Load Image
Advertisement

நெஞ்சு பொறுக்குதில்லையே...

'அன்பு' என்பது மனித இனத்துக்கு மட்டும் உரியது இல்லை. நாய், நன்றியுடன் வாலாட்டுகிறது என்றால், அதன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பே காரணம். வளர்ப்புப் பிராணிகள் மீது அன்பு, பாசத்தை மழையாகப் பொழியும் அதே தருணத்தில், வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் சிலரின் மூடப் பழக்க வழக்கங்களினால் சொல் லொண்ணாத் துயரங்களை அனுபவிக்கின்றன. அவைகளும் உயிரே. உணர்ச்சி அவைகளுக்கும் உண்டு. கால்நடைகளுக்கு வைத்தியம் என்ற பெயரால் சில விவசாயிகள் கடைப்பிடிக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

தெம்பில்லாத கொம்பு மாடுகள்
ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதாலும், விபத்துக் களாலும், அவற்றின் கொம்பு கழன்று விடுவதோ அல்லது முழுமையாக முறிந்து விடுவதோ இயற்கை. இதற்காக உடனடி வைத்தியமாக கிராமங்களில் சிலர் கருப்பட்டியுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கொம்பில் தடவுவர். பிறகு வீணான நீண்ட தலைமுடியினை சேர்த்து அதோடு கட்டி விடுவார்கள். இதனால் காயமேற்பட்ட கொம்பில் வலியுடன் எரிச்சலும் மாடுகளுக்கு மிகுதியாகும்.


'செலைக்குத்து' கொடூரம்
கால்நடைகள் தீவனம் சாப்பிடாமல் இருந்தால் 'செலைக்குத்து' என்ற வழக்கப்படி மாட்டின் நாக்கை வெளியே இழுத்து நாக்கின் அடிபாகத்தில் உள்ள ரத்தக் குழாயினை கூர்மையான ஊசியைக் கொண்டு குத்தி விடுவார்கள். அப்போது சிறிது ரத்தம் வெளியேறும். பின் வைக்கோலை பிரிபோன்று திரித்து நாக்கின் மேல் தாடையோடு கட்டி விடுவார்கள். இதனால் ஏற்படும் வலியினால் இரண்டு நாட்களுக்கு மாடுகள் தீவனம் உண்ணாது. வலி தானாகக் குறைந்ததும், 'காய்ந்த மாடு கம்மங்கொல்லையில் பாய்ந்தது' போன்று தீவனம் சாப்பிட ஆரம்பிக்கும்.

'நாவரஞ்சி' எனும் நஞ்சுதஞ்சாவூர் மாவட்டத்தில் உம்பளாச்சேரி இன மாடுகளுக்கு கொம்புகளை வளர விடுவதில்லை. வளர்ந்த பின் கொம்புகள் சுடப்படுகின்றன கொம்புகளை வலியின்றி இளம் கன்றுகளாய் இருக்கும்போது தீய்ப்பதற்கு கால்நடை மருத்துவமனைகளில் மின் கருவிகள் உள்ளன. 'நாவரஞ்சி' எடுத்தல் என்ற வழக்கப்படி தீவனம் சாப்பிடாத மாடுகளின் நாக்கினை வெளியே எடுத்து சமையல் உப்பினை நாக்கில் அழுத்தி தேய்த்து விடுவார்கள். இதனால் கால்நடைகளுக்கு வலியும், எரிச்சலும் கூடுதலாகும்.
காளைக் கன்றுகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கு நாட்டு முறைகளை விவசாயிகள் சிலர் கையாளுகின்றனர். தகுதியற்றவர்கள் செய்யும் இச்செயல் கால்நடைகளுக்கு ஆண் இன விருத்தி உறுப்புகளில் காயம் ஏற்படுத்தி, வீக்கத்தையும், வீணான கொடூர வலியையும் தருகின்றன. இதனால் சில கால்நடைகள் எழுந்து நடக்க முடியாதபடி செய்து விடும். புண்ணான உறுப்புகள் அழுகி, சீழ்ப்பிடித்து விடக்கூடிய அபாயமும் நேரிடலாம்.


'தீ வைப்பு' சித்ரவதை:
அதிக நேரம் கால்நடைகளை வேலை வாங்குதல், உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு, போதிய அளவு குடிக்க தண்ணீர் கொடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் கால் நடைகள் சோர்வடைந்து படுத்து விடுகின்றன. அந்நேரத்தில் கால்நடைகளின் அருகே வைக்கோலை போட்டு தீயிட்டு கொளுத்துவார்கள். சில மாடுகள் வெப்பம் தாங்க முடியாமல் எழுந்து விடும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி நடக்காது. சில மாடுகள் எழ முடியாமல் நினைவிழந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

'கள்ளிச்செடி' துயரம்: கறவை மாடுகள் நீண்ட நாட்களுக்கு சினைப்பிடிக்காமல் இருந்தால் கள்ளிச் செடியின் பால் அல்லது எருக்கலை பால் இவற்றை பிறப்பு உறுப்பில் வைத்து விடுவார்கள். பிறப்பு உறுப்புகளின் வெளிப்பாகங்கள் மென்மையான ஜவ்வினால் ஆனவை. இதனால் பால்பட்டவுடன் கறவை மாடுகள் சித்ரவதையை அனுபவிக்கின்றன. கால் நடைகளுக்கு ஏற்படும் புண்களில் பினாயில் மற்றும் ஆர்கனோ பாஸ்பரஸ் துாள் (எறும்புப்பொடி) போன்றவற்றை இடுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலுக்கு ஒப்பானது.


தொப்புள் கொடி ஆபத்து:
கன்று ஈன்ற மாடுகளின் நஞ்சுக் கொடி விழவில்லை எனில் கொடியில் பெரிய கல்லைக் கட்டுவது மனிதாபிமானமற்ற செயல். சில நேரங்களில் நஞ்சுக்கொடியுடன் மாடுகளின் கர்ப்பப்பையும் சேர்ந்து விழும். அறிவியலிலும், மருத்துவத்திலும் நவீன முறைகளை கொண்டு முன்னேறி வரும் இக்காலத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க கால்நடை மருத்துவமனைகளை நாடுவதே சிறந்தது. மூட நம்பிக்கையாலும், தகுதியற்றவர்கள் செய்யும் வைத்தியத்தாலும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இந்த சித்ரவதைகள் தொடர்ந்து செய்தால் கால்நடைகளும் ஒரு சமயத்தில் இப்படித்தான் சொல்லும் ''நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலை கெட்ட மனிதரை நினைக்கையிலே...''

- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை. 94864 69044வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement