dinamalar telegram
Advertisement

வாரம் ஒரு செய்தி

Share

ஓ அப்படியா? : நம் நாட்டில், 25 முதல், 35 வயது வரையிலான, 80 சதவீத பெண்கள், பொது இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என, 'ஆக்ஸன் எய்டு' என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரூ, கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 44 சதவீத பெண்கள் பெயரை அழைத்து வம்பிழுக்கப்பட்டதாகவும்; 16 சதவீத பெண்கள், விசில் அடித்து கேலி செய்யப்பட்டதாகவும்; போதை பொருள் உட்கொள்ளப்பட்டவர்களால், 16 சதவீத பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும்; 9 சதவீத பெண்கள் கைகளை பிடித்து இழுக்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.பண்பாட்டில் சிறந்த நாடு, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நாடு என்று, வெற்றுப் பெருமை பேசி கொண்டிருக்கும் நம் நாட்டின் இன்னொரு முகத்தை, இந்த ஆய்வு அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது.இனிமேலாவது, பெண்களை தெய்வமாக பார்க்கிறோம் என்று வீண் தம்பட்டம் அடிக்காமல், குறைந்தபட்சம், சக மனுஷியாகவாவது பார்த்தால், இந்த பாலியல் சுரண்டல்கள் குறையும்.

வாரம் ஒரு செய்தி: உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள, மீரட் மற்றும் அதை சுற்றியுள்ள மொபைல் கடைகளில், குறிப்பிட்ட வீடியோ ஒன்று, பெரும்பாலான இளைஞர்களால் அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்டது.ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், மூன்று பேர் கொண்ட கும்பல், இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யும் காட்சி தான் அது. இருவர் அந்த அக்கிரமத்தில் ஈடுபட, மூன்றாம் நபர் வீடியோ எடுத்திருக்கிறான்.
அடுத்த சில நாட்களில், அந்த வீடியோ மாநிலம் முழுக்க பரவ, காவல் துறை, கயவர்களை தேடி வருகிறது. இது, நம் நாட்டின் மிக குரூர முகத்தை வெளிப்படுத்துகிறது. இது போன்ற செயல்கள் குறைய வேண்டுமெனில், பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு
அடக்க வேண்டும்.


பெண்ணே உனக்காக
திருடர்களுக்கு தேள் கொட்டும் மொபைல்!

மொபைல் போன்களை திருடி செல்லும் கும்பல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான ஆசாமிகளுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்டது, 'மொபைல் ஸ்டன் கன்!' திடீரென, உங்கள் மொபைல் போனை யாராவது திருடிச் சென்றால், இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரிமோட்டை அழுத்தினால் போதும். அதில் உள்ள மின்சாரம் மொபைலில் பாய்ந்து, 10 தேள் ஒரே நேரத்தில் கொட்டியது போன்ற வலி ஏற்படுத்தும். அடுத்த வினாடியே, மொபைலை திருடிச் சென்ற ஆசாமி உயிர் வலிக்க கத்த ஆரம்பித்து விடுவார். ஒருவேளை, தனியாக செல்லும் போது, யாராவது வம்பிழுத்தால், இந்த மொபைலில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும், மின்சாரம் பாய்ந்து எதிராளி சுருண்டு விழுவார். இது, 2,700 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

டிப்ஸ்... டிப்ஸ்....

இளமை ஊஞ்சலாட!; பெண்களின் கூந்தலில், இயற்கையாக வாசம் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து, இறைவனே சண்டையிட்ட வரலாறு நம்மிடம் உண்டு. அந்தளவுக்கு
முக்கியத்துவம் வாய்ந்தது கூந்தல். அதனால், எல்லா பெண்களும் கூந்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். இன்றைய நவீன பெண்கள், கூந்தலை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால், முடி உதிர்தல், முடி உடைதல், விரைவில் நரைத்துப் போகுதல் போன்ற, பின் விளைவுகளுக்கு ஆளாகின்றனர். அந்த பிரச்னையை தீர்க்க, நம்மிடம் பாரம்பரிய வைத்திய முறை உண்டு.
செம்பருத்தி, எலந்தை கொழுந்து, கரியாலை, பொன்மேனி இவற்றை காய வைத்து அரைத்து சூரணமாக்கி, 500 கிராம் சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலக்கி, இளம் தீயாக எரித்து காய்ச்ச வேண்டும். நன்றாக ஆறிய பின், நன்னாரி வேர், விழாமிஞ்சி வேர், வெட்டி வேர், கார்போக அரிசி, வெந்தயம் இவற்றை எண்ணெயில் போட்டு ஊறிய பின், கூந்தலுக்குத் தடவி வந்தால் நரை வராது; முடியும் உதிர்வது நின்று விடும்; கறுமை நிறம் அதிகரிக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement