3ஆம் நூற்றாண்டிலேயே பூஜ்ஜியத்தைப் பயன்படுத்திய இந்தியர்கள்
மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே இந்தியர்கள் பூஜ்ஜியத்தை பயன்படுத்தியது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு 8ம் நூற்றாண்டில் தான் இந்தியர்கள் பூஜ்ஜியத்தை பயன்படுத்தினார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன. புதிய கண்டுபிடிப்பு மூலம் இப்போது கூறப்படுவதை விட 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்தியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1881-ஆம் ஆண்டு இப்போது பாகிஸ்தானில் உள்ள பக்சாலி பகுதியில் இருந்து ஓலைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை 1902ஆம் ஆண்டு பிரிட்டனின் போட்லியான் நூலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதில் பல இடங்களில் பூஜ்ஜியம் பயன்படுத்தப்பட்டிருந்தது. முன்பு இந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இது 8 முதல் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஓலைச்சுவடியை கார்பன் டேட்டிங் (கதிரியக்க கார்பன் மூலம் காலத்தை கணிப்பது) முறையில் மறுஆய்வு செய்தனர். அப்போது இந்த ஓலைச்சுவடிகள் 3ம் நூற்றாண்டு அல்லது 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பக்சாலி ஓலைச்சுவடிகள் இந்தியாவின் பழமையான கணிதக் குறியீடுகள் அடங்கிய ஆவணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அதில் இப்போது பயன்படுத்துவது போல பூஜ்ஜியம் பயன்படுத்தப்படவில்லை. பெரிய அளவிலான புள்ளியாக பூஜ்ஜியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் அது இப்போது பயன்படுத்தும் வடிவை அடைந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் சுவரில் பூஜ்ஜியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் பழமையான பூஜ்ஜியம் என்று அங்கீகரிக்கப்பட்டது. இப்போது, அந்த காலகட்டத்துக்கு முன்பே இந்தியர்கள் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
பண்டைய காலத்தில் மயன் இனத்தவரும், பாபிலோனியர்களும் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எனினும், பக்சாலி ஓலைச்சுவடிகள் அவர்களது காலத்துக்கு முற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய கணிதவியல் வரலாற்றில் மட்டுமின்றி, உலக கணிதவியல் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக பேராசிரியர் மார்க்கஸ் டூ சௌடாய் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!