இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 1370 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 2017 ஆகஸ்டு மாதத்தில் 1370 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் சேவைகள் இறக்குமதி 866 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. பாரத ரிசர்வ் வங்கி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
சேவைத் துறையின் பங்கு
சேவைகள் ஏற்றுமதியில் பயண ஏற்பாடு, போக்குவரத்து, கட்டுமானம், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள், நிதிச் சேகைவள், அறிவுசார் சொத்துரிமைப் பயன்பாட்டிற்கான கட்டணங்கள், தொலைத் தொடர்பு, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்கு ஏறக்குறைய 55 சதவீதமாக உள்ளது.
பாரத ரிசர்வ் வங்கி 2011 ஜூன் மாதத்தில் இருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. 2011 ஜூன் 15ம் தேதி அன்று முதல் முறையாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேவைகள் வர்த்தகம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் சுமார் 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது.
வர்த்தக உபரி
நம் நாட்டில் சரக்குகள் ஏற்றுமதியைப் பொருத்தவரை வர்த்தகப் பற்றாக்குறை (இறக்குமதிக்கும் + ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) நிலவுகிறது. அதாவது, ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. அதே சமயம், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியைக் காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக உள்ளதால் பெரும்பாலும் அந்தப் பிரிவில் வர்த்தக உபரி காணப்படுகிறது.
2017 ஆகஸ்டு மாதத்தில் 1370 கோடி டாலருக்கு சேவைகள் ஏற்றுமதி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.4 சதவீத வளர்ச்சியாகும். இதே காலத்தில் சேவைகள் இறக்குமதி 7.5 சதவீதம் குறைந்து 866 கோடி டாலராகக் குறைந்துள்ளது. ஆக, இப்பிரிவில் 504 கோடி டாலர் அளவிற்கு வர்த்தக உபரி ஏற்பட்டுள்ளது. சென்ற 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அது 533 கோடி டாலராக இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கியின் அண்மைக் கால ஆய்வறிக்கை ஒன்றில் இந்த புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக் கொள்கையை மத்திய அரசு மறு ஆய்வு செய்துள்ளது. விரைவில் வெளிவர உள்ள இந்த கொள்கையில் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதிக்கான புதிய இலக்கு அறிவிக்கப்படும் என்றும், ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய சலுகைகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2017-2018 நிதி ஆண்டில் ஆகஸ்டு வரையிலான முதல் ஐந்து மாதங்களில் 6664 கோடி டாலருக்கு சேவைகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 1.1 சதவீத வளர்ச்சியாகும். இதே காலத்தில் சேவைகள் இறக்குமதி 1.7 சதவீதம் குறைந்து 3829 கோடி டாலராக உள்ளது. எனவே வர்த்தக உபரி 2832 கோடி டாலராக உள்ளது. இது 5.3 சதவீத முன்னேற்றமாகும்.
சரக்குகள் ஏற்றுமதி
கடந்த செப்டம்பர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி, மதிப்பு அடிப்படையில் 2861 கோடி டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 25.67 சதவீதம் அதிகமாகும். ஆகஸ்டு மாதத்தில் ஏற்றுமதி 2381 கோடி டாலராக இருந்தது.
செப்டம்பர் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 3760 கோடி டாலராக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 3183 கோடி டாலராக இருந்தது. ஆக இறக்குமதி 18.09 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிய இலக்குகள்
இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம், நடப்பு 2017-2018ம் நிதி ஆண்டிற்கான சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இல்கை 50500 கோடி டாலராக நிர்ணயித்துள்ளது. இதில், சரக்குகள் ஏற்றுமதி 32500 கோடி டாலராகவும், சேவைகள் ஏற்றுமதி 18000 கோடி டாலராகவும் இருக்கும் என இச்சங்கம் தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!