வேலம்பாசி எனப்படும் நீர்வாழ் தாவரம், பாசி என்று குறிப்பிடப்பட்டாலும் அது பாசி அல்ல. 'வாலிஸ்நெரியா ஸ்பைராலிஸ்' (Vallisneria Spiralis) என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, ஒரு பூக்கும் தாவரம். நிலத்தில் வாழும் விலங்கு நீரில் வாழத்தொடங்கி அதன் பரிணாம வளர்ச்சிதான் திமிங்கிலம் என நாம் அறிவோம். அதுபோல நிலத்தில் வாழ்ந்த ஒருவகைத் தாவரம் நீர்பரப்பின் அடியில் வாழத்தொடங்கி பரிணமித்த அற்புதமே வேலம்பாசி. சுமார் இரண்டு செ.மீ. அகலமும் ஒரு மீட்டர் நீளமும் கொண்டு ரிப்பன் போன்ற வடிவில் இலைகளைக்கொண்ட இந்தத் தாவரம், சுமார் எட்டு அடி உயரம் வரைகூட வளரும்.
ஈரில்ல வகையைச் (Dioecious - டையோசியஸ்) சார்ந்த இந்தத் தாவரத்தில் பப்பாளி மரத்தில் ஆண் மரம், பெண் மரம் என இருப்பது போல ஆண் தாவரம், பெண் தாவரம் என இரு வகை உண்டு. எனவே, இந்தத் தாவரத்தில் மகரந்தச் சேர்கை நடைபெறவேண்டும் என்றால், எப்படியாவது ஆண் பூவின் மகரந்தம் பெண் பூவை அடைய வேண்டும்.
நீருக்குள்ளே இருக்கும் இதன் பூவை வண்டுகள், பூச்சிகள் அண்ட முடியாது. மகரந்தச் சேர்க்கைக்காக இந்த தாவரம் கையாளும் நீர்வழி மகரந்தச் சேர்க்கை (Hydrophily - ஹைட்ரோபைலி) யுக்தி வியப்பானது. பாம்பு தன் 'சட்டையை' கழற்றுவது போல வேலம்பாசிச் செடியிலில் பூக்கும் ஆண் பூ முதிர்ந்ததும் தாவரத்தை விட்டுப் பிரியும். விடுபடும் ஆண் பூ, நீரின் மேல்மட்டத்திற்கு வந்து மிதவை போல நீரின் மேலே மிதந்துகொண்டிருக்கும். பெண் பூ பூக்கும் காம்பு 'ஸ்பிரிங்' போல சுருள்சுருளாக இருக்கும். பருவம் எட்டாத பெண் பூவின் காம்பு சுருண்டு நீருக்குள்ளேயே இருக்கும். பெண் பூ முதிர்ந்ததும் சுருள் காம்பு விரிந்து நிமிர்ந்து நீருக்கு வெளியே தலைகாட்டும். அருகே மிதக்கும் ஏதாவது ஆண் பூவோடு இந்தப் பெண் பூ மோதும்போது மகரந்தம் பாயும். மகரந்தச் சேர்க்கை நடந்தபிறகு சூல்கொண்டு கருவூட்டல் முடிந்ததும், பெண் பூ மறுபடி சுருண்டு நீருள்ளே சென்றுவிடும்.
கெண்டை மீன்கள் வேலம்பாசியை உணவாக உட்கொள்கின்றன. அலங்கார மீன் வளர்ப்புத் தொட்டிகளில் இவற்றை அழகுக்காக வளர்க்கிறார்கள். பெரும்பாணாற்றுப்படை போன்ற சங்ககால தமிழ் இலக்கியங்களில் வேலம்பாசி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
- த.வி. வெங்கடேஸ்வரன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!