Advertisement

ஒரு வீரனின் வீரக்கனவு

காலங்களை கடந்து இன்றும் தொடர்ந்து வரும் தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு 'ஏறு தழுவுதல்' என அழைக்கப்பட்டது. ஏறு எனும் சொல் காளையை குறிக்கும். 'காளையை அடக்கி கன்னியை கைப்பிடிக்கும் கட்டிளங் காளையர் பற்றிய வீரக்கதைகள் ஏராளம்.
கண்கள் சிவக்க... சினம் கொண்ட காளை வாலை முறுக்கி சிலிர்க்கும்.
அருகில் வரும் காளையரை முட்டிப்பந்தாடும். காளையின் திமிலை பிடித்து தழுவி சாய்க்கும் வீரத்தை, ''எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்,'' என ஏறு தழுவும் களக்காட்சி 'முல்லைக்கலி' இலக்கியத்தில் அழகாக சொல்லி வைக்கப்பட்டுள்ளது. போர்க்களத்திற்கு நிகராக ஜல்லிக்கட்டுக்களம் விரிவடைகிறது.
''காளையின் கொம்புகளை கண்டு அஞ்சுபவனை மறு பிறப்பிலும் ஆயர் பெண்டிர் விரும்ப மாட்டாள்,'' என முல்லைக்கலி வியம்புகிறது.
தான் போராடுவது மனிதனுடன் அல்ல; சினமூட்டப்பட்ட... ரோஷமூட்டப்பட்ட... ஒரு முரட்டுக்காளையுடன் என்பதை வீரன் ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் முன்நிற்க வேண்டும். ஒத்தைக்கு ஒத்தை போர்க்களமான ஆடுகளத்தில் காளைக்கும், மாடுபிடி வீரனுக்கும் இடையே நடக்கும் வீரத்தின் ஒட்டு மொத்த வடிவமாக சிலிர்த்திடும் காட்சிக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் தான் 'வாடிவாசல்'.
திமிலை பிடித்த வீரனை வீழ்த்த துள்ளிக்குதித்தும், எகிறி குதித்தும், இரட்டை பாய்ச்சலில் ஆகாயத்தில் பாய்ந்தும் ஆக்ரோஷமாக போக்கு காட்டும் காளையின் முரட்டு பிடிவாதத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திமிலின் மீது இறுகப்பற்றிய பிடியை தளர்த்தும் வீரனை களத்தில் உருட்டி விட்டு சினத்தை அடக்கி கொள்ளும் அந்த சினம் கொண்ட காளை. சங்க காலம் தொட்டு ஜல்லிக்கட்டு இணையற்ற வீரமாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.கோயில் காளை இறப்புக்கு பின், கோயில் எழுப்பி வழிபாடும் நடத்தும் பழக்கம் தொன்று தொட்டு நடக்கும் பாரம்பரியம். கோயில் காளை ஊருக்குள் சாதாரணமாக வலம் வரும். காலில் சலங்கை கட்டி விட்டால் போதும், ''ஜல்லிக் கட்டுக்கு துள்ளிக்கிட்டு போறேன்,'' என காளைக்கு கம்பீரம் தலைதுாக்கும்.
பாரம்பரியமாக காளை வளர்ப்போர் தங்களின் அங்கமாகவே கருதுகின்றனர்.
சத்தான உணவு வழங்கி, நீச்சல் பயிற்சி அளித்து, ஜல்லிக்கட்டுக்காக ஆண்டு முழுவதும் தயார்படுத்துகின்றனர். முரட்டுக்காளையை அழைத்து செல்வதே ஒரு அழகு தான். இதற்காக 1,500 ரூபாய் மதிப்பில் பல வண்ண நுாலினால் தயாரிக்கப்பட்ட முரட்டுக்கயிற்றை பயன் படுத்துகின்றனர். வாடிவாசல் முன் காளையை மடக்கும் மாடுபிடி வீரர்கள், வீரர்களுக்கு 'அல்வா' கொடுக்கும் காளைகளை தேர்வு செய்ய நடுவர் குழு வாடிவாசல் மீது அமர்ந்திருப்பர். தங்களின் கழுகு பார்வையால், பிடி மாடு எது? மாடு பிடி வீரர் யார்? என நொடிப் பொழுதில் துல்லியமாக கணித்து விடுவர்.
பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி தலைவர் கார்த்திகைராஜன் கூறுகையில், ''வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் காளையின் திமிலை பிடித்து எல்லைக்கோடு (15 மீட்டர்) வரை செல்லும் வீரர் மாடுபிடி வீரர் ஆவார்.
அவருக்கான பரிசுகளை அவர் அள்ளி செல்லலாம். திமிலை பிடிக்கும் வீரருடன் காளை, மூன்று முறை எகிறி குதிக்கும்போது பிடி தளர்ந்து, வீரர் கீழே விழுந்து விட்டால் 'பிடி மாடு அல்ல' என முடிவு செய்யப்படும். இதன்படி மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்,'' என்றார்.
மதுரை பொந்துகம்பட்டி முத்தாலம்மன் கோயில் காளை 2009 மே 1ல் இறந்தது. கோயில் வளாகத்தில் காளை அடக்கம் செய்யப்பட்டது.
அம்மனை, காளை வணங்கிடுவது போல் சிலை அமைக்கப்பட்டது. அம்மனுக்கு தரப்படும் அனைத்து பூஜைகளும் காளைக்கும் செய்விக்கப்படுகிறது. கோயில் காளைக்கு சிலை அமைத்து வழிபடும் உலகின் முதல் கிராமம் பொந்துகம்பட்டி தான்.
பொந்துகம்பட்டி காமாட்சியம்மன் கோயில் பூஜாரி ஆதிரமிளகி கூறுகையில், ''இக்காளை மனிதன் போல் ஊருக்குள் உலா வரும். கயிறு கட்டினால் போதும், எங்கிருந்து தான் கோபம் வருமோ தெரியாது; ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பந்தாடும்.
ஜல்லிக்கட்டு முடிந்ததும் கொம்பில் கயிறு விழுந்தவுடன் நடந்தே கோயிலுக்கு வந்து விடும். இக்காளையை சிவன் போல் வழிபடுகிறோம்.
மே 1ல் முத்தாலம்மன், காளை மணிமண்டபத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது,'' என்றார். பாலமேடு மாடுபிடி வீரர் சோணை, ''சோணைச்சாமி குல தெய்வத்திற்கு காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறேன். ஜல்லிக்கட்டு அன்று உணவு உண்ணாமல் காளைகளுடன் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை விளையாடுவதுண்டு.
வெறும் தண்ணீரும், நெல்லிக்காயும் தான் உணவு. பசிக்காது. இதுவும் தெய்வ செயல் தான் என கருதுகிறோம். காளை இல்லையேல் நாங்கள் இல்லை.
காளையும், எங்கள் வீட்டின் பிள்ளைகள் தான்,'' என்றார் உருக்கமாக... அண்ணாமலை கூறியதாவது, ரூபாய் பத்தாயிரம் செலவு செய்து தஞ்சாவூரிலிருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பித்தளை, கால் சலங்கை, கழுத்து பட்டையை பயன்படுத்துகிறோம், என்றார். தமிழரின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு பாரம்பரியமாக நடந்திட இயற்கை அன்னையை வணங்குவோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement