Advertisement

கிணத்து மேட்டில் கதை சொன்னது

கிராமங்களில் அந்தக் காலத்தில் பொதுக்கிணறுகள் இருந்தன. மனித உழைப்பு மூலம் கடப்பாரை, மண் வெட்டியால் பூமியை துளையிட்டு, நிலத்தடி நீரை வெளியே எடுப்பதற்கான ஆதிகாலத்தின் விஞ்ஞானம் அது. சதுரம், வட்ட வடிவங்களில் கிணறுகளை அமைத்தனர். உள்புறம் மண் சரிவை தடுக்க மணல், சுண்ணாம்பு அல்லது மணல், சிமென்ட் கலவையால் உட்பூச்சு, மேற்பகுதியில் நான்குபுறமும் தடுப்புச் சுவர், அதைச் சுற்றிலும் சதுரம், வட்டவடிவிலான மேடை, வடிகால் அமைக்கப்பட்டிருக்கும்.
வீடுகள் தோறும் கயிற்றுடன் இணைக்கப்பட்ட சிறிய இரும்பு வாளிகள் வைத்திருப்பர்.
பெண்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாளியை கிணற்றுக்குள் இறக்கி, தண்ணீர் முகர்ந்து இறைத்து பித்தளை, சில்வர் பானைகளில் நிரப்புவர். போட்டியால் வாளிகள் ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொள்வதுண்டு. வாளியில் இறைத்த தண்ணீரை தலையில் ஒரு பானை, இடுப்பில் ஒரு பானையை வைத்து சுமந்து வீடுகளுக்கு கொண்டு செல்வர். நல்ல (சுவையான) தண்ணீர் கிணறு, உப்புத் தண்ணீர் (உவர்ப்பு நீர்) கிணறு என உண்டு. உப்புத்தண்ணீர் கிணற்று நீரை பாத்திரம் துலக்க, துணிகளை சலவை செய்ய மற்றும் ஆடு, மாடுகளின் குடிநீர் தேவைக்குபயன்படுத்தினர். நல்ல தண்ணீர் கிணற்று நீரை குடிநீர், சமையலுக்கு பயன்படுத்தினர்.
கிராமங்களில் திருமணமாகி வரும் புதுமணப் பெண்ணை, தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள பொதுக் கிணற்றுக்கு பெண்கள் அழைத்துச் செல்வர்.
அவரது இரு கைகளை ஒன்று சேர்த்து குவித்து அதில் வெற்றிலைகள், பாக்கு, மஞ்சளால் நிரப்புவர். அவற்றுடன் கிணற்றின்மேல் பகுதியில் கைகளை நீட்டச் செய்து, வாளியில் இறைத்த நீரை ஊற்றுவர். சில நாட்கள்வெற்றிலைகள் கிணற்றில்மிதந்து கொண்டிருக்கும். அச்சடங்கு முறைமுடிந்த பிறகே புதுமணப் பெண்ணை அக்கிணற்றில் தண்ணீர் இறைக்க அனுமதிப்பர்.
இப்படி கிணற்று நீரை கங்கா தேவியாக கருதி வழிபடும் முறை இருந்தது. சில வீட்டுப் பெண்கள் அண்டா, பானைகளை துலக்கிக் கொண்டே சொந்தக் கதை, சோகக் கதை, ஊர்க்கதைகள் பேசுவதுண்டு.
பெண்களின் மனச் சுமையை இறக்கி வைக்கும் இடமாக இருந்தவை கிணறுகள். சில சமயங்களில் கயிறு அறுந்து கிணற்றுக்குள் வாளிகள் மூழ்கிவிடும். இளைஞர்கள் வடம் போன்ற பெரிய கயிற்றை பிறர் துணையுடன் பிடித்தவாறு கிணற்றில் இறங்குவர். தண்ணீரில்மூழ்கி நீண்ட நேரம் மூச்சடக்கி, வாளிகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பர்.
கால வளர்ச்சியின் அடுத்த கட்டமாக 'பாதாளக் கரண்டி'யை (இரும்பால் செய்த இடுக்கிவளையம்) கயிற்றில் கட்டி, கிணற்றில் இறக்கினர். அதை நான்குபுறமும் அலைபாயவிடுவர். 'வெளியே வரமாட்டேன்' எனஅடம்பிடித்து, மூழ்கிக் கிடந்த வாளிகள் 'பாதாளக் கரண்டி'யில் சிக்கிக் கொள்ளும். அவற்றை கொத்தாக வெளியேற்றுவர். அவரவர் வாளிகளை அடையாளம் கண்டு எடுத்துச் செல்வர்.
வாளிகளில் தண்ணீர் இறைப்பது பெண்களுக்கு நல்லஉடற்பயிற்சியாகவும் இருந்தது. முன்பெல்லாம் பெரும்பாலான கிராமத்து வீடுகளில் மின்சாரம், மின்விசிறி கிடையாது. கோடைகாலத்தில் இரவில் புழுக்கம், இட நெருக்கடியைத் தவிர்க்க இளைஞர்கள், முதிய வயது ஆண்கள் கிணத்து மேட்டில் (கிணற்றைச் சுற்றியுள்ள மேடை) துாங்குவது வழக்கம். பகலில் தண்ணீர் இறைக்கும் போது மேடையில் சிதறி தேங்கும்.மாலையில் வற்றிவிடும். இதனால் இரவில் இதமான குளிர்ச்சி நிலவும். அவரவர் வசதிக்கேற்ப கோரைப்பாய், துண்டு, போர்வையை விரித்து கதைகள் பேசியவாறு துாங்கிஎழும்பியதுதனி சுகமே.
முன்பெல்லாம் இரவுப் பொழுதுகளில் ஆண்கள் கிணத்து மேட்டில் ஒன்றுகூடி அரட்டை அடிப்பதும்,அரசியல் விவாதம் அனல் பறக்கச் செய்வதும் உண்டு. மக்களிடையே எழும் சிறு, சிறு சஞ்சரவுகளை தீர்க்க பஞ்சாயத்து கூடும்இடமாகவும் கிணத்து மேடு இருந்தது. வீடுகளில் மின்சார வசதி இல்லாத பள்ளி மாணவர்கள், தெருவிளக்கு வெளிச்சமுள்ள கிணத்து மேட்டில் அமர்ந்து குழு விவாதம் செய்துபடித்துவிட்டு, அங்கேயே துாங்கிய காலம் உண்டு.
டிவி, மின்விசிறிகள் மற்றும்மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்புகள் வந்தன. மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கிணத்துமேடு வெறிச்சோடி, அமைதியானது. குடிநீர் திட்டங்கள் வந்தன. போர்வெல்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நிரப்பி, தெருக்கள் தோறும் குடிநீர்குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் அமைத்தனர்.
பொதுக்கிணறுகள் கேட்பாரற்று, கடந்த கால நினைவுகளை சுமந்தவாறு காட்சிப்பொருளாக களையிழந்து நிற்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement