Load Image
dinamalar telegram
Advertisement

வழித்துணை மட்டுமல்ல.. வாழ்க்கைத் துணையும்!

குலதெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம் - இந்த தெய்வங்களை எந்தக் காலத்திலும் கைவிட்டு விடக்கூடாது. இந்த அனைத்து தெய்வங்களும் நம் குலம் காக்க வந்த தெய்வங்கள். நம் குடும்பத்தின் நன்மைக்காக நம்முடனே அரூபமாக (உருவம் இல்லாமல்) இருந்து வருபவர்கள்.
காவல் தெய்வத்தின் முக்கியத்துவம் என்ன என்று பலருக்கும் தெரியவில்லை.
காவல் தெய்வம்' என்று நாங்கள் வணங்குகிற ஒரு தெய்வம் கிராமத்தில் இருந்து வந்தது. குழந்தையாக இருந்தபோது எல்லா வழிபாடும் செய்வோம். நகரத்துக்கு வந்த பின்பு வெளிநாட்டுக்குப் போனபின் படிப்படியாக எல்லாம் மறைந்து போயிற்று. காவல் தெய்வம் இருக்கிற ஊருக்கு எப்போது சந்தர்ப்பம் அமைகிறதோ அப்போது தான் செல்கிறோம்... இது சரியா? என்று பலருக்கு சந்தேகம் வருகிறது.

எப்படி ஃபேமிலி டாக்டர் இருக்கிறாரோ, அதுபோல்தான் காவல் தெய்வம்!
எதுவாக இருந்தாலும், முதல் அறிவிப்பு காவல் தெய்வத்துக்குதான் இருக்க வேண்டும்.
வீட்டில் திருமணம் போன்ற சுப விசேஷமா?
காத்திருந்து காத்திருந்து ஒரு உத்தியோகத்தில் சேர்ந்து வாங்கிய முதல் சம்பளம் சமர்ப்பணிப்பா?
தவழ்கின்ற குழந்தைக்கு முதல் மொட்டையா?
சொந்த வயலில் விளைந்த முதல் அறுவடையாக் காணிக்கை செலுத்த வேண்டுமா? இதுபோல் இன்னும் எவை எல்லாம் முதன்முதலாக அர்ப்பணிகிறோமோ, எல்லாமே குல தெய்வத்துக்கும், காவல் தெய்வத்துக்கும் மட்டும் சொந்தம்!
எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், காவல் தெய்வம் இருக்கின்ற ஊருக்கு போக முடிகிறதோ, இல்லையோ நகரங்களில் வசிப்பவர்கள் பூஜை அறையில் ஒரு தொகையை நேர்ந்து கொண்டுவிட்டு, காவல் தெய்வம் இருக்கும் திசை நோக்கி விழுந்து கும்பிடுவார்கள்.
எப்படி நந்திதேவர் இல்லாத சிவாலயத்தையும், கருட பகவான் இல்லாத வைணவ ஆலயத்தையும் பார்க்க முடியாதோ, அதுபோல் கருப்பர் அல்லது கருப்பு சாமி இல்லாத காவல் தெய்வ ஆலயத்தைக் காண முடியாது. கருப்பரே பிரதானமாக ஆட்சி புரியும் ஆலயமும் உண்டு. கருப்பர் பரிவார தெய்வமாக அருளும் ஆலயமும் உண்டு.
தவறு செய்வோரை தண்டிக்கும் தன்மை இந்தக் காவல் தெய்வங்களுக்கு உண்டு என்பதால், பெரும்பாலும் காவல் தெய்வ ஆலயங்கள் கிராமத்தை விட்டு சற்றுத் தள்ளியே அமைந்திருக்கும்.
சொந்த ஆசைகளை நிறைவேற்றுமாறும், இஷ்ட தெய்வத்திடம் ஏகத்துக்கும் கோரிக்கைகள் வைக்கும் இந்தக் காலத்து பக்தர்கள், காவல் தெய்வம் அருளும் ஆலயம் வந்தால், கட்டுப்பெட்டி ஆகிவிடுகிறார்கள். அதாவது, காவல் தெய்வத்திடம் சரணாகதி ஆகிறார்கள்.
காரணம் - அனுதினமும் நம்மைக் காத்துவரும் காவல் தெய்வத்துக்கு நமக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது புரியும் என்பதால்!
காவல் தெய்வத்தின் சன்னதி முன்னால் நிற்கும் போது மட்டும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் பெரும்பாலான பக்தர்கள் மனதில் இருப்பதில்லை என்பது நிஜம்! எனக்கு எது நல்லதுன்னு தோணுதோ, அதை நீயே பார்த்துக் குடு' என்று பொத்தாம்பொதுவாக வேண்டுதல் வைக்கிறார்கள்.
உள்ளூர் காவல் தெய்வ ஆலயங்களில் திருவிழா என்றால், ராட்சத பலூன் கடைகளும், இன்று காணக் கிடைக்காத குச்சி ஐஸ் மற்றும் கமர்கட் கடைகளும், பெண்களின் ஒப்பனைப் பொருட்கள் விற்கும் கடைகளும், ரங்க ராட்டினமும் களை கட்டும்.
ஊர்கூடி வைக்கும் மண்சட்டிப் பொங்கலும், நாவை மடித்தக் கொண்டு பக்தைகள் இடும் குலவை சத்தமும், அருள் வந்து ஆடி ஆசி வழங்கும் பூசாரிகளும் கருப்பர் ஆலயங்களின் அடையாளங்கள். பாரத தேசத்தின் பாரம்பரிய சொத்து, இங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள்தான் இந்த வழிபாட்டைத் தங்கள் நாடுகளுக்கும் கொண்டு சென்று வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார்கள். கருப்பரின் ஆட்சி உலகெங்கும் உள்ளது.
ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா? வைணவ திவ்ய தேசங்களுள் பிரதானமாகத் திகழும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்திலும் கருப்புசாமியை தரிசிக்க முடியும்.
ஆம்! இங்கே இவருக்கு ஒரு சிறு சிலை இருப்பதைப் பலரும் அறியார்!
கொடிமரம் தாண்டி இடப்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தால் - அதிசத்திலும் அதிசயமாக அங்கே ஒரு கருப்புசாமியை நீங்கள் தரிசிக்க முடியும். மரத்தால் ஆன சிலை இது.
நான்கு பெண்களுடன் (இவர்கள் கருப்பரின் மனைவியர் என்று ஒரு குறிப்பு சொல்கிறது) கையில் ஒரு தண்ணீர் குழாயை வைத்துக் கொண்டு விளையாடுகிற இந்தக் கருப்புசாமி சிலை சற்றே சிதிலமடைந்திருந்தாலும் இந்த காவல் தெய்வத்தை மனதில் நிறுத்தி இங்கே தரிசிக்கிற ஓரிரு பக்தர்களும் இருக்கிறார்கள். கருப்புசாமியை தரிசித்துவிட்டு மீண்டும் கோயிலுக்குள் புகுந்து மண்டத்தை வலம் வந்து ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க உள்ளே போக வேண்டும்.
முறுக்குக்குப் பேர் போன மணப்பாறைக்கு அருகே, திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஓடிக் கொண்டிருக்கும் நதி மாமுண்டி. இந்த நதியின் கரையில் அருளிக் கொண்டிருக்கிறார் ஆண்டவர் சுவாமிகள். இங்கு கருப்புசாமி காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த கருப்புசாமி எங்கே இருக்கிறார் தெரியுமா? இங்குள்ள ஒரு புளிய மரத்தின் பொந்தில் அவர் குடி இருந்து வருவதாக ஒரு நம்பிக்கை. பொந்துக்குள் மறைந்திருக்கும் கருப்பர் என்பதால், அவரை பொந்துப்புளி கருப்பர் ( சிலர் பொத்துப்புளி கருப்பர் என்று சொல்வர்) என்று அழைக்கிறார்கள்.
கருப்பர் என்பவர் கோடானு கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு காவல் தெய்வமாக இன்றளவும் விளங்கி வருகிறார். தன்னை நம்பிய பக்தர்களுக்கு மிகப் பெரிய ஆதார சக்தியாக உடன் இருந்து அவர்களை அரவணைத்து ஆட்கொள்கிறார் கருப்பர். உல்கில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களோ, அத்தனை பேரின் இதயத்திலும் கருப்பர் உள்ளார்.
நாம் தரிசிக்கின்ற ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான கருப்பரைத் தரிசிக்க முடியும். ஆயுதங்களைத் தாங்கியபடி நின்ற திருக்கோலம், கம்பீரமாக அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி ஆவேசமாக புறப்படும் கோலம் என்று விதம் விதமான கருப்பர்களை நாம் தரிசிக்கலாம்.
சில ஆலயங்களில் கருப்பரின் மனைவி கருப்பாயியையும் தரிசிக்கலாம். தன் குடும்பத்தினருடன் கருப்பர் அருள்வது காண கிடைக்காத அபூர்வ வடிவம்.
இனி, எந்தக் கிராமப்புற ஆலயம் சென்றாலும், அங்கு குடி கொண்டிருக்கும் கருப்பரை தேடித் தேடி தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு வழித்துணை மட்டுமல்ல.. வாழ்க்கையிலும் துணையாக இருப்பார்.

- ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement