Load Image
dinamalar telegram
Advertisement

ஸாரி கட்டுங்க.. ஸ்டோரி சொல்லுங்க!

கல்யாணம், தலை தீபாவளி, சீமந்தம்.. இப்படி ஒவ்வொரு விசேஷத்திற்கும் வச்சு கொடுத்த புடவைகளை கட்டி காமிக்கறதே இல்ல. எப்பப்பாரு பேண்ட், சல்வார்-கமீஸ் இதுதானா? புடைவை கட்டிக்கறதே கௌரவ குறைச்சலா...' இப்படி தங்கள் மகள்களை பார்த்து அங்கலாய்க்காத தாயமார்களே கிடையாது.
ஆனால், நிலைமை இப்போது கலைகீழ். பெண்கள் புடைவைகளைத் தேடித் தேடி கட்டிக் கொள்கிறார்கள். நம்முடைய கலாசார சின்னமான புடைவையை கட்டிக் கொண்டு உலக மக்களுக்கும் சொல்லுவோம் வாங்க தோழிகளே! புடைவையை உடுத்துங்க, மகிழ்ச்சியா எப்படி ஃபீல் பண்றீங்கன்னு ஃபேஸ்புக்கில் ஃபோட்டோவுடன் ஷேர் பண்ணிடுங்க..' என்று இன்வைட் பண்ணுகிறார்கள். பிபிசி உள்ளிட்ட உலகத் தொலைக்காட்சி சானல்கள் அனைத்திலும் ஃபேஸ்புக், ட்விட்டரிலும் இன்று பேச்சு புடைவையைப் பற்றித்தான்!

புடைவை புரட்சியை மங்களகரமாக ஆரம்பித்த பெருமை பெங்களூர் பெண்களுக்கே. அஞ்சு முத்கல் கம் மற்றும் ஆலி (அகல்யாவின் சுருக்கம்) மாத்தன் என்ற இணை பிரியாத சிநேகிதிகள்தான் இந்தப் புது முயற்சிக்கு வித்திட்டுள்ளனர்.
இந்த அவசர யுகத்தில் பேண்ட், சுடிதார் போட வேண்டிய கட்டாயம். ஆனால் புடைவைகளோ அம்பாரமாகக் குவிந்து போனது. என்ன பண்ணலாம் என்று யோசித்தபோது பிறந்தது, 100 ஸாரி பாக்ட்'ஐடியா. பெண்களுக்கு பிடித்தமான உடைனா, அது ஸாரிதான். சின்ன வயசுலேர்ந்து அம்மா, பாட்டி, அத்தை, பெரிம்மான்னு எல்லோரையுமே புடைவையில் தான் பார்த்திருப்போம். அதோட, அம்மாவோட புடைவைன்னா பெண்களுக்கு அது மலே ஒரு கண் கண்டிப்பா இருக்கு. ஆனா... இப்ப இந்த மாடர்ன், ஃபாஸ்ட் உலகில் புடைவை கட்ட நேரம் இருப்பதில்லை. நானும் என் ஃப்ரெண்ட் ஆலியும் ஏன் ஒர நூறு நாளைக்கு புடைவை கட்டக் கூடாது. நாம மட்டுமல்லாது உலகப் பெண்கள் அனைவரையும் அதில் இணைக்கக்கூடாது'ன்னு ஒரு புடைவை ஒப்பந்தம் போட்டோம். மார்ச் மாதம் இந்த இயக்கத்தை ஆரம்பிச்சோம். இனி டிசம்பர் வரை புடைவை மேளாதான். ஸாரி கட்டுங்க.. ஸ்டோரி சொல்லுங்க' என்கிறார் அஞ்சு.
அதென்ன கதை என்கிறீர்களா? ஒவ்வொரு படைவைக்குப் பின்னாலுமே ஒரு கதை ஒளிந்திருக்கும். புடைவையுடன் நெய்யப்பட்ட அழகான, ஏன் அழுகையான நினைவுகள்கூட இருக்கலாம். நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு புடைவைக்குமே ஒரு பின்னணி உண்டு. மகிழ்ச்சி, சந்தோஷம், ஏக்கம், சண்டை, ஏழ்மை.. எனப் பலவிதமான உணர்ச்சிக் கதைகள் இருக்கும்.
நாம இப்போ ஏதேனும் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்குத்தான் புடைவை கட்டுறோம். இதனால் புடைவை கட்டிக்க முடியாம ஏகமா சேர்ந்து போயிடறது. ஏன் புடைவையை அழகா கட்டிக்கிட்டு அதுக்குப் பின்னால் இருக்கிற கதையை மத்த பெண்களோட பகிர்ந்துக்கக் கூடாதுன்னு தோணிச்சு. இதை ஆரம்பிக்கும்போது சத்தியமா தெரியாது இது இத்தனை பெரிய விஷயமாக, அழகான இயக்கமாக பவனி வரப் போகிறதுங்கிறது...' என்கிறார் ஆலி.
ஒவ்வொரு புடைவைக்குப் பின்னாலும் எத்தனை நிகழ்வுகள், எத்தனை ரசனைகள், எத்தனை கதைகள்... பார்க்கப் பார்க்க பிரமிக்கிறோம். செலிப்ரிட்டி பெண்களும் பங்கெடுத்து நாங்களும் தேன்' என ரகளை செய்கின்றனர்.
எனக்கு புடைவைன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் எங்கம்மாகிட்டே (நடிகை அபர்ணா சென்) புடைவை புதையலே இருக்கு. அடிக்கடி ரெய்ட் நடத்துவேன். நான் நடிக்கற படமாக இருந்தாலும், போகிற விழாக்களாக இருநதாலும் புடைவைதான் என் சாய்ஸ். காட்டன், சில்க்.. என வெரைட்டியா வெளுத்து வாங்குவேன். கலர் என்ன வேணா இருக்கலாம். நோ ரூல்ஸ்... ' என்கிறார் பாலிவுட் நடிகை கொங்கணா சென்ஷர்மா.
சோஷியல் மீடியாவில் இந்தப் புடைவை ரகளை மேளா மகத்தான இடத்தைப் பிடித்துவிட்டது என்ற #டச்ண்ட tச்ஞ் இந்தக் குறியீட்டை போட்டு ஸாரி பேக்ட் என தட்டிவிட்டால் லட்சக்கணக்கான பெண்களின் புடைவை போஸ்கள், கதைகள் வந்து விழும்.
எங்க ஃபேமிலி பிஸினஸ் ஊதுவத்தி செல்வது. ஆனா, எங்க பாட்டியிடம் ஷோரூம் வைக்கும் அளவுக்கு காஞ்சிபுரம் பட்டுப் படைவைகள் உண்டு. திடீரென பாட்டிக்கு அல்சைமர் (மறதி நோய்) அட்டாக வந்து விட்டது. ஆனாலும் ஞாபகமாக பேத்திகளான எங்களுக்குப் புடைவைகளைப் பிரித்துக் கொடுத்து விட்டார்.
நானும் அடிக்கடி கப்போர்டை திறந்து புடைவைகளை ஆராய்வேன். என் கணவர்கூட இதென்ன புடைவை மேயற யோகா'வா என கிண்டலடிப்பார். ஸோ இப்ப புடைவைகளை கட்டுறேன். பிறரையும் கட்டச் சொல்லி உற்சாகப்படுத்துகிறோம். இன்னைக்க வெளிநாட்டு பெண்கள் கூட புடைவையுடன் இணையும்போது நம்முடைய கலாசாரம், பண்பாடு இவையெல்லாம் உலகப் பெண்களை எப்படிக் கவர்கிறது எனப் புரிகிறது' என்கிறார் பர்ஃப்யூம் பிசினஸ் பெண்மணியான ஆலி.
நான் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவள். எங்கள் திருமணத்தில் மணப்பெண் முகூர்த்தம் முடிந்தவுடன், சப்தபதி வலம் வந்தவுடன், தான் அணிந்திருந்த புடைவையைக் கழட்டி நாத்தனாருக்குத் தந்துவிட வேண்டம். நான் தரவே மாட்டேன் என வீம்பு பிடித்த அழுதேன். பிறகு தந்து விட்டேன்..' (நாத்தனாரை காக்கா பிடித்து சந்தோஷப்படுத்த இப்படி ஒரு சம்பிரதாயம்) என்கிறார் நியூஸ் ரிப்போர்ட்டராக இருந்து ப்யூரோ சீஃப் ஆகி தற்சமயம் சொந்தமாக டாக்குமென்டரி ஃபிலிம் எடுக்கும் அஞ்சு.
என் பனாரஸ் புடைவையைப் பார்த்து ஷர்மிளா தாகூரே அசந்து போய் பாராட்டித் தள்ளி விட்டார். சூப்பர் பனாரஸ் புடைவை என்னுது. க்ளாசிக் டிஸைனர்' என்கிறார் ஒரு தில்லி பெண்.
அம்மா வத்சலா பையும், மகள் சுமிதா பையும் அடிக்கும் ஜாலி ரகளையில் குடும்பமே கலகல. நான் கட்டியிரக்கும் வைரஊசி 50 வருடங்களுக்கு முந்தைய பழைய புடைவை. தினமும் புடைவை தான் கட்டுகிறேன்' என அம்மா வத்சலா பை சொல்ல, மகள் சுமிதா முன்பு ஏர்லைன்ஸில் வேலை பார்த்தபோது தினப்படி புடைவைதான் உடுத்துவேன். அப்போதெல்லாம் அது கம்ஃபர்டபிளா இல்ல, இன்கன்வீனியன்டா இருக்கோன்னு நெனச்சது உண்டுதான். ஆனா இப்ப 100 ஸாரி பாக்ட் திட்டத்தில் இணைந்த பிறகு என்ஜாய் பண்ணி கட்டுறேன்' என்கிறார்.
பன்முக பர்ஸனாலிட்டியான சபிதா ராதாகிருஷ்ணா விரும்பி அணிவது புடைவைகளையே. புடைவை என்பது ஒரு க்ரேஸ் தரும். அழகை கூட்டும் எந்த அகேஷனுக்கும் பொருந்தும். நம் மதிப்பை உயர்த்தி கொடி பிடிக்கும்' எனனும் சபீதா ஒரு டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்பர்ட். எழுத்தாளரும் கூட!
மயிலாப்பூர் சுதா இப்போதெல்லாம் அதிகமாக கட்டுவது புடைவையே. ஸாரி பாக்ட் ஆரம்பிச்சதிலிருந்து புடைவை கட்ட சான்ஸ் தேடி அலையறேன். குழந்தையை ஸ்கூல்லேருந்து பிக் அப் பண்ண போறதுக்குக்கூட டக்குன்னு புடைவையைக் கட்டிக்கத்தான் ஆசைப்படறேன். முன்னேயெல்லாம் பான்ட்ஸ், ஜீன்ஸ், கேப்ரிஸ் இப்படித்தான் போடுவேன். நௌ ஐ லவ் ஸாரீஸ்...' என்கிறார் சுதா.
புடைவை கட்டும்போதெல்லாம் அம்மா ஞாபகம் தான். நானும் ஒரு அம்மா என்பதை உணர்த்துவதே புடைவைதான்.'
இந்தப் புடைவை என் பெரிய பிள்ளை (ஏழு வயது) எனக்கு செலக்ட் பண்ணி கொடுத்துக் கட்ட வச்சுருக்கான்' இது ஒரு பெருமிதத் தாய்.
இது பெண் பார்த்தபோது கட்டினது', இது முதல் டேட்டிங், இது முதல் சம்பளம்' என பட்டியல் நீள்கிறது.
பட்டு, பனாரஸ், காட்டன், சில்க், வெங்கடகிரி, உப்படா, நாராயணபேட்.. என மைல்கணக்கில் நீளும் புடைவை வகைகள். இந்த எண்ணற்ற புடைவைகளின் பின்னே வகை வகையான எண்ணங்களின் அணிவகுப்பு. புடைவைகளைக் கட்டிக் கொண்டோமானால் கலாசாரத்திற்கு மாத்திரம் பெருமையல்ல. நலிந்து போன பல நெசவாளக் குடும்பங்களும் இதனால் தலைதூக்கும். வறுமையில் வாடும் பல நெசவாளிகள் புத்துயிர் பெறுவார்கள்.
100 டேஸ் ஸாரி பேக்டில்' இன்று இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் புடைவை மற்றும் கதைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
எங்களால புடைவை கட்ட முடியாது, கஷ்டம், சௌகர்யமல்ல, புடைவை கட்டி வேலை பார்க்க முடியாதுன்னு சாக்கு சொல்லவே முடியாது. ஜான்சிராணி லட்சுமி பாய் புடைவையால் முகுகில் குழந்தையைக் கட்டி சுமந்துபோரிடவே சென்று இருக்கிறார். நம்மால் ஆஃபீஸ்ல வேலை செய்ய முடியாதா?' என நெற்றியடியாக ஒர மும்பை பெண் கேட்டு மராத்திய நவ்வாரி' (9 கஜம்) புடைவையிலும் ஃபோட்டோ போட்டிருக்கிறார்!

- லதா சேகர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement