Load Image
dinamalar telegram
Advertisement

கடவுளின் உணவு

பெருங்காயம்
ஆங்கிலப் பெயர்: 'அசஃபோட்டிடா' (Asafoetida)
தாவரவியல் பெயர்: 'ஃபெருலா அசஃபோட்டிடா' (Ferula Asafoetida)
தாவரக் குடும்பம்: 'ஏபியாசியே' (Apiaceae)
வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil's Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods)
வேறு பெயர்கள்: அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம் (தமிழ்), காயம் (மலையாளம்), இங்கு (இந்தி), இன்குயா (தெலுங்கு), இன்கு (கன்னடம்)

சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயச் செடியின் தாயகம் 'பெர்சியா' (Persia) (ஈரான்). 2 - 3 மீட்டர் உயரம் வரை செடியாகவும் குட்டை மரமாகவும் வளரும். இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம்.
இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சள் நிறம். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாக இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு, பழுப்பு நிறச் சாறு இருக்கும். வேர்கள் கேரட் வடிவத்தில் கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன.
வளர்ந்த 4 ஆண்டுகளில் செடியில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக, வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசையை பெறலாம்.
பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் கூட்டுப் பெருங்காயத்தில், கருவேலம் பிசின் (Gub Arabic), கோதுமை, மைதா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பெருங்காயம் வாங்கும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்று அச்சிட்டிருப்பார்கள். பெருங்காயத்தில் நிறைய கலப்பட வகைகளும் வருகின்றன. இவை உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பவை.
ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும் குணம் கொண்டது. செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல் போன்ற பல மருத்துவ குணம் உடையது. சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் மென்மையான சுவையையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.
- அ.லோகமாதேவி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement