Advertisement

வண்டியிலே சீரு வரும்... வாழத்தாரு நூறு வரும்...

சித்திரையில் உழவு, ஆடியிலே விதைப்பு, ஐப்பசியில் களையெடுப்பு, தையிலே அறுவடை, மாசியிலே வழிபாடு, விழா, கொண்டாட்டம் என்று வேளாண்மையின் உச்சங்களை தனதாக்கி கொண்டது தான் நமது தமிழர் பண்பாடு. தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரை அவர்கள் கொண்டாடும் விழாவாக இருந்தாலும் சரி, சடங்குகளாக இருந்தாலும் சரி, வழிபாடாக இருந்தாலும் சரி, அதன் அர்த்தமெல்லாம் வேளாண்மை பண்பாட்டை சார்ந்தே அமைந்திருக்கும். நிலம், நிலத்தை பண்படுத்தும் உயிரினங்களை மட்டுமின்றி, பிறந்த வீட்டு பிள்ளைகளையும் சேர்த்தல்லவா கொண்டாடி மகிழ்கிறது.

சீர் வரிசை
வேளாண்மை பண்பாடு சார்ந்து தமிழர் வாழ்வில் நடைபெறும் சீர்கள் கொஞ்சமா? நஞ்சமா? பிள்ளைச்சீர், தொட்டில் சீர், உண்டாட்டு சீர், காதுகுத்து சீர், எழு திங்கள் சீர், தெரட்டி சீர், கல்யாண சீர், தலை ஆடிச்சீர், திருவாதிரை சீர், வளைகாப்பு சீர், பொங்கல் சீர் என்று இந்தச் சீர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிறந்த வீட்டு பிள்ளைகளுக்கு பெற்ற தாயும், உடன் பிறந்தானும் தாய் மாமனும் பாசத்தோடு செய்யும் இத்தகைய சீர்களை எளிதில் புறக்கணித்துவிட முடியாது.
பிறந்த வீட்டு பெண் பிள்ளைகளுக்கு விரும்பி கொடுக்கப்படும் செல்வம் என்பதே சீதனம் ஆகி அதுவே சீர் என்ற சீர்படுத்தப்பட்ட சொல்லாக நிலைத்துவிட்டது. எல்லா சீர்களிலிருந்தும் வேறுபட்டு தனித்து நிற்பது பொங்கல் சீர்தான். ஆண் பிள்ளைகள் பிறந்த வீட்டிலேயே இருந்து அனுபவிப்பவர்கள். புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கும் இந்த கொடுப்பினை வேண்டாமா? அதனை தான் பொங்கல் சீர் ஈடுகட்டுகிறது.
என்ன காரணத்தை கொண்டு மகளை சென்று சந்திக்கலாம்? எல்லாம் விளைந்து வந்து வீட்டில் கிடக்கிறதே? வெள்ளாமையை மகள் வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டுமே என மனம் ஆவல் கொள்ளும்போது, அதற்கான சரியான தருணமாக வருவதுதான் பொங்கல். மணமான மகள்களுக்கு பொங்கலன்று கொடுப்பதற்கென்றே தாய்மார்கள் சுருக்குப் பையில் சிறுவாட்டு பணம் சேர்த்து வருவதும் உண்டு.

தலைப்பொங்கல் சீர்
எத்தனை பொங்கல் வந்தாலும் 'தலைப் பொங்கலுக்கு' தனிச்சிறப்பு உண்டு. பிறந்த வீட்டில் இருந்து எப்பொழுது பொங்கல் சீர் வரும் என்று பெண்ணின் மனம் பூரித்து கிடக்கும். சீருக்கான பொருட்களை வெண்கல தட்டுகளில் பரப்பி வைத்து பெருமையாக எண்ணி எண்ணிப் பார்ப்பது உண்டு. பிறரது கொள்ளி கண்கள் சீர் பொருட்களின் மீது படாமல் இருக்க வெள்ளை துணியால் மூடி எடுத்துச் செல்வதும் உண்டு.
புது துணிமணிகள், பொங்கல் பானைகள் (பால் பொங்கலுக்கு ஒன்று, சர்க்கரை பொங்கலுக்கு ஒன்று) பொங்கல் கரண்டிகள், தாம்பளம்.
பொங்கலுக்கு வேண்டிய பச்சரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை, கரும்புக்கட்டு, வாழைத்தார், இலைக்கட்டு, தேங்காய், மஞ்சள் கொத்து என்று சீர்வரிசை விரியும். அதைக் கொண்டு வரும் உறவுகளுக்கு தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து வைத்து வழியனுப்புவர் பிறந்தவீட்டு பெண்கள். ஆனால், இப்பொழுதெல்லாம் பொங்கல் சீர்யாவும், சத்தமின்றி மொத்த பணமாகவே கைமாறிவிடுகின்றது.
பெண்ணிற்கு திருமணம் செய்து கொடுத்து தலைப் பொங்கல் வருவதற்குள் பெண் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கும் தாய்க்குக் கொடுப்பதை போலவே பொங்கல் சீர் கொடுக்க வேண்டும். இதற்கு பெயர் தான் பூப்பொங்கல்.
தங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள் தான் என்று தாய்மாமன் சீர்களை சேர்த்து கொடுப்பதும் உண்டு. தாய்க்கும் மகளுக்கும் ஒருசேர மகிழ்ச்சியை தருவது தான் இந்த பூப்பொங்கல்.

கன்னிப்பொங்கல்
முழுநிலா அழகூட்டும் பின்னிரவு சூழலில் பருவம் அடையாத சிறுமிகளுக்கு செய்யப்படும் சடங்குதான் கன்னிப்பொங்கல்.
கன்னிப் பெண்களை வரவழைத்து அதில் ஒருவரை அலங்கரித்து கூடையில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், ஆவாரம் பூக்களை நிறைத்து, அலங்கார பெண்ணின் தலையில் வைத்து ஊரைச் சுற்றி வருவர்.
இறுதியில் அப்பெண்ணை மந்தையில் அமரவைத்து ஆவாரம் பூக்களால் சீராட்டுவர். சுற்றி வந்து பெண்கள் கும்மியடித்து பாடுவார்கள்.
இறுதியில் அந்த கன்னிப் பெண்ணை ஆற்றங்கரை, குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்று கூடையில் உள்ள பொருட்களை வைத்து வழிபட்டு ஆவாரம் பூக்களை ஆற்றில் விடுவர். கன்னிப் பெண்களுக்கு நல்ல எதிர்காலத்தை இயற்கை வழங்க வேண்டும் என்பதற்காக ஊரே சேர்ந்து நடத்துவதுண்டு.
இப்படி ஊரும் உறவுகளும் உற்சாகமாக மகிழ்ந்து திளைக்கும் கொண்டாட்டமே தமிழர் விழாவான பொங்கல் திருநாள்.
இந்த பொங்கல் சீரைப்பற்றி, ''வண்டியிலே சீரு வரும்; வாழத்தாரு நுாறு வரும் வந்த சீரும் நிலைச்சிருந்தா வமிசமும் பேரு பெறும்'' என்கிறது கிராமிய பாட்டு.

பொங்கும் சந்தோஷம்
காந்தி கிராம பல்கலை தமிழ்ப் பேராசிரியர் முத்தையா கூறியதாவது: தமிழர் பண்பாட்டை ஒருபோதும் மறக்கக் கூடாது. அதில் ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு பிறந்த வீட்டில் இருந்து கொடுக்கும் சீர்கள். தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் உழவர்களின் திருநாள், இயற்கையை கொண்டாடும் இனிய நாள் மட்டுமல்ல. அது உறவுகளை கொண்டாடும் உன்னத திருநாளும் தான். உலகம் எவ்வளவு பெரிய மாற்றம், வளர்ச்சி அடைந்தாலும் மண்ணின் பாரம்பரியத்தை நிச்சயம் பாதுகாக்க வேண்டும்', என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement