இருக்கிறார். பம்பரமாக சுழன்று வேலை செய்யக் கூடிய புனிதவதி இவர். கார் ஓட்டுவதில் இவருக்கு நிகர் இவர்தான். சிங்கப்பூரிலும் லண்டனிலும் இவருடைய மகன்கள் இருப்பதால் வெளிநாட்டுப் பயணங்களின் போதும் ஏதாவது லக்கியக் கூட்டத்தில் இவருடைய பங்களிப்பு இருக்கும். தாயன்போடு என்னிடத்திலும் சரி, என் மனைவியிடத்திலும் சரி சமமாகப் பழகக் கூடியவர்.
கண்ணப்பன் டாக்டரை எனக்கு ஏன் பிடிக்கும்? இவருடைய நாட்டுப் பற்று என்று சொல்லியிருந்தேன். அந்த முன் பாராவை நிறுத்திவிட்டு, அவருடைய மனைவி வாசுகி கண்ணப்பனைப் பற்றி சில விஷயங்களை எழுதினேன். மீண்டும் கண்ணப்பனின் நாட்டுப் பற்று பற்றி சொல்கிறேன்.
1977ம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்காக டாக்டர் கண்ணப்பன் அவரகளும் அழைக்கப் பட்டிருந்தார்கள். சான்பிரான்ஸிஸ்கோ நகரத்தில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், சிறந்த அறிஞர்கள் மாநாட்டிற்காக கூடியிருந்தார்கள். மாநாடு அரங்கில் பல நாட்டுக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.நம் நாட்டு தேசியக் கொடி அங்கே இல்லாதது கண்டு மனம் வெதும்பினார். நிகழ்ச்சி ஏற்பாட்டளிடம் சொல்லி, அரங்கில் மூவர்ணக் கொடியைப் பறக்க ஏற்பாடு செய்த பின்புதான் அவர் மனம் நிம்மதி அடைந்தது.
இந்த தேசத்தை முழுமையாக நேசித்த ஒரு அற்புத மனிதர், மனிதாபிமானம் என்ற சொல்லுக்கு அர்த்தமானவர் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன். டாக்டர் வாசுகி கண்ணப்பன் (முனைவர் வாசுகி கண்ணப்பன்) டாக்டர் கண்ணப்பன் அவ்களின் மணிவிழாவில் உருவாக்கிய டாக்டர் கண்ணப்பன் - வாசுகி அறக்கட்டளையின் மூலமாக டாக்டர் கண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் தன் குடும்பத்தாருடன் இணைந்து விருதுகள் வழஙகி, அறிஞர்களை கௌரவித்து வருகிறார்.
இவ்வாண்டு விஐடி பல்கலைக் கழக நிறுவனர் வேந்தர் ஜி. விஸ்வநாதன் கலந்து கொண்டு முனைவர் தெ. ஞானசுந்தரம், டாக்டர் சுரேந்திரன், பேரா. முனைவர். இராம. குருநாதன், முனைவர் சேயோன், இராஜேஸ்வரி இணையர், கவிஞர் மலர்மகன், கலைஞர் சசிரேகா ஆகியோரு்கு விருதுகள் வழங்கியும் பொற்கிழி கொடுத்தும் சிறப்பித்தார்.
டாக்டரின் மகன் டாக்டர் ஜே.கே. திருச்செல்வம் அவரகள் வரவேற்புரை ஆற்றினார். டாக்டரின் சகோதரர் டாக்டர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். டாக்டரின் மருமகள் திருமதி. ராஜலட்சுமி சுந்தர் விருதுகளை வாசித்தளித்தார். டாக்டர் ஜே.கே. கங்காதர சுந்தர் டாக்டர் சுரேந்திரனை அறிமகப்படுத்தினார். நன்றியுரை நவின்றார். நல்லதொரு நிகழ்வாக இது அமைந்தது. புலவர் மா. இராமலிங்கம் தெய்வம் ஒன்று என்று உணர் என்ற தலைப்பில் நகைச்சுவையாகப் பேசி பெரிய விஷயத்தை அற்புதமாகப் புரிய வைத்தார்.
- கீழாம்பூர். சங்கரசுப்பிரமணியன்

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement