Advertisement

மயில்சாமி அண்ணாத்துரையின் பொங்கலும், திங்களும்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த பலர் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் பேசப்படுவர் மயில்சாமி அண்ணாத்துரை.
சந்திராயன் 1 மற்றும் 2, மங்கள்யான் செயற்கைகோள்களை ஏவி சர்வதேசத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர். விண்வெளி ஆராய்ச்சியில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 'பத்மஸ்ரீ ' வழங்கி கவுரவித்துள்ளது. நான்குக்கும் மேற்பட்ட டாக்டர் பட்டங்கள் உட்பட சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்து வருபவர்.
சந்திரயான் 1 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சார்பில் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையையும் பெற்றது. ஸ்ரீஹரிகோட்டாவில்
எஸ்.வி.எல்.வி., சி40 செயற்கை கோள் ஏவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இஸ்ரோ சேட்டிலைட் மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, பொங்கல் நினைவுகள் குறித்து தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...
கொங்கு மண்டலத்திலுள்ள பொள்ளாச்சி கோதவாடி தான் சொந்த கிராமம். அங்கு தான் துவக்க பள்ளியை படித்தேன்.அப்பா மயில்சாமி, அம்மா பாலசரஸ்வதியம்மாள், தம்பிகள் மோகனசுந்தரம், பாலசுப்பிரமணி, சகோதரிகள் மணிமேகலை, மகாலட்சுமி, நான் வீட்டில் ஏழு பேர். இதனால் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. படிக்கிற காலத்தில் ஜனவரி பிறந்து விட்டாலே பொங்கல் பண்டிகை வரும் என்பதால் குஷியாகி விடுவோம்.
எங்கள் பகுதியில் போகி, பூ, மாட்டு, பட்டி பொங்கல் என ஐந்து நாட்களுக்கு இந்த பண்டிகை கொண்டாடப்படும். அப்போதெல்லாம் ஐந்து நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை. இதுவும் குஷிக்கு மற்றொரு காரணம். மாட்டுப்பொங்கலன்று தேர்த் திருவிழா நடக்கும். ஊர் மலையிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு குடும்பம், குடும்பமாக சென்று விடுவோம். உறவுகளும் கூடுவதால் கூட்டுக்குடும்பமாக கிண்டலும், கேலியுமாக பொங்கல்
கொண்டாடியது இன்றைக்கும் மறையாத சுவடுகளாக உள்ளன. பூ பொங்கலன்று ஊரிலுள்ள இளம்பெண்கள் பூப்பறித்து பொங்கல் வைப்பர். கும்மியடித்து சிறப்பு வழிபாடுகளை நடத்துவர். சிறுவர்களாகிய நாங்கள் அவர்களுக்கு கடலைமிட்டாய்கள் வழங்குவோம்.
எங்கள் பகுதியில் மாடு விரட்டு நடக்கும். கோதவாடி கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் மணல் பாங்கான இடத்தில் மாடுகளை அவிழ்த்து விரட்டுவர். அவற்றை அடக்க காளையர்களும் முயலுவர். சிறுவனாக இருந்த போது இதை பார்த்து விட்டு அங்கு விற்கும் களிமண்ணாலான மாடுகளை வாங்கி வைத்து கொள்வேன். அதை வைத்து விளையாடுவதால் வீட்டிற்கு வருவதற்குள் உடைந்து விடும். பிறகு மீண்டும் களிமண் மாடு கேட்டு அடம் பிடித்த காலமும் உண்டு. இன்றும் கோவை பேரூரில் வசிக்கும் தங்கை மகாலட்சுமி வீட்டில் மாடுகள் வளர்க்கின்றனர்.
நம் பாரம்பரியத்தின் அடையாளம் இந்த மண்ணும், மொழியும் தான். பொங்கல் கூட மண்ணையும், மொழியையும் சார்ந்தது தான். இதனால் பொங்கலையும், திங்களையும் (சந்திரயான் விண்கலம்) மறக்க இயலாது.
தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி., சி ௪௦ மூலம் 31 செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, கொரியா, ரஷ்யா நாடுகளை சேர்ந்தவை. மூன்றை நம் நாடு ஏவுகிறது. இதில் காட்ரோசாட் செயற்கைகோள் 500 கி.மீ., துாரத்திலிருந்து மிக துல்லியமாக பூமியை படம் எடுத்து அனுப்பும்,
என்றார்.
இவரை வாழ்த்த mylswamy.annadurai@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement