அம்மனும், ஈஸ்வரியும்
ஆடி மாதம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது, அம்மன் திருவிழாக்கள்தான். அம்மன் பாடல்கள் என்றால் நம் கண்முன் வருபவர், திரைப்பட பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி தான் பாடிய அம்மன் பாடல்களைப் பற்றி மனம் திறக்கிறார் அவர்.
நான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் மாரியம்மன் பாடல், வரமளித்து உலகயெல்லாம் வாழ்வளிக்க வந்தவளே!' என்ற பாட்டு, அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன்.
இன்று ஆடி, தை மாதம் என்றால் மாரியம்மன் கோயில்களில் மட்டுமல்லாமல், பல்வேறு கோயில்களிலும் ஒலிக்கிற ஒரு பாட்டு செல்லாத்தா! செல்ல மாரியாத்தா!'. இந்தப் பாட்டை எழுதியவர் வீரமணி சோமு. அதேபோல இன்னொரு மிகப் பிரபலமான பாட்டு வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதி பராசக்தியவள்' என்ற பாட்டு. நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள் என்றாலும், நான் பாடிய அத்தனை அம்மன் மீதான பாடல்களையும் முழுமையான ஈடுபாட்டோடு, அனுபவித்துதான் பாடியிருக்கிறேன். அதற்குக் கவிஞர் தமிழ் நம்பியின் அற்புதமான தமிழும், ஆன்மிக அறிவும் காரணம். அவரை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
பண்டிகையோ, திருவிழாவோ... என்னோட பக்தி பாடல்கள் ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லவிடலாம். அதிலும், ஆடி மாதம் முழுக்க எங்கும் என் குரல்தான்! அது அந்தத் தெய்வமா பார்த்து எனக்குக் கொடுத்த வரம்.
குன்னக்குடி வைத்தியநாதன், வீரமணி சோமு, எல்.கிருஷ்ணன், இசையமைப்பாளர் தேவா போன்றவர்களின் இசையமைப்பில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதமா, மாணிக்கமா, மரகதமா, வைரமா, பவழமா, நவரத்தினமா ஜொலிக்கும்.
குறிப்பாக, கற்பூர நாயகியே கனகவல்லி'ங்கிற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதை எழுதியவரோ, இசையமைத்தவரோ யாருன்னு ரொம்ப பேருக்கு தெரியாது. கவிஞர் அவினாசி மணி என்பவர் எழுதிய தெய்வீக மணம் கமழும் வார்த்தைகளுக்கு இசையமைத்தவர் வீரமணி -சோமு. பள்ளிக்கட்டு சபரி மலைக்கு' பாடுவாரே அதே பாடகர் வீரமணிதான்!
தேவாவின் இசையமைப்பில் மகமாயி... சமயபுரத்தாயே' பாடலில் கவிஞர் தமிழ் நம்பி எழுதிய வரிகளை நான் பாடியுள்ளேன். அது என்னவோ எனக்காகவே எழுதியது போலத் தோன்றுவதால் அதைக் கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கி விடும். என் நெஞ்சம் பக்தியில் நெகிழ்ந்துவிடும்.
-அனிதாமூர்த்தி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!