Advertisement

தேசம் கவர்ந்த தபேலா மங்கை - ரத்னஸ்ரீ அய்யர்

'கும்... கும்...'என நெஞ்சில் இடியாய்... இனிதாய் எதிரொலிக்கும் தபேலாவை ரசனையாய் இசைக்கும் கலைஞர்களின் உடல் பாவனைகூட ரசிகர்களை உற்சாகமாக தாளமிட வைக்கும். கச்சேரிகள், மேற்கத்திய இசை மேடையில் ஆண்கள் ஆளுமை செய்யும் இந்த இசைக் கருவியை இந்தியாவில் இசைக்கும் பெண்களின் எண்ணிக்கை அரிதிலும் அரிது. அவர்களில் ஒருவர் ரத்னஸ்ரீ அய்யர்.
கேரளாவில் வைக்கத்தில் வசிக்கிறார். இவரது மூதாதையர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தபேலாவில் ரத்னஸ்ரீ அய்யரின் விரல்கள் நர்த்தனம் செய்வதை காண, விழிகள் பல வேண்டும். அதிர்வுகள் செவிகளில் தேனாக பாயும். தமிழகத்தின் சில மாவட்டங்களில் இவரது நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும், வட மாநிலங்களில் இவரது இசை நிகழ்ச்சிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு உள்ளது.
இந்துஸ்தானி, கர்நாட்டிக், கஜல், லைட் மியூசிக் என அனைத்து மேடைகளிலும் தபேலா வாசிப்பதை சவாலாக ஏற்று, இக்கலை பற்றி டாக்டர் பட்டத்திற்கான ஆய்வை செய்து வரும் ஒரே பெண் கலைஞர் இவர்.
ஆஸ்திரியா, குவைத், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தபேலா மூலம் இந்துஸ்தானி கிளாசிக்கல், கர்நாட்டிக் கிளாசிக்கல் இசையை வளரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது, இவரது இசைப்பயணம்.

இது பற்றி மனம் திறக்கிறார் ரத்னஸ்ரீ அய்யர்...
சிறுவயதில் வைக்கத்தில் செல்லப்பன் மாஸ்டரிடம் தபேலா கற்றேன். அவர் தான் இந்த இசை உலகில் பல்வேறு நிலைகளில் என்னை வளர்த்த குரு. எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி முடித்த பின் ஐதராபாத்தில் தபேலாவில் டிப்ளமோ பட்டம் பெற்றேன். மும்பையில் அகில பாரதிய கந்தர்வ மகா மண்டலம் மற்றும் சிவாஜி பல்கலையில் தபேலா முதுகலை படித்தேன். இசை பேராசிரியர் மனோகர் கங்கர், உசந்த் பயாங்கான் மற்றும் சில இசை மேதைகள் வழிகாட்டினர்.
தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் வடஇந்திய கலைஞர்களான சைலேஷ் கவத், அருண் கசாங்கர், வர்ஷா நானே, மவுவ்மித்ரா, சவானி சென்டேர், உஸ்நாத் பைஸ்க்கான், அபிராதித்த பானர்ஜி, என பலரது கச்சேரிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழகத்தில் டி.வி.கோபாலகிருஷ்ணன், ராம் பரசுராம், கன்னியாகுமரி, ஹரிதாஸ் மற்றும் பலருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
தென் மாநிலங்களில் தபேலா வாசிப்பதை முழுநேர தொழிலாக செய்வது நான் மட்டும் தான். வடமாநிலங்களில் 4 பேர் உள்ளனர். தனி தபேலா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்.
ஆரம்ப நாட்களில் ''தபேலா ஆண்களுக்கானது. பெண்ணான உனக்கு தபேலா வாசிப்பு தேவையா'' என பலரும் கேட்டிருக்கிறார்கள். சாஸ்திர ரீதியாக தபேலா படிப்பதுடன், கடினமான பயிற்சி இருந்தால் இசைத் துறையில் முத்திரை பதிக்கலாம். தபேலா வாசிப்பை ஒரு முழு நேரத் தொழிலாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறியும் இருக்கிறது. தபேலா இசை அறிவியலை தேசம் முழுவதும் மக்கள் மனங்களில் எடுத்து செல்வேன், '' என்கிறார்.
வாழ்த்த rethu_kala@yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement