Load Image
Advertisement

சொர்க்கம் நரகம்!

“சினிமாவைக் கண்டுபிடிச்சது யாரு?” என்று கேட்டான் பாலு.
“குறிப்பா ஒருத்தர் பெயரைச் சொல்ல முடியாது பாலு. தொடர்ந்து பல ஆண்டுகள் ஒவ்வொருத்தர் ஓர் அம்சத்தைக் கண்டுபிடிச்சுக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்தாங்க. ஓரளவு முழுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கினவர் தாமஸ் ஆல்வா எடிசன். அதனால் அவர் பெயரைச் சொல்றாங்க. சினிமாவைப் பொதுமக்கள் முன்னால் போட்டுக் காட்டி ஒரு தொழிலா ஆக்கினவங்க லூமியர் பிரதர்ஸ். அதனால் அவங்க பெயரையும் சொல்றாங்க. இன்னிக்கு பயன்படுத்தற டிஜிட்டல் தொழில்நுட்பம் அவங்க உருவாக்கினதுலருந்து நிறைய வேறுபட்டிருக்கு. அவங்க படச் சுருளை உருவாக்கவே ரொம்ப பாடுபட்டிருக்காங்க. முதல்ல படத்தை ஒரு ஃபிலிம்ல பதிக்கணும். பதிச்ச ஃபிலிமை ரசாயனங்கள பயன்படுத்தி, அதுல நிலைக்க வைக்கணும். பிறகு நெகட்டிவ் உருவாக்கணும். அதுலருந்து பாசிட்டிவ் ஃபிலிம் எடுக்கணும். இப்படி பல கட்டங்கள்ல இருந்தது, இன்னிக்கு ஃபிலிமே இல்லாம போயிடுச்சு. எல்லாம் டிஜிட்டல்.” என்றார் ஞாநி மாமா.

“இப்ப இருக்கறது இன்னும் சுலபம்தானே?” என்றேன்.
“ஒரு விதத்துல சுலபம். இன்னொரு விதத்துல இதுவும் இன்னும் கடுமையான தொழில்நுட்பம் தேவையான விஷயம் ஆயிருச்சு. படப்பிடிப்புக்கு அப்புறம் செய்யற போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எல்லாம் இன்னும் துல்லியமா ஆயிருக்கு. ஒவ்வொரு பிரேமையும் ஒரு பெயிண்டிங் மாதிரி செய்ய முடியும். செய்யறது நுட்பமான வேலை. எல்லாத்துக்கும் மேல இப்ப படத்தைப் பாதுகாத்து வெக்கறது இன்னும் கடினமாயிருச்சு. ஒரு ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனா எல்லாம் போச்சு. முன் ஜாக்கிரதையா பல ஹார்ட் டிஸ்க்ல சேமிச்சு வைக்கணும். முன்பு ஃபிலிம் ரீலை பத்திரமா பாதுகாத்து வைக்கணும். தீபிடிச்சா எரிஞ்சுபோயிடும்.”
“சினிமாவை எதுக்காகக் கண்டுபிடிச்சார் எடிசன்?”
“கண்டுபிடிப்புகள்ல எதுக்காக என்ற காரணம் எப்போதும் இருக்கணும்னு அவசியம் இல்ல. ஓர் ஆள் நீந்திக்கிட்டிருக்கறதை முதல்ல ஓவியமா வரைஞ்சாங்க. அப்பறம் போட்டோகிராபி கண்டுபிடிச்சதும் படமா எடுத்தாங்க. நிக்கற ஆளை படமா எடுத்த மாதிரி ஓடற ஆளைப் படமா எடுக்க முடியுமான்னு தோணியிருக்கும். அப்படித்தான் சினிமாவை கண்டுபிடிச்சிருப்பாங்க. கண்டுபிடிச்ச பிறகுதான் இதை எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு பல யோசனைகள் உருவாகியிருக்கும்.” என்றார் மாமா.
“இப்படி வெறும் பொழுதுபோக்கு மீடியமா ஆக்கிட்டாங்க இல்ல?” என்றேன்.
“அப்படி இல்லை. இன்னொரு பக்கம் ஆவணப்படங்கள், கானுயிர்ப் படங்கள்னு நிறைய நடந்துக்கிட்டுதான் இருக்கு. பொழுது போக்கு படங்கள் வந்து நம்மைச் சேருகிற வேகத்துல அவை வர்றதில்ல, அவ்வளவுதான். படம் விதவிதமா எடுக்கறாங்க. வணிகம்தான் அதுல எது நம்மை வந்து சேரும்கறதைத் தீர்மானிக்குது.” என்றார் மாமா.
“எடிசன் இந்த வணிகம் பத்தி யோசிச்சிருப்பாரா?” என்றான் பாலு.
“அவரே ஒரு வணிகர்தான். நிறைய கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கென்றே ஒரு நிறுவனமே நடத்தி, அதுல பல விஞ்ஞானிகளை வேலைக்கு வெச்சு ஆராய்ச்சி செய்யச் சொல்லி, கண்டுபிடிச்சதை, தன் கம்பெனி பெயர்ல உரிமை வாங்கி லாபம் சம்பாதிக்கறதுன்னு அவரும் கண்டுபிடிப்பையே ஒரு தொழிலா செய்தவர்தான். ஆனா அவர் சினிமாவைக் கண்டுபிடிச்ச உடனே அதை வெச்சு செய்ய நினைச்சது என்ன தெரியுமா? கல்வி!” என்று மாமா சொன்னதும் வியப்பாக இருந்தது.
“இன்னிக்கு ஸ்மார்ட் கிளாஸ் போர்ட், வீடியோ டியூஷன்லாம் வந்திருக்கு இல்லியா? அதையெல்லாம் அப்பவே யோசிச்சுப் பார்த்திருக்காரு எடிசன். 1912ல ஒரு கட்டுரைல எடிசனோட உதவியாளர் இதைப் பத்தியெல்லாம் எழுதியிருக்கார். குழந்தைகள் வெறுமே ஒரு புத்தகத்தைப் பார்த்து படித்துக் கற்றால் போதாது. படித்ததை நேரில் பார்த்து உணரவேண்டும். அதற்கு சினிமா உதவும். இயற்பியல் முதல் ஒவ்வொரு துறையிலும் சொல்லப்படும் பாடத்துக்கு தனித்தனி சினிமா எடுக்க வேண்டும். அவற்றை வகுப்பில் போட்டுக் காட்ட வேண்டும். அப்போது மாணவர்கள் இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்வார்கள். ஆயிரக்கணக்கில் இப்படி பாடப் படங்கள் எடுக்க வேண்டும் என்பது எடிசனின் விருப்பம் என்று அவர் சொல்கிறார்.”
எடிசனின் ஆசை ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்கே இயற்பியல் கற்றுத்தர வேண்டும் என்பதுதாம். ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் எப்படி இறைக்கிறது என்பதை, குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும். ஐந்து வகைகளில் இறைக்க முடியும் என்றால் ஐந்தையும் காட்டவேண்டும். உட்புறம் வால்வுகள் எப்படி வேலை செய்கின்றன என்று காட்டுவதற்கு, இரும்புக் குழாய்களுக்குப் பதில் உட்புறம் தெரியும் கண்ணாடிக் குழாய் அமைத்து இயந்திரத்தை படம் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் எடிசன் சொல்லியிருக்கிறார்.”
“அவர் விரும்பியது இப்போது நவீன தொழில்நுட்பத்தில் வேறு வடிவத்தில் நடக்கிறது.” என்றான் பாலு. “டிராயிங், அனிமேஷன் எல்லாம் பயன்படுத்தி, பல அறிவியல் பாடங்களை இப்போது யூ டியூபில் போடுகிறார்கள்.” என்றான்.
“கனவு காண்பதுதான் முக்கியம். அப்போதுதான் என்றேனும் ஒரு நாளில் அந்தக் கனவு நிறைவேறும்.” என்றேன். “உன் கனவு என்ன?” என்றார் மாமா.
“நான் மேலே போகப் போகிறேன்.” என்றேன்.
“அதற்கு இன்னும் நிறைய வயது இருக்கிறது.” என்று சிரித்தார் மாமா.
“அந்த மேலேவைச் சொல்லவில்லை. விண்வெளியைச் சொல்கிறேன். அது இருக்கட்டும், ஏன் செத்துப் போவதை மேலே போவது என்கிறோம்?” என்று கேட்டேன். “எல்லா கலாசாரங்களிலும் மேலேதான் தேவலோகங்கள் இருக்கின்றன. வான்வெளியில் மேகக்கூட்டங்களுக்கு நடுவில் தேவர்களோ தெய்வங்களோ இருப்பதாக அனுமானித்துக் கொள்கிறோம். இந்திய மரபிலும் அப்படித்தான். கிரேக்க மரபிலும் அப்படித்தான். செத்துப் போகிறவர்கள், தெய்வங்களைப் போய் அடைந்துவிடுவதாக நம்பப்பட்டிருக்கிறது.” என்றார் மாமா.
“ஆனால் மோசமான நரகம், தண்டனை என்றால், பாதாள லோகம் என்கிறார்களே. அது எங்கே இருக்கிறது?” என்றான் பாலு.
“எதுவும் எங்கேயும் இல்லை. நம் கற்பனைகள்தான். பாதாள லோகம் பேஸ்மெண்ட் மாதிரி. பூமிக்குள்ளேயே இருக்கிறது. பூமியின் மையப்பகுதியில் பெரும் நெருப்பு கனன்றுகொண்டிருப்பதாகத்தான் அறிவியல் சொல்கிறது. அதையே பாதாள லோகம் என்கிறது கற்பனை.” என்றார் மாமா.
“நான் அகண்ட விண்வெளியில் சென்று ஆராய்ந்து வேற்று கிரகங்களில் குடியேற வழி உண்டா என்று ஆராயப் போகிறேன்.” என்றேன். “அந்த ஆராய்ச்சி எல்லாம் ஏற்கனவே நடந்துகொண்டு தான் இருக்கிறது. நீயும் அதில் சேர்ந்துகொள்ளலாம்” என்றார் மாமா.
“சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று வான்வெளியில் நீ கண்டுபிடி. நான் அகழ்வாராய்ச்சி செய்து நரகம் எங்கே என்று தேடுகிறேன்.” என்றான் பாலு.
வாலு ஒரு பாட்டு பாடியது. “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே!”. “சொர்க்கமும் நரகமும் இங்கேயே இப்போதே இருக்கின்றன. நாம் வாழ்கிற விதத்தில்தான் இரண்டும்.” என்றார் மாமா. எல்லாரும் தலையாட்டினோம்.

வாலுபீடியா 1: எடிசன் தன் முதல் படத்தைப் போட்டு காண்பித்த நாள் அக்டோபர் 6. 1889.

வாலுபீடியா 2: எடிசன் பத்து வயதில் வீட்டிலேயே லேப் உருவாக்கினார். ஒரு புத்தகம் படித்தால் ஒரு பென்னி காசு என்று அப்பா கொடுத்த காசை லேபுக்கு கெமிக்கல் வாங்கப் பயன்படுத்தினார். 12 வயதில் காது கேட்காமல் போய்விட்டது. அந்த வயதில் ரயிலில் பேப்பர், மிட்டாய்கள் விற்றார். ரயிலிலேயே ஒரு செய்தித்தாளையும் தயாரித்து வெளியிட்டார். 22 வயதில் ஓட்டுப்பதிவு இயந்திரம் தயாரித்தார். எடிசன் தன் மனைவி மினாவுடன் மார்ஸ் கோட் எனப்படும் தந்தி மொழியில் பேசிக் கொள்வார். எடிசன் பச்சை குத்தும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். தன் கையில் ஐந்து புள்ளிகளை பச்சை குத்தியிருந்தார்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement