மலர்களே மலர்களே - நான் தினமும் பூக்கும் பூவல்ல!
'நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கிற பூ அல்லவா...!?' என்று ஒரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடல் கற்பனையல்ல, நிஜம். ஆம்! அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற பகுதிகளில் வளரும் அமெரிக்கக் கற்றாழை (Agave Americana - அகேவ் அமெரிக்கானா) அல்லது ஆனைக் கற்றாழை, 'நூறாண்டுத் தாவரம்' என்று அழைக்கப்படுகிறது. குறிஞ்சி மலர் போல பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்தத் தாவரம், முதல் முறை பூ பூத்ததும், பூ மட்டுமல்ல அந்த தாவரம் முழுவதும் மடிந்துவிடும்.
மெக்ஸிகோவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தத் தாவரம், இன்று ஐரோப்பா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பயிர் செய்யப்படுகிறது. நூறாண்டுத் தாவரம் எனக் கூறப்பட்டாலும், இது 10 முதல் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூத்து, பூத்ததும் மடிந்துவிடும்.
பூ மலர் பருவம் எய்தாதபோது வெறும் புதர் போலக் காட்சி தரும் இந்தச் செடி, பூக்கும் பருவம் வந்ததும், அதன் மையத்திலிருந்து கொடி மரம் போல தண்டு உயரும். நாளொன்றுக்கு ஒன்றரை அடி வரை வளர்ச்சி பெறும் இந்தத் தண்டு, கடைசியில் சுமார் 30 முதல் 35 அடி உயரம் வரை வளரும். இவ்வாறு உயரும் தண்டின் பக்கவாட்டில், சிறு சிறு தட்டுகள் போல பூங்கொத்து வளரும்.
அமெரிக்கக் கற்றாழையின் அயல் மகரந்தச் சேர்க்கைக்குத் துணைபுரியும் நண்பன் வௌவால்கள்தான். எனவேதான், சுமார் 15 அடி உயரத்துக்கு மேலே தனது பூக்களை மலரச் செய்கிறது இந்தத் தாவரம். தண்டுப் பகுதியில் இருந்து தட்டு போல நீண்டிருக்கும் பகுதியில் பூங்கொத்து மலரும். இந்தத் தட்டுகள் வௌவால்கள் வந்து அமர்ந்து சாவகாசமாக அதன் தேனை அருந்த உதவுகின்றன. அவ்வாறு தேனை அருந்தும் வௌவால்கள், ஒரு தாவரத்திலிருந்து வேறு ஒரு தாவரத்துக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்லும்.
வௌவால்கள் உலாவும் இரவில் மட்டுமே மலரிதழ்களை விரித்து கடை விரிக்கும் இந்தத் தாவரம், அந்தச் சமயத்தில் மட்டும் அழுகிய பழ வாசனை வீசும். பொழுது புலர்ந்ததும், மலர் மூடிக்கொள்ளும். இந்த துர்நாற்றம்தான் வௌவால்களுக்கு அழைப்பு. இந்தத் தாவரத்தின் தேனில் 22 சதவீதம் சர்க்கரைப் பொருள் உள்ளது. மகரந்தத்தில் சுமார் ஐம்பது சதவீதம் புரதம். சக்திமிக்க இந்த உணவை உண்ட வௌவால்கள், இரவு முழுவதும் அங்கும் இங்கும் ஆற்றலோடு பறக்கும்.
பூவில் வந்து தேனை ருசிக்கும்போது, வௌவால்கள் உடலில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும். மரம் விட்டு மரம் வௌவால்கள் செல்லும்போது, அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு ஒரு பகுதி மகரந்தம் வௌவால்கள் மூலம் பல நூறு கிலோ மீட்டர் வரை பரவுகிறது என ஆய்வுகள் சுட்டுகின்றன.
தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றலைச் சேமித்து, தனது உடலின் உள்ளே சர்க்கரைச் சத்தை சேமித்து வைக்கும். நன்கு வளர்ச்சியுற்றதும் தனது சக்தி முழுவதையும் பூ பூப்பதில் செலவழித்து, கொத்துக்கொத்தாகப் பூ பூக்கும். ஆற்றல் முழுவதையும் பூ தயாரிப்பில் செலவிட்ட பின், அந்தத் தாவரம் மடிந்து விடும். தென்னையின் நீரா பானம் போல, தென் அமரிக்கப் பழங்குடியினர் அமெரிக்கக் கற்றாழை மலரும்போது, அதை சூல் கொள்ளவிடாமல், அதன் மைய பகுதியிலிருந்து சக்தி போஷாக்கு மிக்க நீரை எடுத்து உணவாகப் பயன்படுத்தினர்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!