Advertisement

இத்தாலியில் இனி நம்மூர் சமையல்!

ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்திற்கு ஏற்றவாறு உணவுகள் மாறுபட்டாலும், தமிழர்களின் பாரம்பரிய உணவிற்கு மயங்காதோர் யாரும் இல்லை. இங்கு சமைக்கப்படும் உணவுகளின் ருசியோ, கடல் கடந்து, வான் கடந்து பெருமையே சேர்க்கிறது.
இத்தாலியில் இருந்து 22 பேர் குழு இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்தது. இதில் தமிழ்நாட்டில் சென்னைக்கு வந்தபோதே மதுரையை பார்த்தே ஆகவேண்டும் என்பது அவர்களின் ஆசை. ஆசையை நிறைவேற்ற மதுரை வந்த குழுவினர் இங்குள்ள சமையல் ருசியில் மயங்கி, இந்த சமையலை கற்றுக்கொண்டு தான் நாடு திரும்ப வேண்டும் என சபதம் எடுத்தனர். இணையதளத்தில் சமையற்கலை நிபுணரை தேட, கிடைத்தது சனாஸ்ரீ கிச்சன் ஸ்டுடியோ. 'உங்கள் ஊரின் உணவு வகைகளை இன்று ஒரு நாள் முழுக்க சொல்லித்தர முடியுமா' என்றனர். உரிமையாளரான சனாஸ்ரீயும் ஓகே சொல்ல, கிளம்பினர் மதுரை கோமதிபுரத்தில் உள்ள அவரது இருப்பிடத்திற்கு.
இனிப்பில் ஆரம்பிப்பது தானே தமிழர்களின் கலாசாரம். முதலில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தது ரவா கேசரி. ரவா கேசரியின் செயல் விளக்கங்களை கூறி, அவர்களை வைத்தே செய்தும் காண்பிக்க அசந்து போன இத்தாலியர்கள் இனிப்பின் சுவையில் தங்களை மறந்தனர்.
அடுத்ததாக தயாரானது உளுந்த வடை. அதையும் ஒரு பிடிபிடித்தனர்.
பிரமாதமான டிஷ்கள் என ஆண்களும் பெண்களும் சிலாகித்தனர். ஒருபுறம் சுவையை ருசித்தாலும், மறுபுறம் குறிப்பு எடுத்து கொள்ளவும் தவறவில்லை. அடுத்த டிஷ் செட்டிநாடு சிக்கன் ரெடி ஆனது. முதலில் அதன் நிறத்தை பார்த்து பயந்தனர். இவ்வளவு சிகப்பாக உள்ளதே ரொம்ப காரமாக இருக்குமோ என ஒருவர் கேட்க, சாப்பிட்ட பின் சொல்லுங்கள் என கூறினார் சனா. அதில் இருந்த தைரியமான ஒருவர் சிக்கனை ருசித்து, பிரமாதம் என கத்தியே விட்டார். அதன்பின் ஒவ்வொருவராக சாப்பிட்டனர். அடுத்தது மட்டன் டிஷ் செய்யலாமா என கேட்ட நிபுணருக்கோ அதிர்ச்சி, வெஜிடேரியன் டிஷ் வேண்டும் என ஒரு சிலர் அடம் பிடித்தனர்.
மதுரை என்றாலே மல்லிகை பூவும், மல்லிகை பூவை போன்ற இட்லியும் தானே. தயாராக வைத்திருந்த மாவை இட்லி சட்டியில் உள்ள குழிகளுக்குள் ஊற்ற அவர்களுக்குள்ளே போட்டியே உருவானது.
ஒரு புறம் வெஜிடேரியன் செய்தாலும், மறுபுறம் மட்டன் சுக்காவும் ரெடியானது.
இரண்டு வகையான டிஷ்களும் ரெடியான பின்பு அனைவர் முகத்திலும் எப்போது சாப்பிட போகிறோம் என்ற ஆவல் அதிகரித்து கொண்டே சென்றது. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னியுடன், சாம்பார் என சைவ பிரியர்களுக்கும், அசைவ பிரியர்களுக்கு இட்லியுடன் மட்டன் சுக்காவும் காத்திருக்க, அதனையும் மிச்சம் வைக்காமல் உண்டு மகிழ்ந்தனர் இத்தாலியர்கள்.
அதனை தொடர்ந்து பனீர் பட்டர் மசாலா, பனீர் புலாவ் என செய்து சாப்பிட்ட பின், அனைத்தையும் குறிப்பு எடுத்தனர். சமையலின் சுவை குறித்து அவர்கள் கூறியதாவது,
தீப், இத்தாலி: மதுரை ஜல்லிகட்டு, மீனாட்சி அம்மன் கோயில் வரிசையில் பிரபலம் இங்குள்ள உணவு வகைகளும் தான். ஆனால் சமையலில் இத்தனை வகையா என வியந்து விட்டேன். இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
நான்சி, இத்தாலி: எங்கள் நாட்டில் 50 முதல் 60 வகையான மாமிச உணவு வகைகளே உள்ளன. ஆனால் இங்கு சிக்கனில் மட்டும் 300க்கும் அதிகமான உணவு வகைகள். அங்கு சிக்கன் உணவுகள் பேக்டரியில் தயாராகி பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து இருக்கும். இங்கு தான் வெட்டப்பட்ட கோழியின் துண்டுகள் பிரஷ்ஷாக பார்க்கிறேன்.
உணவின் சுவை ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதில் சந்தேகமில்லை. இங்கு கற்ற டிஷ்களை எங்கள் நாட்டில் செய்து அசத்தப்போகிறேன்.
லைனா, இத்தாலி: எங்களது நாட்டில் விழாக்காலங்களிலும், சாதாரண நாட்களிலும் ஒரே வகை உணவுகள் தான். ஆனால் இங்கோ கல்யாணம் என்றால் ஒரு வகை உணவு, பொங்கல் பண்டிகை என்றால் ஒரு வகை உணவு, தீபாவளி பண்டிகை என்றால் ஒரு வகை உணவு, சாதாரண நாட்களுக்கு ஒரு வகை உணவு என விதவிதமாக செய்வதை சமையல் கலை நிபுணர் கூறும்போதே அசந்து விட்டேன்.
சனாஸ்ரீ : திடீரென்று அலைபேசி ஒலிக்க, அதில் பேசியவர் இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்தோம். உங்கள் ஊரின் சமையல்கள் பற்றி சொல்லித்தாருங்கள் என கேட்டார்.
நானும் எவ்வளவு பேர் வந்து இருக்கீங்க, எத்தனை வகையான உணவு வகைகள் சொல்லித்தர வேண்டும் என கேட்க, எல்லா உணவு வகைகளும் செய்து காண்பிக்க முடியுமா என்றனர். வந்தவர்களை ஏமாற்ற மனசு இல்லாததால் முடிந்த அளவு விதவிதமான உணவுகளை செய்தும், செயல்முறை அளித்தும் உள்ளேன்,என்றார்.
தமிழக சமையலின் வாசம்,இனி இத்தாலியிலும் வீசட்டும்!
சமையல் குறிப்பிற்கு நீங்களும் அழைக்கலாம் 77088 65775

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement