வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. நிலப்பகுதியைக் காட்டிலும் உயரமான மலைப் பிரதேசமே சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அங்கே வெப்பமாக இல்லாமல் அதிகம் குளிர்வது ஏன்?
மோ. முகிலன் ஜெப்ரிராஜ், 8ம் வகுப்பு, மகாத்மா மாண்டிசோரி பள்ளி, மதுரை.
சூரியனுக்கு நெருக்கமான, உயரமான மலை என்று எதுவும் இல்லை. உலகின் மிகப் பெரிய எவரெஸ்ட் சிகரம் வெறும் 8.8 கி.மீ. உயரமே! சூரியனின் தொலைவு 14 கோடி கிலோ மீட்டர். இந்த ஒப்பீட்டில் 0.0000088 விகிதம்தான் பூமியின் தரையைவிட எவரெஸ்ட் சிகரம் சூரியனுக்கு நெருக்கமாக உள்ளது. காரின் முன்புறம் உட்கார்ந்து கொண்டு நான்தான் முதலில் இலக்கை அடைவேன் என்று சொல்வது போலத்தான் இதுவும். சுமார் 10 கோடி கி.மீ. உயரமுள்ள மலை இருந்தால், அதன் சிகரம் கொதிக்கும் வெப்ப நிலையில் இருக்கும்.
சூரியனிலிருந்து வரும் கதிர்கள் வெப்பத்தை நேரடியாக ஏந்தி வருவதில்லை. சூரிய ஒளி பூமியில் பட்டுப் பிரதிபலிக்கும்போது, அதில் ஒரு பகுதியை பூமியின் தரைப் பகுதி உறிஞ்சுகிறது. இவ்வாறு உறிஞ்சிய ஒளியை அகச்சிவப்புக் கதிராக பூமி மறுபடி வெளியிடுகிறது. இந்த அகச்சிவப்புக் கதிர், தரையில் இருந்து 10 கி.மீ. உயரம் வரை இருக்கும் 'ட்ரோபோஸ்பியர்' (troposphere) எனப்படும் அடிவளிமண்டல பகுதியை வெப்பப்படுத்துகிறது.
மேலும், திணிவு குறைவான வெப்பக்காற்று வளிமண்டலத்தில் மேலே உயரும். வளிமண்டலத்தின் உயரத்தில் காற்றழுத்தம் குறைவு என்பதால் அவ்வாறு உயரும் வெப்பக்காற்றுக் குமிழி மேலும் விரிவடையும். விரிவடையும் காற்று குளிர்ந்து போகும் என்பதால், வெப்பக்காற்று மேலே எழுந்தாலும் வெப்பம் ஏற்படுத்தாது.
ஆயிரம் மீட்டர் உயரம் கூடினால் சுமார் 6 டிகிரி வெப்பம் குறையும். எனவே தரைப்பகுதியில் 30°C இருக்கும்போது, 8,848 மீட்டர் உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் மைனஸ் 24°C டிகிரி ஆக இருக்கிறது.
2. மழை பெய்யாத காரணத்தால் பூமியில் பேரழிவு ஏற்படுமா? மழை இல்லாமல் அழிந்துபோன உயிரினங்கள் உண்டா?
செ.ரேவதி, க.வே.அ.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
மழை இல்லாமல் போனால் கடுமையான அழிவை பூமி சந்திக்கும். தொடர்ந்து ஏற்படும் வறட்சியின் காரணமாகப் பல உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பல இடங்களுக்குப் பரவலாக நீரை எடுத்துச் செல்வது மழையின் முக்கியமான செயல். சூரிய ஒளியில் ஆவியாகி, குளம், குட்டை, ஆறு போன்றவை நீரை இழக்கும் போது அதனை நிகர் செய்ய மழை பொழிகிறது. கடலில் கலக்கும் நீர், மழையின் மூலமாக மறுபடி நீர் நிலைகளில் வந்து சேர்கிறது. இதுவே நீர் சுழற்சி.
மழை இல்லை என்றால் இந்தச் சுழற்சி இல்லை. பனி உருகி நீர் ஒழுகும் நதிகளில் மட்டுமே தொடர்ந்து நீர் வரத்து இருக்கும். மற்ற நதிகள் வறண்டுவிடும்.
இதனால் பல நதிகளில் வாழும் உயிர்கள் அழிந்துவிடும் எனச் சொல்லத் தேவையில்லை. அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக எந்தெந்த உயிரிகளுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது என பீட்டர் மொய்லி என்பவர் ஆய்வு நடத்தினார். அதில், சுமார் 18 வகை மீன்கள் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டதாகக் கூறுகிறார். பல ஆண்டுகள் தொடர்ந்து வறட்சி ஏற்பட்டதுபோல, காலநிலை மாற்றத்தில் தொடர்ந்து ஒரு பகுதியில் வறட்சி ஏற்பட்டால் பல உயிர்கள் முற்றிலும் அழிந்து போகும் வாய்ப்பு உண்டு என, அவரது ஆய்வு நிறுவியது. ஆயினும் இந்த உயிரினம் வறட்சியினால் அழிந்துவிட்டது எனக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த உயிரினமும் இதுவரை இனம் காணப்படவில்லை.
3. சாக்கடல் (Dead sea) என்று ஏன் பெயர் வந்தது? அந்தக் கடலில் உயிரினங்கள் இல்லையா?
ஜி.வீரராகவன், 5ம் வகுப்பு, இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக், மீனம்பாக்கம், சென்னை.
நிலவியலாளர்கள் பார்வையில் சாக்கடல் என்பது கடலே அல்ல; எல்லா திசையிலும் நிலத்தால் சூழப்பட்ட மிகப்பெரிய ஏரி. ஏனைய கடல் பகுதிகளைப் போல ஏதாவது ஒரு சமுத்திரத்தின் பகுதியாக இந்த நீர் நிலை அமையவில்லை. மேலும், இது ஒரு வடி நிலப் பகுதியே. கடல் மட்டத்திலிருந்து 423 மீட்டர் தாழ்வாக உள்ள இந்தப் பகுதிதான் நிலத்தின் மேலே மிகத் தாழ்வாக உள்ள பகுதி.
377 மீட்டர் ஆழம் உள்ள இந்த நீர்ப் பரப்பில் காலங்காலமாக வடிநீர் கொண்டுவரும் உப்பு, தாதுப் பொருட்கள் குவிந்து கடலைவிட 8.6 மடங்கு அதிக உவர்த்தன்மை கொண்டு அமைந்துள்ளது. எனவே, இந்த நீரில் நாம் அப்படியே மிதக்க முடியும்! இவ்வளவு உப்புச் செறிவு உள்ள இந்த நீரில் மீன் போன்ற உயிரினங்கள் இல்லை. எனவே, இதனை சாக்கடல் எனக் கூறுகின்றனர். ஆனாலும், பல நுண்ணுயிரிகள் இங்கே வாழ்வதால் எந்த உயிரும் இல்லாத இடம் என்று கூறிவிட முடியாது.
4. அண்டவெளியில் கிரகங்கள் எப்படித் தோன்றின? நம்மால் ஒரு கிரகத்தை உருவாக்க முடியுமா?
ம.ராகுல், 6ம் வகுப்பு, சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை.
பற்பல கோடி கிலோமீட்டர் பரந்து விரிந்து இருந்த வான் முகில்கள் திரண்டு, சூரியன் போன்ற விண்மீன்கள் உருவாயின என்கின்றனர். இவ்வாறு விண்மீன்கள் உருவானபோது அவற்றைச் சுற்றி எஞ்சிய மேகங்கள் திரண்டு, பல கோள்களாக உருவாகின்றன. சூரியனுக்கு மட்டுமல்ல; பல விண்மீன்களுக்கும் கோள்கள் உண்டு. புதிதாகப் பிறக்கும் விண்மீன்களைச் சுற்றி கோள்கள் உருவாகும் நிலையையும் இன்று சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் நம்மால் காண முடிகிறது. விண்மீனைச் சுற்றிவருவது 'கோள்'; கோளைச் சுற்றிவருவது 'துணைக்கோள்'. பூமியைச் சுற்றி நாம் செயற்கைக்கோளை செலுத்துவதும் விண்ணில் சர்வதேச விண்வெளிக் கூடம் சுற்றுவதும் செயற்கை 'நிலவு' போன்ற அமைப்புதான் அல்லவா? அதுபோல சூரியனைச் சுற்றிவரும்படி நாம் செய்துள்ள விண்கலங்கள் 'செயற்கைக் கிரகங்கள்' தாம் அல்லவா! அந்த வகையில் நாம் உருவாக்கும் விண்வெளி நிலையங்கள்கூட செயற்கைக் கிரகமே.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!