Advertisement

மதுரையில் கல்யாணம் ஜப்பானில் பொங்கல்! - ஜாம் ஜாம் ஜமாய் ஜப்பான் ஜோடி!

'ஒமக சீயா வாகி யாகா... வாகி யாகா சீயோ மெக சாயா'... ஜப்பான் சினிமால கூட இப்படி ஒரு பாட்டு வந்திருக்காது. தமிழ் சினிமால தான்ய்யா, வாய்க்குள்ள நுழையாத வார்த்தைகளை வைச்சு பாட்டு எழுதுறாங்க...
ஆனால், போன வாரம் மதுரையில் திருமணம் செய்து கொண்ட ஜப்பான் பெண் சிஹாரு, அக்மார்க் தமிழ் பேசியதை பார்த்த போது, நம் மனசாட்சி... 'நீங்கெல்லாம் என்னிக்காவது இப்படி சுத்தமான தமிழ் பேசி இருக்கீங்களா'ன்னு, மண்டையில நறுக்குன்னு ஒரு கொட்டு கொட்டுச்சு.
நம்மூர் கல்யாண பொண்ணு மூக்கும், முழியுமா அழகா இருக்கும்... ஜப்பான் கல்யாண பொண்ணுக்கு மூக்கு ஏது, முழி ஏதுன்னு நினைச்சு தான் அங்கே போனோம்... ஆனால், பொண்ணு சும்மா விளக்கி வைச்ச நம்மூர் குத்துவிளக்கு மாதிரி இருந்துச்சு. காந்த கண்ணு, கத்தி மூக்கு போன ஜென்மத்துல தமிழ்நாட்டில் பிறந்திருக்கும் போல...
மணமேடையில் வெட்கத்தில் தலை குனிந்தபடி இருந்த மணமகள் சிஹாருவுக்கு, மணமகன் யூட்டோ, கெட்டி மேளம் முழங்க தாலி கட்டினார். அதை பார்த்த நம் கண்களில் லேசா ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அப்படியே மலர்ந்த மலரா, முழு நிலவா நடந்து வந்த சிஹாரு மனம் திறந்தார்... ''ஜப்பானுக்கும், தமிழுக்கும் மொழி நடை ஓரளவுக்கு ஒரே மாதிரி தான் இருக்கும். அதனால தான் நான் தமிழை ஈசியா கத்துக்கிட்டேன். ஒரு முறை ஜப்பானில் வசிக்கும் மதுரையை சேர்ந்த வினோதினி, தமிழ் கற்று கொடுப்பதாக ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து இருந்தாங்க. அப்புறம் அவங்களை சந்தித்து தமிழ் கத்துக்க ஆரம்பித்தேன். இப்போ எனக்கு தமிழ் பேச, எழுத, படிக்க தெரியும். மதுரைக்கு நான் பல முறை வந்து இருக்கேன்.
பாரம்பரியம் பேசும் நகரமாக திகழும் மதுரையில் கல்யாணம் பண்ணனும்னு விரும்பினேன். என் மாமா யூட்டோ குடும்பமும் சம்மதம் சொன்னாங்க, உடனே குடும்பத்தோட கிளம்பி மதுரைக்கு வந்தோம். தமிழ் முறைப்படி ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி ஜமாய்ச்சுட்டோம். அடுத்து ஜப்பானில் தைப் பொங்கல் கொண்டாடப் போறோம். அடுத்த முறை கண்டிப்பா ஜல்லிக்கட்டு பார்க்க வந்திருவேன். ஜப்பான் பொண்ணு நானே தமிழ் பேசும் போது, தமிழ்நாட்டில தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுறது கஷ்டமா இருக்கு. தாய்மொழி நம்ம தாய் மாதிரி அதை எப்பவும் மறக்கவே கூடாது'', என்றார்...
சிஹாருவின் தோழி வினோதினி கூறியதாவது: ஜப்பானில் என் கணவர் வெங்கடேஷ் குமார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நானும் அவருடன் ஜப்பானில் வசிக்கிறேன். என்கிட்ட தமிழ் கத்துக்க வந்த சிஹாரு என் உயிர் தோழியாகிவிட்டார். அவர் கல்யாணத்தை நாங்கள் தான் நடத்தி வைச்சோம். மெகந்தி, மோதிரம் மாற்றுவது, விருந்து என எல்லா ஏற்பாடுகளையும் என் மாமியார் செல்லம்மாள் மற்றும் குடும்பத்தினர் தான் பண்ணினாங்க.
சிஹாரு தன் 'ஸ்மார்ட் போன் ''லாங்குவேஜ் ஆப்ஷன்'ல கூட தமிழை தான் வைச்சிருக்காங்க. அவங்க பரதம் ஆடுவாங்க, புல்லாங்குழல் வாசிப்பாங்க, என்றார்.
'முழுசா சந்திரமுகியா மாறி இருக்கிற கங்காவை பாரு'ன்னு ஒரு டயலாக் இருக்குல்ல, அதே போல் 'முழுசா தமிழ் பொண்ணாக மாறின ஜப்பான் பொண்ணு சிஹாருவை பாரு'ன்னு சொல்வோம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement