Advertisement

வாழும் கலை

தமிழரின் தொன்மையும், பண்பாடும் இரண்டறக் கலந்த பாரம்பரியக் கலைகள் அழிந்துவரும் சூழலில், இழிவாகக் கருதப்பட்ட பறை இசை புத்துணர்ச்சி பெற்று எல்லா மக்களும் ரசிக்கும், வாசிக்கும் கலையாக பரிணமித்துள்ளது. இந்த மாற்றத்துக்கு பல பறை இசைக் குழுக்கள் மேற்கொண்ட சீரிய முயற்சிகளே காரணம். இவர்களைக் குழுக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் பறை இசை இயக்கங்கள் என்றே சொல்லலாம். இந்த இயக்கத்தினர், பறை இசை மீது மக்களுக்கு இருந்த இழிவான எண்ணத்தை உடைக்கின்றனர். இது தமிழரின் தொன்மையான கலை என்பதை உணர்த்துகின்றனர். இப்படிப்பட்ட மாற்றத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய இயக்கங்களுள் முக்கியமானது, புத்தர் கலைக்குழு. புத்தர் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறன். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்த இவர், சிறுவயது முதலே முழுநேரப்பணியாக பறை இசைக் கலைஞராக இருந்தார். பெயரில்லாமல் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவருடைய குழுவுக்கு, சென்னையில் நடைபெற்று வந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்துள்ளது. “சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தென் மாவட்ட கலைக்குழுவைச் சேர்ந்த ஒருவருடைய அடையாள அட்டையை எதேச்சையாகக் காண நேர்ந்தது. அப்போதுதான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் இருக்கிறது என்பது தெரியவந்தது. எங்களுடைய குழுவும் பதிவு செய்ய விரும்பியபோது, குழுவுக்கு பெயர் தேவைப்பட்டது. காஞ்சிபுரம் ஒரு பவுத்த பாரம்பரியம் உள்ள ஊர் என்பதால் புத்தர் பெயரை வைத்தோம். இந்தப் பெயரில் ஒரு மானுடப் பற்றும், சமூக மாற்றத்துக்கான குறியீடு உள்ளது. அப்போது முடிவு செய்து வைத்த பெயர்தான் புத்தர் கலைக்குழு” என்கிறார் மணிமாறன்.
1980களில் பறைக்கு எதிராக ஒரு மிகப்பெரிய இயக்கம் நடந்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் பறையைக் கொளுத்தும் போராட்டங்கள் நடைபெற்றன. உலகிலேயே ஒரு இசைக்கருவிக்கு எதிராக நடந்த ஒரே போராட்டம் இதுவாகத் தான் இருக்கும். அதற்கு காரணம், இந்த இசையை ஒடுக்கப்பட்ட மக்கள் சாவு, துக்கம் போன்ற நிகழ்வுகளுக்கு அடிமைத் தொழிலாக செய்ய நிர்பந்திக்கப்பட்டதே காரணம். ஆனால் புத்தர் கலைக்குழு இதை வேறு கோணத்தில் அணுகியுள்ளது. தமிழரின் தொன்ம இசை, ஆதி மனிதரின் இசை, மொழிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய இசை, கருத்துகளை வலிமையோடு எடுத்துச் சொல்ல உதவும் இசையை, ஜாதியைத் தாண்டி அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல முனைந்துள்ளது. “பறை இசையை ரசிக்காதவர்களே இல்லை, அதுதான் உண்மை. ஆனால் பறையை இசை வாசிக்காதவர்களே இல்லை என்ற நிலையைக் கொண்டு வருவதே இம்முயற்சியின் வெற்றி” என்கிறார் மணிமாறன்.
இந்த முயற்சியில் முதல் பணியாக சில உறுதிமொழிகளை எடுத்துள்ளனர், இக்குழுவினர். சாவுக்கு போவதில்லை, சாராயம் குடித்துவிட்டு வாசிப்பதில்லை. பறையை முழுநேரத் தொழிலாக ஏற்றுக் கொள்வதில்லை. கல்வியே பிரதானம், கலை பகுதி நேரம் மட்டுமே ஆகிய முடிவுகள் மக்களுக்கு இக்கலை மீதான பார்வையை மாற்றியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பறை இசை முகாம்களை நடத்துகின்றனர். இதை பறை இசை என்று சொல்வதைவிட பறை இசை நடனப் பயிற்சி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். காரணம் இம்முகாம்களில் பறை தயாரித்தல், கையாளுதல், வாசித்தல், வாசிப்போடு இணைந்த நடனம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கின்றனர். புத்தர் கலைக்குழுவைப் பொருத்தவரை மணிமாறன் உட்பட மூன்று பேர் மட்டுமே முழுநேரமாக ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் அனைவரும், மாணவர்கள், வேறு பணிக்குச் செல்பவர்கள் என பலதுறையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களிடமும் பறை இசை குறித்து நல்ல மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. “எங்களுடைய முகாமில் பயிற்சி பெற வருவோரில் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். கோயம்பேடு மார்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியும் கற்றுக் கொள்கிறார், ஐ.ஆர்.எஸ். பொறுப்பில் இருக்கும் அதிகாரியும் கற்றுக் கொள்கிறார். பேருந்தில் பறையோடு ஏறினால் இறக்கிவிடும் காலம் மாறி, பேஸ்புக்கில் பறையோடு போட்டோ போட்டு லைக்ஸ் அள்ளுகிற அளவுக்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது” என்கிறார் மணிமாறன்.
பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக இயக்கங்களின் நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், ஓட்டல் திறப்பு விழாக்கள், துணிக்கடை திறப்பு விழாக்கள் என எல்லா இடங்களிலும் பறை இசை சென்று சேர்ந்துள்ளது. பறை இசை மீட்டுருவாக்கம் பெற்றுள்ளதைப் போல் ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைகளை வளர்க்க தேர்தல் சின்னங்களாக கலை அடையாளங்களை வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துகின்றனர். ஒரு பறையையோ, கரகத்தையோ தேர்தல் சின்னமாக அறிவிக்கும்போது, அதை பலதரப்பினர் கையில் ஏந்திப் பிரச்சாரம் செய்வார்கள், அந்தக் கலையும் பிரபலமடையும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது. “தேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களை தமிழக அரசு கண்டறிந்து அந்தந்தப் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பகுதி நேரப்பாடமாக கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வது இந்தக் கலைகள் அழியாமல் பாதுகாக்க உதவும்” என்கிறார் மணிமாறன்.
இரண்டு விதங்களில் பயிற்சி வகுப்பு நடத்துகிறது, புத்தர் கலைக்குழு. 3 நாள் அடிப்படைப் பயிற்சி முகாம். ஓராண்டு பட்டைய படிப்பு. இதில் முனைவர் வளர்மதி எழுதிய பறை புத்தகத்தை பாடநூலாகக் கொடுக்கிறார்கள். செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகிய வடிவங்களில் தேர்ச்சி முறைகள் உள்ளன. பறை இசையோடு பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மண்ணின் குரல், வேடந்தாங்கல், பச்சை மண்ணு ஆகிய இசை சிடிக்களை வெளியிட்டுள்ளனர். தற்போது பறை குறித்து ஒரு ஆவணப்படம் எடுத்துவருகின்றனர். இலங்கை, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். மணிமாறனின் வாழ்விணையர் மகிழினி. கும்கி திரைப்படத்தில் “சொய்.. சொய்.. கையளவு நெஞ்சத்தில” பாடலைப் பாடியவர். நாட்டுப்புற தெம்மாங்குப்பாட்டு, தாலாட்டு ஆகிய பாடல்களை பாடிக் கொண்டிருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் வாய்ப்புக் கொடுத்துள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் கிராமியப் பாடல்களைப் பாடி வருகிறார். குத்துப்பாட்டு, காதல் பாட்டு தவிர்த்து, இந்த மண்ணின் கலைகளையும், கானத்தையும் கொண்டு சேர்க்கும் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பாடுகிறார். மண்ணின் மனம் மாறாமல் மக்களின் மனத்தை சமத்துவப் பாதைக்கு மாற்றுகிறது, புத்தர் கலைக்குழு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement