Advertisement

திறன் போற்றும் மரபு பொங்கல்

மரபு சார்ந்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, விடாமுயற்சி என ஏதேனும் ஒரு வகையில் நன்மை அளிக்கக்கூடியதாக உள்ளன. ஆனால் அவை குறித்து தற்போதைய பெற்றோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவுதான்.
ஆனால் இதற்கெல்லாம் மாறுபட்டு தேனி அல்லிநகரத்தில் நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி அதை ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் 'திறன்போற்றும் மரபு பொங்கல்' என்ற தலைப்பில் விழாவாக எடுத்து குழந்தைகளுடன் கொண்டாடி வருகிறார், மரபு விளையாட்டுக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆசிரியர் ப்ரித்தாநிலா. இவரின் கற்றல் இனிது' பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வாரந்தோறும் நாம் மறந்து போன ஆடுபுலி ஆட்டம், உப்புக்கோடு, மெல்ல வந்து கிள்ளிப்போ, கள்ளன் வாரான், களவாணி வாரான்', பல்லாங்குழி, கிட்டிப்புள்ளு (கில்லி), கிச்சு கிச்சு தாம்பாளம், போர்த் தேங்காய், கண்ணாமூச்சி, தாயம் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை விளையாடி மகிழ்கின்றனர்.
தேனி பள்ளிகளின் மாணவர்களான தர்ஷன், சுந்தர், பவித்ரா, மாயவன், விஸ்வா, சுந்தரபாண்டி, யோவன் உள்ளிட்டோர் 'கிச்சு கிச்சு தாம்பாளம்' மற்றும் 'போர்த் தேங்காய்' விளையாட்டுக்களில் மூழ்கியிருந்தனர் அவர்கள் கூறியதாவது:
'கிச்சு கிச்சு தாம்பாளம்' மணலை சிறிது குவித்து வைத்து இருபுறமும் தலா ஒருவர் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒருவர் குச்சியை மணலில் கையால் மறைத்து வைத்து 'கிச்சுக் கிச்சு தாம்பாளம்..
கீயாளி தாம்பாளம் என பாடிக் கொண்டே கையை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இதன் மூலம் குச்சி உள்ள இடத்தை எதிரே உள்ளவர் கண்டுபிடித்துவிட்டால் ஒரு புள்ளி வழங்கப்படும். இவ்வாறு இருவர் மாறிமாறி விளையாடும் போது முதலில் 10 புள்ளி பெற்றவர் வெற்றி பெற்றதாக அவரை கொண்டாடுவோம். இதனால் கவனச்சிதறல் இன்றி படிக்க முடிகிறது, என்றனர்.
திறமை வளர்க்கும் போர்த் தேங்காய்: மேலும் அவர்கள் கூறுகையில், ''முடி உரிக்கப்பட்ட வைரமான தேங்காய்களை வாங்கி வைத்திருந்து திருவிழா நேரத்தில் மக்கள் கூடும் இடங்களில் போர்த் தேங்காய் விளையாடுவது வழக்கம். ஆறு அல்லது எட்டு நபர்கள் வட்டமாக நிற்போம். தலா நான்கு தேங்காய்களை வைத்திருப்போம்.
ஒருவர் தேங்காயை நிலத்தில் உருட்டி விட மற்றவர் உருண்டு கொண்டிருக்கும் தேங்காய் மீது ஓங்கி அடிக்க வேண்டும். நிலத்தில் உள்ள தேங்காய் உடைந்துவிட்டால் அவருக்கு வெற்றி. தோற்றவர் மற்றொரு தேங்காயை பயன்படுத்துவார். இப்படியாக தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று தாக்குப்பிடிக்கும் தேங்காயின் போட்டியாளர்தான் வெற்றியாளர். அவரை அனைவரையும் துாக்கி ஆர்ப்பரித்து மகிழ்வோம், ''என்றனர்.
ஆய்வாளர் ப்ரித்தா நிலா கூறியதாவது:
'போர்த் தேங்காய்' மற்றும் 'கிச்சு கிச்சு தாம்பாளம்' குழு விளையாட்டுக்கள் என்பதால் இயல்பாகவே குழந்தைகள் மனதில் வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். உடல் ரீதியான திறன்கள் மேம்படும். இதனை விளையாடும்போது குழந்தைகளுக்கு கவனச்சிதறல்கள் இருக்காது. பொங்கல் பண்டிகை நாட்களில் இதுபோல மறைந்துவரும் 66 பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து திறன் போற்றும் மரபு பொங்கல்' என்ற தலைப்பில் விழா நடத்தி நான்கு ஆண்டாக குழந்தைகள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்,என்றார். இவர்களை வாழ்த்த 89408 84668

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement