Load Image
dinamalar telegram
Advertisement

பாரதி: கவிஞனும் காப்புரிமையும்

1940கள் அளவில் தமிழ்ச் சமூகத்தில்உருப்பெற்றுவந்த பொதுக்களத்தில் (public sphere) பாரதியின் எழுத்துக்கள் இன்றியமையாததும் தவிர்க்க முடியாததுமான ஓர் இடத்தைப் பெற்று விட்டன. பாரதியின் எழுத்துகளுக்கு வணிக மதிப் பும் ஏற்பட்டது. அவனுடைய பாடல்களைப் பயன் படுத்திக்கொள்வதற்குப் 'பாரதி பிரசுராலயம்' கட்டணம் விதித்ததே இதற்குப் போதிய சான்றாகும். 'விண்ணப்பதாரரின் தன்மையைப் பொறுத்து, பாரதி பாடல்களின் சிலவரிகளையும், சில செய்யுட்களையும் பாடநூல்களில் பயன்படுத்திக்கொள்வதற்குச் சில சமயங்களில் கட்டண மில்லாமலும் சில சமயங்களில் பெயரளவுக்கு ராயல்டி விகிதப்படியும் அனுமதியளித்து வந்ததாக'க் கூறிய பாரதி பிரசுராலயம், இந்தியப் பணியாளர் சங்கம் போன்ற பொதுநல அமைப்புகள்தாமே பாரதியின் தேர்ந்தெடுத்த பாடல்களின் தொகுப்புகளையும் வெளியிட அனுமதி அளித்தது. பொதுச் சொல்லாடல்களில் பெருகிவந்த பாரதி பாடல்களின் பயன்பாட்டுத் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பது வெளிப்படை.

இந்தப் பின்னணியில், பாரதியின் படைப்புகளைப் பொதுச்சொத்தாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படத் தொடங்கியது. நவம்பர் 1944இல் கோயம்புத்தூரில் கூடிய முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இது பற்றித் தீர்மானம் நிறைவேறியதாகத் தெரிகிறது. 'தனிப்பட்டவர் கையினின்று பாரதி பாடல்கள் மீட்கப்பட வேண்டும்' என்ற தீர்மானத்தைக் கிராம ஊழியன், சிவாஜி முதலான இலக்கிய இதழ்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் முன்மொழிந்திருக்கிறார். டிசம்பர் 1946இல் சென்னையில் நடந்த அடுத்த மாநாட்டிலும் இதே கருத்தை இரண்டு ஜீவாக்களும் (ப. ஜீவானந்தமும் நாரண. துரைக்கண்ணனும்) வலியுறுத்தியதாக எதிரொலி விசுவநாதன் குறிப்பிடுகிறார்.

1947 அக்டோபரில் எட்டயபுரம் பாரதி மணி மண்டபத் திறப்பு விழாவில் இக்கோரிக்கை அதிக வலுப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டு மாதங்களில் நிகழ்ந்த இத்திருவிழாவில், மீதூர்ந்த வெற்றிக் களிப்பும் கோலாகலமும் இக்கோரிக்கைக்குக் கூர்மை தந்ததில் வியப்பில்லை.

பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவில் தமக்கே உரிய பாணியில் சண்டமாருதமாக முழங்கிய ஜீவா, “பாரதி நூல்களை வெளியிடும் உரிமை திரு. விஸ்வநாத ஐயர் (பாரதியின் தம்பி) கையில் இருக்கிறது. பேசும் படம், வானொலி, இசைத்தட்டு இவைகளில் பாரதி பாடல்களைப் பாடுவதற்கான உரிமையை மெய்யப்ப செட்டியார் ஒருவரிடம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வைத்துக்கொண்டிருந்தார்.

பாரதி இலக்கியம் தமிழ் மக்களின் பொது உடைமை; ஏன் உலகத்து மக்களுக்குக்கூட. காந்தி இலக்கியம் போல் பாரதி இலக்கியமும் பொது உடைமையாக - தனி உரிமையில் சிக்கிக் கிடப்பது விடுபட - தமிழ் மக்களும் சர்க்காரும் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்!”

இவ்வாறு முழங்கிய ஜீவா, “சேமமுற வேண்டுமெனில் தமிழ் முழக்கம் தெருவெல்லாம் ஒலிக்கச் செய்வீர். இது பாரதியின் ஆணை. இந்த ஆணையை நிறைவேற்ற பாரதி நூல்களை - இலக்கியத்தை யாரும் பதிப்பித்து வெளியிட உரிமை ஏற்பட வேண்டும். பாரதியின் இளவல் திரு. விஸ்வநாத ஐயர் காலமறிந்து தானே முன்வந்து பாரதி நூல்களைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்” என்று தம் விருப்பத்தையும் தெரிவித்தார். அவ்வாறு அவர் முன்வந்தால் 'தமிழ் மக்களின் நன்றி அவருக்கு என்றும் உரியதாகும்' என்ற ஜீவா, 'ஆனால் பணத்திற்கு ஆசைப்பட்டு, தனி உரிமைக்கே நின்றால் பழிதான் ஏற்படும்' என்றும் எச்சரித்தார். மேலும், அவ்வாறு பொதுவுடைமையாக்கினால், 'பாரதி குடும்பத்திற்கு - விஸ்வநாத ஐயர் உட்பட - ஒரு நல்ல நன்கொடை அளிக்கத் தமிழ் மக்கள் தயங்கமாட்டார்களென்று எதிர்பார்க்கலாம்' என்ற தம் நம்பிக்கையினையும் வெளியிட்டார் ஜீவா.

பாரதி பாடல்களைத் தாராளமாகக் கேட்பதற்குரிய வகையில் ஏவி. மெய்யப்ப செட்டியார் ஒலிபரப்புரிமையை விட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஜீவா, “பாரதி பாடல்களில் வியாபாரம் நடத்துவதை ஒழித்து, தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்ட பின்னரும் “விஸ்வநாத ஐயரும் மெய்யப்ப செட்டியாரும்... காலம் கடத்துவார்களானால், சென்னை சர்க்கார் பாரதி பாடல்களும் பாரதி இலக்கியமும் நாட்டிற்குப் பொது என்று பிரகடனம் செய்ய வேண்டும்” என்று அரசை நோக்கிக் கேட்ட ஜீவா, அதற்காகத் தமிழ் மக்கள் முறையான, தீவிரமான கிளர்ச்சியிலும் நடவ டிக்கைகளிலும் உடனே இறங்கித் தீர வேண்டும்” என்ற வெகுசனக் கோரிக்கையாகப் பாரதியை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தீவிரமாகப் பேசினார்.

பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவன்று சென்னை வானொலி நிலையத்தில் உரையாற்றிய பரலி சு. நெல்லையப்பரும், “பாரதி நம்மை விட்டுப் பிரிந்து போய்க் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இவ்வளவு காலமாகியும் விடுதலைக் கவியின் பாடல்கள் பல பந்தங்களில் அகப்பட்டு வருந்துகின்றன. பாரதி பாடல்களையும் எழுத்துக்களையும் பொதுவுடைமையாகச் செய்து, அவற்றைப் பல முறைகளில், இலட்சக்கணக்காக வெளியிட்டு நாடெங்கும் பரப்ப வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

இந்தச் சூழலில்தான் ஒரு வக்கீல் நோட்டீசு, ஒரு பெரும் இயக்கத்தை முடுக்கிவிட்டுக் கடைசியில் பாரதி படைப்புகள் மக்களுடைமையாவதற்கு வழிகோலியது. இந்தக் காலப் பகுதியில் டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்த ஸ்ரீ பாலஷண்முகானந்த சபை தமிழகத்தின் முதன்மையான நாடகக் குழுவாக விளங்கியது. நாகர்கோயிலைச் சொந்த ஊராகக் கொண்ட டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி.கே. பகவதி ஆகிய அண்ணன் தம்பிகளைக் கொண்ட இக்குழு 'டி.கே.எஸ். சகோதரர்கள்' என்று அறியப்பட்டது. “தமிழ் நாடகத் தந்தை” என்று போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் இளமையிலேயே பயிற்றுவிக்கப்பட்ட இவர்களில் மூன்றாமவரேயாயினும் அதிகப் பெயர் பெற்றவர் தி.க. சண்முகம். அவ்வையார் பாத்திரத்தை நாடகத்தில் ஏற்று நடித்ததால் அவ்வை சண்முகம் என்றும் இன்றளவும் அறியப்படுகிறார். தேசபக்தி, சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றை அடிக்கருத்துகளாகக் கொண்ட பல நாடகங்களை இக்குழு நடத்திவந்தது. புராணக் கதைகளையே உள்ளடக்கமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகிவந்த காலத்தில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் நாவலை வைத்துத் தயாரிக்கப்பட்ட, தமிழின் முதல் சமூகத் திரைப்படம் என்றறியப்படும் 'மேனகா' (1935) இக்குழுவின் கைவண்ணத்திலேயே தயாரிக்கப்பட்டது. 1920களின் பிற்பகுதியிலிருந்தே பாரதியின் பாடல்களைத் தம் நாடகங்களில் டி.கே.எஸ். சகோதரர்கள் பயன்படுத்தி வந்தனர். பாரதிதாசனின் 'புரட்சிக் கவி' உள்ளிட்ட பல நவீன இலக்கியப் படைப்புகளுக்கு ஆதாரமாகிய 'பில்ஹணன்' என்ற நாடகத்தையும் இக்குழு அரங்கேற்றி வந்தது. இதன் பெருவெற்றியைத் தொடர்ந்து 'பில்ஹண'னைத் திரைப்படமாக்க தி.க. சண்முகம் முனைந்தார். 'கண்ணன் பாட்'டில் கண்ணனைக் காதலனாக வரித்துப் பாரதி பாடிய 'தூண்டில் புழுவினைப்போல்'என்று தொடங்கும் பாடலை நாட்டியத்துடன் இத்திரைப்படத்தில் அவர் இணைத்திருந்தார்.

இந்த நிலையில் ஏவி.எம் திரைப்பட நிறுவனத்தின் முதலாளி ஏவி. மெய்யப்ப செட்டியார், பாரதியின் பாடல்களைத் திரைப்படங்களிலும் இசைத் தட்டிலும் பதிவு செய்து வெளியிடும் உரிமை சட்டப்படி தமக்கே உரியதென்றும், பாரதியின் எப்பாடலையும் தம் அனுமதியின்றித் திரைப்படத்தில் பயன்படுத்தக் கூடாதென்றும், அவ்வாறு சேர்த்திருந்தால் அதனை உடனே நீக்க வேண்டுமென்றும், அல்லாவிடின் தாம் இழப்பீடு பெறச் சட்ட நடவடிக்கை எடுக்க நேரும் என்றும் தம் வழக்குரைஞர் மூலம் 29 ஜனவரி 1948 எனும் நாளிட்ட அறிவிப்புக் கடிதம் அனுப்பினார். இழப்பீடாக ஐம்பதாயிரம் ரூபாய் கேட்க இருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். காந்தி சுடப்படுவதற்கு முந்திய நாள் ஏவி. மெய்யப்ப செட்டியார் அனுப்பிய கடிதத்தை

2 பிப்ரவரி 1948இல் அவ்வை சண்முகம் கிடைக்கப்பெற்று அதிர்ந்தார். தம் வக்கீல் தாண்டவன் செட்டியாருடன் கலந்துகொண்டு, 'பாரதி பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்தென்றும், அவற்றிற்குத் தனி மனிதர் உரிமை கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாதென்றும்' டி.கே.எஸ். சகோதரர்கள் 5 மார்ச் 1948இல் பதிலிறுத்தனர்.

இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நாடகங்களின் மூலமாகப் பிரசாரம் செய்தவர் என்ற முறையில் காங்கிரஸ் தலைவர்களுடன் நட்புப் பழக்கம் தி.க. சண்முகத்திற்கு இருந்தது. இந்நல்லுறவைப் பயன்படுத்தி. தி.க. சண்முகம் சென்னை மாநிலத்தின் பிரதமரான ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியாருக்கும், அவருடைய அமைச்சரவையில் உணவு - சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் தி.சே.சௌ. ராஜன் ஆகியோருக்கும் ஒரே நாளில் (5 ஏப்ரல் 1948) தனித்தனிக் கடிதங்களைத் தம் கைப்பட எழுதி அனுப்பினார்.

நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர்பெற்ற ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை 'நேர்மை வழியில் நின்று தொண்டாற்றும் தலைவரவர்கட்கு நாடகக் கலைஞன் ஷண்முகம் வணக்கம்' என்று விளித்துத் தொடங்கிய கடிதம், 'தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை விரிவுரையெழுதி வீணாக்க மாட்டேன்' என்று கூறி, ஒரு விரிவான துண்டறிக்கையை இணைத்ததோடு, 'சத்தியத்தின் வழி நடக்கும் தாங்கள் இதற்குத் தக்க பரிகாரம் அளிப்பீர்களென்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது' என்று முடித்திருந்தார்.

தி.சே.சௌ. ராஜனுக்கு எழுதிய கடிதமும் இதே போல் சுருக்கமாகவும், துண்டறிக்கை இணைப்புடனும் அமைந்திருந்தது. 'சுதந்திர நாட்டில் நமது மகாகவியின் செந்தமிழ்க் கவிதைகளுக்குத் தனிமனிதர்கள் உரிமை கொண்டாடி தடை விதிப்பது நீதியா?' என்று தி.க. சண்முகம் அறச்சீற்றத்தோடு கேட்டிருந்தார்.

'பாரதிக்கு விடுதலை வேண்டும்!' என்ற தலைப்பில் அமைந்திருந்த துண்டறிக்கை 28-3-1948 என்று நாளிட்டு, டெமி 1ஜ்8 அளவில் இரு பக்கமும் அச்சிட்டு கோயம் புத்தூரிலிருந்து வெளியானதாகும். பாரதி படைப்புகளை ஏன் நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதற்கான ஆணித்தரமான வாதங்களை உணர்ச்சிப்பாங்கான நடையில் வேகத்துடன் முன்வைக்கும் ஆவணம் இது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் அரசின் தடைக்கு ஆளான பாரதி பாடல்கள் சுதந்திர இந்தியாவில் தனிமனிதரால் தடைப்படுத்தப்படுகின்றது என்று வாதாடிய தி.க. சண்முகம், 'கவிஞனின் பரந்த நோக்கத்தை குறுகிய வியாபார நோக்கங்கள் சிதைக்கின்றன' எனக்

குமுறினார். 'தமிழ்நாட்டின் அமரகவியை... இருட்டில் பெட்டியில் பூட்டிவைத்து வியாபாரம் நடத்த முயலும் வேடிக்கையை' அனுமதிக்கலாகாது என்று முறையிட்டார். ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கும் தமக்குமான வழக்கில் 'சட்டப்படி... தீர்ப்பளிக்க வேண்டிய இடம் நீதிஸ்தலமே யென்றாலும், பாரதி பாடல் உரிமை பற்றி சுதந்திர சர்க்காரில் மக்கள் தீர்ப்பென்னவென்று' கேட்கத் தமக்கு உரிமை உண்டென்றும் அவர் வாதிட் டார். “பாரதியின் பாடல்களும் இலக்கியங்களும் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து; தனிமனிதர்களுக்கு இதில் எவ்வித உரிமையுமில்லை' என்று ஏன் சென்னை சர்க்கார் ஒரு பிரகடனம் வெளியிடக் கூடாது?” என்று ஓர் அறைகூவலையும் இத்துண்டறிக்கை முன்வைத்தது. ஓர் இலக்கியப் படைப்பின் காப்புரிமையை அரசாங்கம் கைப்பற்றி மக்கள் உடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை அதற்கு முன் வரலாறு அறியாதது என்பதை இங்கு மனங்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்திற்கு முறையிடுதல், துண்டறிக்கை வெளியிடுதல் என்ற அளவில் தி.க. சண்முகம் நிற்கவில்லை. 1948 ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலுமாகப் பயணம் செய்து, பாரதி படைப்புகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டலானார்.

பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவையொட்டிய விழைவுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்கும்முகமாகப் 'பாரதி விடுதலைக் கழகம்' என்ற ஓர் அமைப்பு அமைக்கப்பட்டது. இதன் தோற்றமும் செயல்பாடும் பற்றிச் சிறிது குழப்பம் நிலவுகிறது. 1947 அக்டோபரில் எட்டயபுரம் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவில் ஜீவாவும் நாரண. துரைக்கண்ணனும் ம.பொ. சிவஞானமும் பாரதி நூல்களைப் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று பேசியதைத் தொடர்ந்து, நாரண. துரைக் கண்ணன் இந்த அமைப்பை ஏற்படுத்தியதாகவும், இதில் ஆர்வமுள்ளவர்களைத் திரட்டி உறுப்பினராக்க 'அறிக்கைகள் பறந்த'தாகவும் எதிரொலி விசுவநாதன் குறிப்பிடுகிறார்.

பாரதி விடுதலைக் கழகத்தின் முதல் கூட்டம் 11.3.1948இல் ச.து.சு. யோகியின் தலைமையில் நடைபெற்றது அதன் தலைவராக வ.ரா., துணைத் தலைவர்களாக நாரண. துரைக்கண்ணனும் அ. சீனிவாச ராகவனும், செயலாளர்களாகத் திருலோக சீதாராமும் வல்லிக் கண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், வ.ரா. தலைமைப் பொறுப்பேற் பதில் ஓர் இடர் இருந்துள்ளது. அப்போது வ.ரா.வுக்கு அறுபது நிறைந்து மணிவிழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சூழ்நிலையில் அவருக்குப் பண முடிப்பு வழங்குவதாகவும் திட்டம். இந்நிலையில் புரவலராக விளங்கக்கூடிய ஏவி. மெய்யப்ப செட்டியாரின் 'பகைமைக்கு ஆளாக விரும்பாமல்' வ.ரா. தலைமையேற்பதைக் கல்கி தடுத்து, அனைவர்க்கும் ஏற்புடைய நாரண. துரைக்கண்ணனைத் தலைவ ராக்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடெங்கும் பிரச்சாரப் பயணங்கள் மேற் கொள்ளப்பட்டதென்றும், டி.கே.எஸ். சகோதரர்கள் சந்தித்த வழக்கு விவகாரத்தின் காரணமாக 'எழுச்சி' ஏற்பட்டதென்றும் எதிரொலி விசுவநாதன் எழுதுகிறார்.

பாரதி விடுதலைக் கழகத்தின் பிரசாரமும், தி.க. சண்முகத்தின் விண்ணப்பங்களும் அரசாங்கத்திற்கு வந்திருந்த நிலையில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் இது பற்றி டி.எஸ். சொக்கலிங்கத்தைத் தொடர்புகொண்டு சில நடவடிக்கைகளை எடுத்ததாக நாரண. துரைக்கண்ணனும் எதிரொலி விசுவநாதனும் குறிப்பிடுகின்றனர். அரசு ஆவணங்களில் இது பற்றிக் குறிப்பில்லை. இதன் விளைவாகவே தி.க. சண்முகம், நாரண. துரைக்கண்ணன், அ. சீனிவாசராகவன் முதலானோர் திருநெல்வேலிக்குச் சென்று செல்லம்மா பாரதியைச் சந்தித்தனர் என்றும் எதிரொலி விசுவநாதன் குறிப்பிடுகிறார்.

கோவையில் அகிலனின் 'புயல்' நாடகத்தை அரங்கேற்றிவிட்டு 18 ஏப்ரல் 1948இல் புறப்பட்டுச் சென்னை சென்ற தி.க. சண்முகம், அங்கே நாரண. துரைக் கண்ணனைக் கண்டு பேசிவிட்டு, அடுத்து பரலி சு. நெல்லையப்பபிள்ளை, வ.ரா., தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆகியோரைச் சந்தித்தார். பரலி சு. நெல்லையப்பர் பாரதியால் 'தம்பி' என்று அழைக்கப்பட்டவர்; பாரதி நூல்களை அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளியிட்டவர். வ.ரா. பாரதியின் நண்பர்; மகாகவி பாரதியார் என்ற முக்கியமான வாழ்க்கை வரலாற்றுச் சித்திரத்தை எழுதியவர்; சிதறிக்கிடந்த பாரதி எழுத்துகளைத் திரட்ட ஒரு காலத்தில் முன்முயற்சி எடுத்தவர். தெ.பொ.மீ. தமிழறிஞர்; தேசிய இயக்கத் தலைவர்களால் நன்கு மதிக்கப்பெற்றவர். பாரதி பாடல்கள் மக்களுடைமை ஆக வேண்டும் என்ற கருத்தொற்றுமையை உருவாக்கி அம்முயற்சிக்கு அச்சான்றோர்களின் நல்லாசியையும் அவர் பெற்றார்.

நெல்லையில் செல்லம்மா பாரதியையும்

தங்கம்மாள் பாரதியையும் அவர்களுடைய கைலாசபுர இல்லத்தில் சந்தித்துப் பாரதி விடுதலைக் கழகம் பேசியது. பாரதியின் படைப்புகள் பொதுச் சொத்தாவதில்

தமக்குத் தடையில்லை என்று சொன்னதோடு எழுத்துப் பூர்வமாகவும் தங்கள் ஒப்புதலை அவர்கள் வழங்கினர்.

அப்பொழுது, பாரதியின் எழுத்துகளைப் பொதுச் சொத்தாக்குவதற்கு அவர் இசைகின்றாரா என உசாவி டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய கடிதத்தை அவர்கள் கையில் எடுத்துச் சென்றிருக்கின்றனர். அப்பொழுது23.4.48இல் அதற்கு இசைந்து செல்லம்மா ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார். இதைத் தி.க. சண்முகமும் குறிப்பிடுகிறார்.

செல்லம்மா பாரதி அறிவித்த இசைவு வாக்கியங்களாக எதிரொலி விசுவநாதன் குறிப்பிடுவதாவது:

ஓம்: கனம் பிரதம மந்திரி இராமசாமி ரெட்டியார் அவர்களுக்குச் சக்தி அருள்புரிக. மகாகவி பாரதியாருடைய பாடல்களையும் இலக்கியங் களையும் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் கிளர்ச்சி நடந்துவருவதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாகப் 'பிரசண்ட விகடன்' ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களும், சிந்தனை ஆசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களும் என்னைக் காணவந்தார்கள். பாரதியார் இலக்கியங்களில் யார்யாருக்கு உரிமைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சென்னை அரசாங்கமே பெற்றுத் தமிழ் மக்களுக்குப் பொதுவு டைமையாக வழங்க உத்தேசித்திருப்பதாகவும், இந்தப் பணியில் தாங்கள் மிகவும் சிரத்தை காட்டுவதாயும் என்னிடம் சொன்னார்கள். தங்கள் பெருந்தன்மையை மனமாரப் பாராட்டுகிறேன். இப்போதுள்ள உரிமைகளையும், இனி எழக்கூடிய உரிமைகளையும் நியாயமான முறையில் அரசாங்கமே பெற்றுப் பொதுமக்களுக்கு வழங்குவது எனக்குப் பூரண சம்மதம். தங்கள் முயற்சி சக்தி அருளால் வெற்றி பெறுக. ஆனால் ஒன்று இதைச் சொல்லக் கூசுகிறேன்; சொல்லாமலும் இருக்க முடியவில்லை. என் கணவருடைய இலக்கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக எனக்கோ அவருடைய குடும்பத்தாருக்கோ விசேடமான வசதி ஏற்படவில்லை என்பது தாங்கள் அறிந்ததே. தரும நியாயமான முறையில் இந்தப் பணியை நிறை வேற்றுவீர்கள் என்று பரிபூர்ணமாக நம்புகிறேன்.

இந்த இசைவுக் கடிதம் அரசுக் கோப்பில் இல்லை. பின்னாளில் 14.2.1949இல் செல்லம்மா பாரதியும் தங்கம்மாள் பாரதியும் அளித்த இசைவுக் கடிதம் மட்டுமே உள்ளது. முதல் கடிதம் ஓமந்தூரார் பார்வைக்கு மட்டுமேயானதாக இருந்திருக்கலாம். இரண்டாம் கடிதம் திருநெல்வேலி தாசில்தாரால் அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்கப் பெறப்பட்டதால் அக்கடிதம் மட்டுமே அரசாணையில் இடம்பெற்றதற்கான காரணமாகலாம்.

பாரதியின் மனைவிக்கும் மகளுக்கும் சட்டபூர்வமான உரிமை இல்லாத நிலையிலும் அவர்களுடைய ஒப்புதல் பெரும் தார்மீகப் பலமாக அமைந்தது. 'என் கணவருடைய இலக்கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக எனக்கோ அவருடைய குடும்பத்தாருக்கோ விசேடமான வசதி ஏற்படவில்லை' என்ற பாரதியின் வாழ்க்கைத்துணையின் வாசகங்கள் எவர் மனத்தையும் கரைத்துக் கண்ணீர் மல்கச் செய்திருக்கும் என்று சொல்வது மிகை. நாரண. துரைக்கண்ணன் போன்றயார் பக்கமும் சாராத பண்பாளர்கள் இம்முயற்சியில் தலைப்பட்டதும் பாரதி பொதுச் சொத்தாக வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்தது.

நாரண. துரைக்கண்ணன் பாரதி யாத்திரைக்குப் புறப்பட்ட வேளையில் அவருடைய நான்கு வயது மகன் உடல் நலிவுற்றிருந்தான். நெல்லையில் அவர் இருந்தபொழுது 23 ஏப்ரல் 1948இல் அவன் காலமாகி விட்டான். நாரண. துரைக்கண்ணன் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவனுடைய இறுதிச் சடங்கும் நடந்துவிட்டது. மூன்று நாள் கழித்து 26 ஏப்ரலில் வீட்டுக்குச் சென்றபொழுதுதான் இத்துயரச் செய்தியை அவர் அறிந்தார். பாரதி நாட்டுடைமைக் கோரிக்கைக்குக் களப்பலியாகக் கருதப்பட்டு அதற்கொரு உணர்ச்சிகரமான உரமாகவும் இத்துயரம் அமைந்து, பல்லாண்டுகள் கழித்தும் நினைவுகூரப்படும் ஒரு நிகழ்ச்சியாக மக்கள் மனங்களில் நிலைத்துவிட்டது.

அதன்பின் 1 மே 1948இல் கோவைக்கு வந்திருந்த காமராசரைத் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் நடத்திவந்த இராமகிருஷ்ண வித்தியாலயம் பள்ளியில் சந்தித்துத் தம் கோரிக்கையை முன்வைத்து அவர் ஆதரவையும் பெற்றார் தி.க. சண்முகம். ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் காமராசரே அக்காலக் காங்கிரஸ் கட்சியின் முதன்மையான தலைவராக விளங்கினார். அவ்வகையில் அவரது ஆதரவைப் பெற்றதும் ஒரு முக்கியச் செய்தியாகும். நேரிடையாக இல்லாவிட்டாலும், பாரதி விடுதலைக் கழகம் கொடுத்த அழுத்தம் அரசாங்கம் எடுத்த முடிவுக்கு அடிகோலியது என்பது ஐயமில்லை.

நாடகக் கலைக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் அவ்வை தி.க. சண்முகம் ஆற்றியிருந்த பங்கு அவருடைய கோரிக்கைக்கு வலுசேர்த்தது. வியாபாரப் போட்டியின் விளைவாக அவர் இதில் முனைப்பு காட்டியதாக ஒருவரும் கருதவில்லை. காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுகளுடனும் அவர் நல்லுறவு கொண்டிருந்தார். ஒரே ஊர்க்காரர்கள் என்ற முறையில் ஜீவாவுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. நாடக மேடையில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர் என்ற முறையில் பெரியார், அண்ணா முதலான திராவிட இயக்கத் தலைவர்களின் நன்மதிப்பையும் அவர் பெற்றிருந்தார்.

பாரதி விடுதலைக் கழகத்தின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரளத் தலைப்பட்டது. இதன் தொடர்பில் திண்டுக்கல் நகரக் காங்கிரஸ் குழு, சேலம் நகராட்சி முதலானவற்றின் தீர்மானங்களை அரசாங்கத்தின் கோப்புகளில் காண முடிகின்றது.

இதற்கிடையில் சட்ட நடவடிக்கைகளும் தொடங்கியிருந்தன. டி.கே.எஸ். சகோதரர்கள் மீது மட்டுமல்லாது, 'பில்ஹணன்' படத் தயாரிப்பில் தொடர்புடைய சேலம் சண்முகா பிலிம்ஸ், காரைக்குடியின் இராமநாதன் பிக்சர்ஸ், ஸ்ரீரங்கத்தின் சங்கர் பிக்சர்ஸ், சேலம் ஜெயா பிலிம்ஸ் ஆகியோரையும் ஏவி. மெய்யப்ப செட்டியார் வழக்கில் இணைத்திருந்தார். வழக்கு தீர்க்கப்படும்வரை திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்றும் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கிடை விண்ணப்பத்தை அவர் தாக்கல் செய்திருந்தார். தன் வழக்கில் 23 ஆவணங்களை அவர் தாக்கல் செய்தார். பாரதி பிரசுராலயத்திற்குப் பதிப்புரிமையை வழங்கிச் செல்லம்மா பாரதி கையெழுத்திட்டிருந்த பத்திரம், பாரதி பிரசுராலயத்திற்கும் ஜெய்சிங்லால் மேத்தாவுக்குமான ஒப்பந்தப் பத்திரம், ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கு உரிமையை மாற்றி ஜெய்சிங்லால் மேத்தா கையெழுத்திட்ட ஒப்பாவணம் ஆகியவை இவற்றுள் முதன்மையானவை. அகில இந்திய வானொலி மற்றும் திருவனந்தபுரம், மைசூர் வானொலி நிலையங்கள் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் ஒலிபரப்புரிமையை அங்கீகரிக்கும்வகையில் அளித்திருந்த ஆவணங்களையும் அவர் இணைத்திருந்தார். (திருவனந்தபுரமும் மைசூரும் தனி சமத்தானங்கள் என்பதால் அவற்றின் வானொலி நிலையங்கள் அகில இந்திய வானொலியிலிருந்து தனித்து இயங்கின.) சட்டக் கண் கொண்டு பார்க்கும் பொழுது ஏவி. மெய்யப்ப செட்டியாரின் தரப்பு மிக வலுவாக இருந்தது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

டி.கே.எஸ். சகோதரர்கள் தரப்பில் சில செய்தித்தாள் நறுக்குகளும், பாரதியின் நண்பரும் அவருடைய சில நூல்களை வெளியிட்டவருமான பரலி சு. நெல்லையப்பரின் வாய்மொழி ஒப்புதலுமே முன்வைக்கப்பட்டன. மேலும், பாரதி பிரெஞ்சு பகுதியான புதுச்சேரியில் வாழ்ந்தவராதலால் பிரிட்டிஷ் காப்புரிமைச் சட்டம் அவனுடைய படைப்புகளைப் பொறுத்தமட்டில் செல்லாது என்றும் சொல்லப்பட்டது. இவை சட்ட அடிப்படையில் சொத்தையானவை என்பதில் ஐயமிருக்க முடியாது. சாரமான வாதம் என்பது தார்மிக அடைப்படையில் அமைந்த வாதமேயாகும். பாரதி பாடல்களைப் 'பொதுச் சொத்தாகக் கருத வேண்டுமே ஒழிய தனிச் சொத்தாக அல்ல' என்றும், 'காப்புரிமைச் சட்டத்தின் வாலாயமான விதிகளும் பிரிவுகளும் பாரதியின் இலக்கியப் படைப்புகளை ஆள முடியா' என்பதாகவும் அந்த வாதம் அமைந்திருந்தது.

டி.கே.எஸ். சகோதரர்கள் தரப்பின் சட்ட நிலைப்பாடு வலுவற்றதாக இருப்பினும், மாவட்ட நீதிபதி பி. கோமன், ஏவி. மெய்யப்ப செட்டியாரின் இடையீட்டு விண்ணப்பத்தை 16 ஏப்ரல் 1948இல் தள்ளுபடி செய்தார். தாவாவுக்குரிய திரைப்படப் பகுதியின் நீளம் 90 அடி அல்லது 250அடி என்பதாகவே இருந்த நிலையில், பதிப்புரிமை மீறல் இருப்பின் அதற்கு இழப்பீடு பெறுவதே

தக்க நிவாரணமாக இருக்கும் என்று அவர் முடிவு செய்தார்.

பாரதி படைப்புகளை நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற இயக்கம் முனைப்பு பெற்றுவந்த வேளையில் சுதந்திர நாட்டின் புதிய அரசாங்கம் இதற்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டி.கே.எஸ். சகோதரர்களுக்கு வக்கீல் அறிக்கை அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இது பற்றிச் சட்டமன்றத்தில் ஆர்.வி. சாமிநாதன் கேள்வி எழுப்பினார் என்றும், பாரதியின் பதிப்புரிமையை அரசாங்கம் வாங்கும் எண்ணம் உண்டா என்று அவர் கேட்டார் என்றும் எதிரொலி விசுவநாதன் பதிவு செய்துள்ளார்.

தி.க. சண்முகம் எழுதிய கடிதங்கள் கிடைக்கப்பெற்ற இரண்டொரு நாளிலேயே முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் கைப்பட எழுதப்பட்ட நறுவிசான இரு குறிப்புகளை அரசாங்கக் கோப்புகளில் காண முடிகின்றது. தமக்கு வந்த கடிதத்தில் அவர் எழுதிய குறிப்பு வருமாறு: 'சட்டச் செயலாளர் என்னைக் கண்டு நிலைப்பாட்டை விளக்கவும்'. தி.சே.சௌ. ராஜனுக்கு வந்த கடிதத்தில் ஓமந்தூரார் எழுதிய குறிப்பு அவர் ஒரு கொள்கை முடிவை எடுத்துவிட்டதைக் காட்டுகிறது. 'மாண்புமிகு கல்வி மந்திரி பார்த்துப் பதிப்புரிமையைப் பெற ஏற்பாடுகள் செய்க'. ஒருநாள் இடைவெளியிலேயே பாரதி பதிப்புரிமையை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை ஓமந் தூரார் எடுத்துவிட்டார் என்பது தெளிவாக வெளிப்படுகின்றது.

ஒருவகையில் இதில் வியப்பதற்கொன்றுமில்லை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாரதி பாடல்கள் தேசிய அணிதிரட்டலுக்கு ஒரு முக்கியக் கருவியாக இருந்திருக்கின்றன. அரசியல் கட்சியாகக் காங்கிரஸ் அதன் மூலமாக நல்ல ஆதாயமும் ஈட்டியிருந்தது. அமைச்சரவையில் இருந்த தலைவர்கள் பலரும் பாரதியின் பாடல்களில் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டு அவற்றில் மனத்தையும் பறிகொடுத்திருந்தனர். மக்கள் உணர்வும் இதற்கு ஆதரவாக இருந்தது என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். எளிமைக்கும் நேர்மைக்கும் பேர்பெற்ற ஓமந்தூரார் முதலமைச்சராகவும், தமிழ் வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்த தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராகவும் இருந்தது அரசின் கொள்கை முடிவைக் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்கிவிட்டன.

அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்துவிட்டாலும் அரசாங்க இயந்திரம் அவ்வளவு விரைவில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கம் விதிகளையும் நடைமுறைகளையும் சிறிதும் வழுவாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கழிபேர் அக்கறை காட்டியது. இதன் விளைவாக ஓமந்தூராரின் தாளோரக் குறிப்பு சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளிப்படுவதற்குச் சற்றொப்ப ஓராண்டாயிற்று.

தி.சே.சௌ. ராஜனுக்கு அவ்வை சண்முகம் எழுதிய கடிதம் ஓமந்தூரார் குறிப்பு எழுதிய அதே நாளில் கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் மேசைக்கு வந்துவிட்டது. அவினாசிலிங்கம் இதில் நேரடி முனைப்பைக் காட்டத் தொடங்கினார். 20 ஏப்ரல் 1948இல் பிரதமருக்கு எழுதிய குறிப்பில், இந்த விவகாரத்தில் தலையிட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்த அமைச்சரவை தமக்கு அதிகாரம் வழங்குமானால், உரிமையின் கைமாற்றத்திற்கு எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்பதை முடிவுசெய்து, விவகாரத்தை முடித்துவிடலாம் என்று அவர் கூறினார். பாரதியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக வேண்டும் என்பதில் இவ்வளவு முனைப்பைக் காட்டிய அவர், மிக விரிவாக 400 பக்க அளவில் ஆங்கிலத்தில் எழுதிய தன்வரலாற்று நூலில் ஒரே ஒரு வரியை மட்டுமே - காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனைகளில் ஒன்றாக - போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார். இது வியப்புக்கு உரியது என்பதோடன்றி வரலாற்று ஆய்வுக்கும் ஒரு பேரிழப்புமாகும்.

கோப்பு, மேசைக்கு வந்த உடனேயே (8.4.48) அவினாசிலிங்கம் செட்டியார் சட்டச் செயலருக்கு ஒரு குறிப்பு எழுதினார். 'எல்லாரும் பயன்படுத்தும்வகையில் பாரதி படைப்புகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது பற்றி பெரிய அளவில் கிளர்ச்சி நடக்கின்றது. இவ்வுரிமைகள் பற்றிய சட்ட நிலையைப் பரிசீலிப்பதோடு, சட்டப்படி இவ்வுரிமைகளை நாம் கைவயப்படுத்த இயலுமா எனவும் பரிசீலிக்க வேண்டும்.'

கல்வித் துறை இதைப் பற்றி வாலாயமான முறையில் பொதுக் கல்வி இயக்குநரை வினவியபொழுது, பொறுமையிழந்த அவினாசிலிங்கம் செட்டியார், 'பொதுக் கல்வி இயக்குநரின் குறிப்பு எந்தத் தெளிவையும் தராது' என்று மட்டையடியாகச் சொன்னதோடு, 'சட்ட நிலையைக் கருத்தில்கொண்டு அதைப் பொதுச் சொத்தாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று 3 மே 1948இல் அழுத்தமாக எழுதினார்.

அவினாசிலிங்கம் செட்டியாரின் அனுமானம் தவறவில்லை. அவசர நினைவூட்டலுக்குப் பிறகு 4 மே 1948இல் பொதுக் கல்வி இயக்குநர் கையளித்த குறிப்புரை புதிய செய்திகள் எதையும் கொண்டிருக்கவில்லை. புத்தகப் பதிவாளரைக் கலந்துகொண்டு அவர் அளித்த அறிக்கையானது, 1914இல் பதிப்புரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பதிப்புரிமையைப் பதிவு செய்யும் நடைமுறை புத்தகப் பதிவாளரால் கைவிடப்பட்டதென்றும், பாரதி பிரசுராலயமே பாரதி படைப்புகளின் பதிப்புரிமைக்குச் சொந்தக்காரர் என்றும் சில 'அரிய' உண்மைகளைக் கொண்டிருந்தது.

அரசு அதிகாரிகளின் செயல்பாட்டினால் அதிருப்தியுற்றோ என்னவோ, தமது நண்பரும் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் தினசரி நாளேட்டின் ஆசிரியருமாகிய டி.எஸ். சொக்கலிங்கத்தை நாடி, அவர் மூலமாகச் சட்ட ஆலோசனையைப் பெற்றார் அவினாசிலிங்கம் செட்டியார். கருத்துக் கேட்ட ஒரே வாரத்தில் (16.4.48) பாரிஸ்டர் டாக்டர் ஏ. கிருஷ்ணஸ்வாமியின் (ஆர்க் காடு இராமசாமி முதலியாரின் மகன்) சட்ட ஆலோசனைக் குறிப்பைப் பெற்றுக் கொடுத்துவிட்டார் டி.எஸ். சொக்கலிங்கம். ஆனால் டாக்டர் ஏ. கிருஷ்ணஸ்வாமியின் குறிப்பும் பொருத்தமுடையதாக அமையவில்லை. 'மூல உரிமையாளர் (பாரதி) மறைந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகும், 50 ஆண்டுகள் ஆகும்வரையும், மூல உரிமையாளரின் சட்டபூர்வப் பிரதிநிதிகள் பாடல்களைப் பிரசுரிக்கலாம்; வானொலியிலும் இசைத்தட்டிலும் திரையிலும் பயன்படுத்தலாம்' என்று இங்கிலாந்து நாட்டின் 1911ஆம் ஆண்டு காப்பிரைட் சட்டத்தின்படி கருத்துரைத்தார். பாரதியின் பதிப்புரிமை கைமாறியதன் பின்னணி விவரங்களை முழுவதும் அறியாத நிலையில் செய்யப்பட்ட கருத்துரையாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

இதற்கிடையில், கோவை நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கின் நடவடிக்கைகளும் முடிவுகளும் அரசாங்கத்தின் கொள்கை முடிவைப் பாதிக்கும் என்பதால் இவ்வழக்கு விவரங்களை அறிந்து தகவலளிக்குமாறு கோயம்புத்தூர் ஆட்சியரை அரசாங்கம் 29.4.48இல் அறிவுறுத்தியது. சிறப்புக் கவனத்துக்குரியதாக இதைக் கருதுமாறும் கூறியது. இதற்கிடையில், 5 மே 1948இல் கோவை ஸ்ரீ இராமகிருஷ்ண வித்யாலயத்தில் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரைச் சந்தித்த தி.க. சண்முகம், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பிரச்சனை தொடர்பான பல ஆவணங்களை அனுப்பி வைத்தார். அவற்றுள் முக்கியமானவை:

1. 15 ஜூன் 1931இல் செல்லம்மா பாரதியும், அவருடைய மகள்களான தங்கம்மாளும் சகுந்தலாவும் பண்டிட் ஹரிஹர சர்மா, சி. விஸ்வநாத அய்யர், கே. நடராஜன் ஆகியோருடன் செய்துகொண்ட உரிமை மாற்று ஆவணத்தின் பிரதி. இதன்படி இரு தரப்பினரும் கூட்டாகப் பாரதி பிரசுராலயம் என்ற பெயரில் பதிப்பகத்தை நடத்துவர். இதற்கான முழுக் காப்புரிமைத் தொகை 4,000 ரூபாய் ஆகும். அதற்குமுன் கொடுத்த தொகைகளுக்கு ரூ 2,400 தள்ளிவைப்பதோடு ரூ 200 வீதம் ஒவ்வொரு அரையாண்டும் மிஞ்சிய தொகை செலுத்தப்படும் என்பது உடன்படிக்கையின் சாரம்.

2. பாரதி பிரசுராலயத்திற்கும் ஜெய்சிங்லால் மேத்தாவுக்கும் 4 ஆகஸ்டு 1934இல் செய்துகொள்ளப்பட்ட உரிமை மாற்று ஆவணம் இசைத்தட்டுகளிலும் திரைப்படங்களிலும் வேறுவகையான ஒலிபரப்புக் கருவிகள் வழியும் பாரதி பாடல்களைப் பதிவு செய்தல் தொடர்பானது. இதற்கென 450 ரூபாய் மொத்தத் தொகையாகவும், விற்கப்படும் ஒவ்வொரு இசைத் தட்டுக்கும் ஓரணா வீதம் காப்புரிமைத் தொகையும் பாரதி பிரசுராலயத்திற்கு வழங்க வேண்டும்.

3. ஜெய்சிங்லால் மேத்தாவிற்கும் ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கும் 10 செப்டம்பர் 1946இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். இதன்படி முழு ஒலிப்பரப்புரிமையும் 9,500 ரூபாய்க்குக் கைமாறியிருந்தது.

இந்தப் பின்னணியில் பாரதி காப்புரிமையை அரசாங்கம் கையகப்படுத்துவதில் காலத் தாழ்வு ஏற்பட்டு வந்தது. தமிழ்ப் பண்பாட்டு உலகோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்த தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் மீது அழுத்தங்கள் கூடிவந்தன. 19 மே 1948ஆம் நாள் அவர் கல்வித் துறைச் செயலருக்கு எழுதிய குறிப்பு வருமாறு: 'இதன் தொடர்பாகப் பெரிய அளவுக்குக் கிளர்ச்சி நிகழ்ந்துவரும் நிலையில் எவ்வளவு சீக்கிரமாகப் பதிப்புரிமையைக் கையகப்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அவசியமில்லாமல் இதைத் தாமதப்படுத்தினால் பொதுப் போராட்டங்களுக்கு நாம் அடிபணிய வேண்டியிருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் இவ்விஷயம் பரிசீலிக்கப்பட்டு, என்முன் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.'

தம் உரிமையை விட்டுக்கொடுக்க விருப்பமில்லாத ஏவி. மெய்யப்ப செட்டியாரேகூட ஒப்புக்கொள்ளுபடி, பாரதி விடுதலைக்கான போராட்டம் பரந்துபட்டதாகவும், மக்களின் நம்பிக்கைக்குரியதாகவும் மாறியிருந்தது. 'இதில் சம்பந்தப்பட்ட கட்சிகள் குதர்க்கமான தர்க்கத்தின் மூலமாக சந்தேகத்திற்கப்பாற்பட்ட வகையில் தேசப்பக்தியும், கைமாறு கருதா கோரிக்கைகளும் நன்னோக்கமும் கொண்ட பண்பாளர்களைத் தமது ஆதரவாளர்களாகப் பெற்றுவிட்டன.' உண்மையில், இந்தப் போராட்டம் வெற்றிப் பாதையில் முன்னேறியதற்கு இதன் முன்னணியில் இருந்தவர்களின் நம்பகத்தன்மையும், அவர்களுடைய கோரிக்கையில் இருந்த உண்மையும், இதற்குச் சார்பாக வெகுமக்களின் ஆதரவைத் திரட்ட முடிந்ததுமே ஆகும்.

பாரதி விடுதலைக் கழகத்தின் கிளர்ச்சி முதலில் ஏவி. மெய்யப்ப செட்டியாரையும் அவர் கைவசமிருந்த ஒலிபரப்புரிமையினையுமே குறிவைத்து தொடங்கப் பட்டது. போராட்டம் கூர்மைப்பட்டு, வெகுசன ஆதரவு திரண்டு வந்த நிலையில், 'இவ்விஷயம் மீண்டும்மீண்டும் தமிழ்நாட்டின் சில வட்டாரங்களில் விவாதத்திற்குரியதாக இருந்ததாலும்,' 'பொது நன்மை இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமாதலாலும்,' ஏவி. மெய்யப்ப செட்டியார் தாமாகவே

2 ஜூன் 1948இல் சென்னை மாநிலத்தின் பிரதமருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். பாரதியின் படைப்புகளை மீட்க வேண்டும் என்ற போராட்டத்தின் நெருக்கடியின் விளைவாக இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்பதில் தடையில்லை. தாம் தயாரித்த படங்களெல்லாம் 'வெகுசனக் கேளிக்கையோடு தூய்மையும் உயர்தரக் கலைத் தயாரிப்புத் தன்மையும் இணைந்தவை' என்றும், 'எவ்வளவு கறாரான விமர்சகனும் அவற்றை எந்தக் குறையும் கூறிவிட முடியாது' என்றும் பெருமை பீற்றிக்கொண்ட அவர், 'தமது படங்களைப் பிரதமருக்கும் அவருடைய அரசாங்கத்தின் பிற உறுப்பினர்களுக்குமான சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்ய' முன்வந்தார். 'கேளிக்கையோடு ஒழுக்க நோக்கத்தையும் புத்தி புகட்டலையும் இணைக்க வேண்டும் என்ற தம் திட்டத்தின் காரணமாகவே' பாரதி பாடல்களுக்கான ஒலிபரப்புரிமையைத் தாம் வாங்கியதாக வாதிட்ட அவர், பாரதியின் பாடல்கள் சிலவற்றைத் 'தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கச் செய்வதற்காக'த் தாம் 'கணிசமான நேரத்தையும் உழைப்பையும் ஆராய்ச்சியையும் செலவிட்டதாக'க் கூறினார். ஒலிபரப்புரிமையைத் தாம் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் கூறிய நியாயமாவது, 'சிறந்த பலன் பெறவேண்டுமென்றால் உயர்தரக் கலைஞர்களைக் கொண்டு சரியான முறையில்' பாரதி பாடல்களைப் பாடுவிக்க வேண்டும் என்பது.

பிரத்யேக ஒலிபரப்புரிமையை நான் தக்கவைத்துக் கொண்டதனாலேயே மிக உயர்ந்த தரத்தில் பாடல்களைப் பாடி அவற்றின் மேன்மையைத் தக்கவைக்க முடிந்தது. இசைத்தட்டுகளில் பதிவு செய்தல் தொடர்பாக ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, திருமதி டி.கே. பட்டம்மாள், ஸ்ரீ டி.ஆர். மகாலிங்கம் போன்ற மேன்மையான தரமுடைய பாடகர்களை மட்டுமே பாட அனுமதித்துள்ளேன்.

வெகுமக்களால் பாரதி பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட ஏவி. மெய்யப்ப செட்டியார், அதே வேளையில் 'பாடப்படும் முறை குறைகூற முடியாததாக இருக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார். அகில இந்திய வானொலிக்கும் திருவிதாங்கூர், மைசூர் வானொலி நிலையங்களுக்கும் பாரதி பாடல்களை ஒலிபரப்பும் உரிமையைக் கட்டணமின்றித் தாம் கொடுத்துவந்ததையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. “ஆனால் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் கிராமபோன் கம்பெனிகள் பொறுத்தமட்டில்' தம்முடைய நிலைப்பாடு வேறு; ஏனெனில் பாரதி பாடல்களை அவர்கள் பயன்படுத்துவதன் பிரதான நோக்கம் பொது நன்மை அல்ல, மாறாகப் பொது மக்களின் நல்லெண்ணத்தையும் அவர்களிடம் இப்பாடல்களுக்கிருந்த பிரபல்யத்தையும் சுரண்டுவதே ஆகும்” என்று அவர் வாதிட்டார். 'கலையைக் கலைக்காகவே மதிக்கின்றவர்களுக்கும் அதனை வியாபாரத்திற்காகச் சுரண்டுபவர்களுக்கு'மான வேறுபாட்டைச் சில சுயநலச் சக்திகள் 'பாரதியின் ஆன்மாவும் படைப்புகளும் சிறை வைக்கப்படுவதாக'த் திரித்துக் கூறுவதாக அவர் வாதிட்டார். இச்சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இந்தச் சர்ச்சையைப் பெரிதாக்கி, உண்மைகளைத் தம் உள்நோக் கங்களுக்காகத் திரித்து, எந்தத் தீர்வையும் பலனளிக்காதவாறு செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனாலேயே அவர் அரசாங்கத்தை நாடி திட்டத்தை முன்வைப்பதாகக் கூறினார். அவர் முன்வைத்த திட்டம் வருமாறு: ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, பாரதி ஒலிபரப்புரிமையை அதற்கு அளிப்பதாகவும், அதன் அறங்காவலர்களுள் ஒருவராக அவரையும் (அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரையும்), அரசாங்கத்தின் நியமன உறுப்பினர்களாக இருவரையோ அதற்கு மேற்பட்டவரையோ கொண்டதாக அந்த அறக்கட்டளை இருக்கும். பாரதி பாடல்களைப் பயன்படுத்த விரும்புவோர் அந்த அறக்கட்டளைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டண விகிதங்களையும் நெறிமுறையினையும் அறக்கட்டளை வகுக்கும். தன் சொந்தப் பயன்பாடு எந்தத் தடையும் இல்லாமல் வாலாயமாகவும் கட்டணமின்றியும் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவே ஏவி. மெய்யப்ப செட்டியார் முன்வைத்த தீர்வும் திட்டமுமாகும்.

பரதியின் படைப்புகள் நாட்டுடைமையாவதில் தொடர்ந்து காலத் தாழ்வு ஏற்படுவதையும் தமிழ்ப் பண்பாட்டுலகின் பொறுமையின்மைக்கு ஆளாகி

யிருந்த அவினாசிலிங்கம் செட்டியார், 'தனிப்பட்ட கலந்தாலோசனை பயனளிக்காவிடில் பதிப்புரிமையை நீதிமன்றம் மூலமாகக் கையகப்படுத்தலாமா' என்றும் 7.6.1948இல் எழுதிய அரசாணைக் குறிப்பில் கருதியிருந்திருக்கிறார்.

கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடுத்த வழக்கு நிலுவையிலிருந்து அரசாங்கத்தின் கையைக் கட்டிப்போட்டிருந்தது. பொது மக்கள் பொறுமையிழந்து வந்ததாலும், பாரதியின் படைப்புகள் விரைவில் பொதுவுடைமையாக வேண்டும் என்று அவர்கள் விரும்பியதாலும் 'நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திராமல்' அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவினாசிலிங்கம் செட்டியார் முதலமைச்சரைத் தொடர்ந்து வற்புறுத்திவந்தார். ஆனால் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் இதற்கு இணங்கவில்லை. 'நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் (பதிப்புரிமையை) வாங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்க' என்று அவர் அறிவுறுத்தினார்.

கோவை நீதிமன்றத்தில் ஏவி. மெய்யப்ப செட்டியார் முன்வைத்த வாதங்களாவது தாம் அப்போது தயாரித்துவந்த, பாதாள உலகம் என்ற திரைப்படத்தில் 'தூண்டில் புழுவினைப் போல்' என்ற பாடலைப் பயன் படுத்துவதாகவும், பாரதியின் பாடல்கள் பொதுச் சொத்து என்ற வாதம் 'விளையாட்டானதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்' என்றும், இழப்பீடாகப் பதினோராயிரம் வேண்டும் என்பதோடு டி.கே.எஸ். சகோதரர்கள் பாரதி பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடையாணையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் தலைசிறந்த கவிஞராகிய பாரதியின் பாடல்கள் மக்களுக்காக எழுதப்பட்டதால் அவை பொதுச் சொத்தாக ஆகிவிட்டன என்றும், அவை சாதாரணமான, வழமையான பதிப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டவையல்ல என்றும் வாதிட்ட டி.கே.எஸ். சகோதரர்கள், பாரதி தம் பதிப்புரிமை முழுவதையும் பரலி சு. நெல்லையப்பருக்கு வாய்மொழியான உயில் மூலம் வழங்கிவிட்டதாகவும் வாதிட்டனர். மேலும் 1935ஆம் ஆண்டில் தாம் 'மேனகா' என்ற திரைப்படத்தில் பாரதியின் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலையும், 1941இல் 'குமாஸ்தாவின் பெண்' என்ற படத்தில் பாரதியின் சில பாடல்களையும் பயன்படுத்தியதாகவும், அச்சமயங்களில் ஜெய்சிங்லால் மேத்தாவோ, ஏவி. மெய்யப்ப செட்டியாரோ தடை சொல்லவில்லை என்பதையும் அவர்கள் பதிவு செய்தனர். பாரதி எழுதிய பல்லாயிரக் கணக்கான வரிகளிலிருந்து பன்னிரண்டு வரிகளைப் பயன்படுத்துவதால் பதிப்புரிமை மீறப்பட்டுவிட்டதாக வாதி கூறுவது விந்தையானது என்றும் டி.கே.எஸ். சகோதரர்கள் வாதிட்டனர்.

இச்சமயத்தில், அரசாங்கம் கேட்டுக்கொண்டதற் கிணங்க, 28 ஆகஸ்டு 1948இல், ஏவி. மெய்யப்ப செட்டியார் கல்வித் துறைச் செயலருக்கு மூன்று ஆவணங்களைக் கையளித்தார். செல்லம்மா பாரதி மற்றும் ஹரிஹர சர்மா, சி. விசுவநாதன், நடராஜன் ஆகியோருக்கிடையில் 15 ஜூன் 1931இல் கையெழுத்தான ஒப்பந்தம், பாரதி பிரசுராலயத்திற்கும் ஜெய்சிங்லால் மேத்தாவுக்குமான 4 ஆகஸ்டு 1934ஆம் நாளிட்ட ஒப்பந்தம், ஜெய்சிங்லால் மேத்தாவுக்கும் ஏவி. மெய்யப்ப செட்டியாருக்குமான 10 செப்டம்பர் 1946இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந் தங்களே அவை.

இவ்வாவணங்களை அரசாங்கம் தனது வழக்குரைஞருக்கு அனுப்பி அவருடைய ஆலோசனையைப் பெற்றது. 9 நவம்பர் 1948இல் அரசு வழக்குரைஞர் எச்.எம். ஸ்மால் பின்வருமாறு தம் கருத்துரையை வழங்கினார். சென்னை அரசாங்கம் கையகப்படுத்தக்கூடிய பதிப்புரிமை வரையறைக்குட்பட்டதாக இருக்கலாம் என்று அஞ்சிய ஸ்மால், இந்நிலையைத் தவிர்க்கும்பொருட்டுப் பாரதியின் நூல்கள் ஒவ்வொன்றும் எந்தக் காலத்தில், எந்த இடத்தில் வெளியாயின என்ற வரலாற்றை விரிவாக விசாரித்து அறிய வேண்டும் என்றார். மேலும், பாரதியின் குறிப்பிட்ட படைப்புகளுக்கு வெவ்வேறு நபர்களிடம் பதிப்புரிமை இருக்க வாய்ப்புள்ளதாதலால், அரசாங்கம் பாரதியின் படைப்புகளுக்குரிய மொத்த உரிமை யினையும் கையகப்படுத்த விரும்பினால், அனைத்துப் பதிப்புரிமையாளர்களையும், பதிப்புரிமை கையளிக்கப் பட்டவர்களையும் ஒன்றுசேர்த்து ஒரே ஆவணத்தின் மூலமாக அரசாங்கத்திடம் பதிப்புரிமையை ஒப்புவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசு வழக்குரைஞரின் கருத்துரை அரசாங்கத்தின் பலமாத குழப்பத்திற்கு முதல்முறையாகச் சரியான திசைவழியைக் காட்டியது என்றே சொல்ல வேண்டும்

இதன் பின்பு பாரதி படைப்புகளின் காப்புரிமையை அரசாங்கம் கையகப்படுத்து வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாயின. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியர், பாரதி படைப்புகளின் வரலாற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்குமாறு 10 ஜனவரி 1949இல் பணிக்கப்பட்டார். அதன்படி பல செய்திகள் தொகுக்கப்பட்டன.

திருநெல்வேலி தாசில்தார் கேட்டுக் கொண்டபடி செல்லம்மா பாரதியும் தங்கம்மாள் பாரதியும் 5 பிப்ரவரி 1949இல் ஒரு அறிக்கையை அவருக்கு அளித்தார்கள். அதன் நகலை ஒரு முகப்புக் கடிதத்தோடு அவினாசிலிங்கம் செட்டியாருக்குச் செல்லம்மா பாரதி அனுப்பிவைத்தார். இந்த அறிக்கை மிக முக்கியமானது. 1910 முதல் 1918 வரை புதுச்சேரியிலிருந்து வெளியான பாரதியின் நூல்கள் ஒன்பதைப் பட்டியலிட்டு (கண்ணன் பாட்டு, ஞானரதம், பாஞ்சாலி சபதம், தேசிய கீதங்கள் (நாட்டுப் பாட்டு), பாப்பா பாட்டு, முரசு, ஆறில் ஒரு பங்கு, கனவு, The Fox with the Golden Tail), 'இந்த 9 புஸ்தகங்களும் புதுச்சேரியிலுள்ளவர்களுக்காவது இந்தியாவில் உள்ளவர்களுக்காவது, அவராலாவது எங்களாலாவது பதிப்புரிமை கொடுக்கப்படவில்லை. பாரதியாராலேயே, அவருடைய சொந்தச் செலவின் பேரிலேயே பாட்டுக்களும் கதைகளும் அச்சடிக்கப்பட்டது. ஆகையால் பிரசுர உரிமை எங்களுக்கே பாத்யப்பட்டது.' 1931இல் பாரதி பிரசுராலயத்திற்குப் பெரும்பாலான பாரதி படைப்புகளின் உரிமையை நாலாயிரம் ரூபாய்க்குக் கொடுத்துவிட்டதை அங்கீகரித்த செல்லம்மா பாரதி, பாரதியின் படைப்புகளுக்குரிய உரிமை அனைத்தையும் பாரதி பிரசுராலயத்திற்குப் பாரதியின் மனைவி மக்கள் அளித்துவிட்டனர் என்று அனைவரும் கருதி வந்த நிலையில், ஆறில் ஒரு பங்கு, கனவு, The Fox with the Golden Tail ஆகிய மூன்று நூல்களுக்குமான உரிமை தங்களிடமே இருந்ததென்பதை வற்புறுத்தியிருந்தார்.

பாரதி படைப்புகளின் பதிப்பு வரலாறும், பதிப்புரிமையாளர்கள் பதிப்புரிமையைப் பெற்ற முறையும் தெளிவானவுடன் அவர்களிடமிருந்து உரிமையைப் பெறுவதற்கான அரசாங்க நடவடிக்கைகள் அடுத்தடுத்து நடந்தேறின.

இந்த நிலையில் ஒருநாள் (மார்ச் 1949 முதல் வார அளவில்) இரவு ஏழு மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் தூதுவர் வழி 'வெரி அர்ஜென்ட்' என்பதாக எட்டு மணிக்கு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரைச் சந்திக்குமாறு ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு ஓலை வந்தது. அவ்வாறே அரசினர் தோட்டத்திலிருந்த முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமாகிய 'கூவம் ஹவு'ஸில் ஓமந்தூராரை அவர் கண்டார். பாரதி பாடல்களைப் பொதுச் சொத்தாக்க வேண்டும் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், உரிமையை அவர் தரவேண்டும் என்றும் பிரதமர் கேட்டார். பத்தாயிரம் ரூபாய்க்கு அதை வாங்கியதாக ஏவி. மெய்யப்ப செட்டியார் சொல்லவும், அரசாங்கம் தக்க இழப்பீடு கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர் பதிலிறுத்தார்.

“நான் உடனே, ஒரு வினாடிகூட யோசிக்காமல், 'பாரதியார் பாடல்களின் உரிமையை இந்தக் கணமே அரசாங்கத்திற்கு 'டிரான்ஸ்பர்' பண்ணி விடுகிறேன். எனக்கு ஒரு ரூபாய்கூட வேண்டாம். எவ்விதப் பிரதி பிரயோசனமும் இன்றிக் கொடுக்கத் தயார்' என்று சொல்லிவிட்டேன்.”

என்று ஏவி. மெய்யப்ப செட்டியார் நினைவு கூர்கிறார். இச்சந்திப்பின் அடிப்படையில் 11 மார்ச் 1949இல் அவர் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார்.

பாடல்களின் ஒலிப்பதிவு உரிமையைத் தம்மிடமே தக்க வைத்துக்கொள்வதற்கு எடுத்த நீதிமன்ற நடவடிக்கைகள், பண்பாட்டுப் பிரமுகர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் ஓராண்டுக்கு மேல் காலம் கடத்தியமை முதலான எந்தச் செய்தியினையும் அவர் நினைவுகூர்ந்து பதியவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. மாநிலத்தின் முதலமைச்சரே நேரில் அழைத்துக் கேட்ட பிறகு அவரது வேண்டுகையைத் தட்ட முடியாத நிலையில், இவ்விவகாரத்திலிருந்து ஒரு பெரும்போக்கினராக வெளிப்படும் வகையில் பணம் பெறாமல் உரிமையைப் பட முதலாளியான ஏவி. மெய்யப்ப செட்டியார் விட்டுக் கொடுத்தார் என்று கொள்ளலாம்.

பாரதி பாடல் ஒலிபரப்புரிமையை அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்ள முடியாத நிலையில் விட்டுக் கொடுத்த ஏவி. மெய்யப்ப செட்டியார், அதைப் பணம் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகக் கொடுத்ததின் மூலம் தமக்கும் தம் கம்பெனிக்குமான நற்பெயருக்கு முதலீடாக மாற்றிக்கொண்டார். நற்பெயர் என்பது ஒரு தொழிலமைப்புக்குச் சொத்திருப்பு என்பதையும், பாரதி பதிப்புரிமையைப் பணம் வாங்காமல் விட்டுக்கொடுத்தவர் என்ற நற்பெயர் ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கு இன்றுவரை நிலவுகிறது என்பதையும், இந்தச் செய்தியை பரப்புவதில் ஏவிஎம் நிறுவனம் முனைப்பு காட்டுகிறது என்பதையும் இங்கு மனங்கொள்ள வேண்டும்.

ஏவி. மெய்யப்ப செட்டியார் தம்மிடமிருந்த ஒலிபரப் புரிமையை அரசாங்கத்திற்கும் கைமாற்றித் தந்தது மிகச் சீராக நடைபெற்றது. உரிய ஆவணங்கள் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டிருந்ததால் அவற்றை அரசாங்கத்திற்கு ஒப்படைப்பதில் காலத்தாழ்வு ஏற்படு வதை 25 மார்ச் 1949இல் கல்வித் துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்தார்.

வழக்கில் சமரசம் ஏற்பட்டு, திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து உரிமைக் கைமாற்றலுக்கான ஆவணத்தைப் பதியத் தயாராக இருப்பதாக 2 ஜூன் 1949இல் கல்வித் துறைச் செயலருக்கு ஏவி. மெய்யப்ப செட்டியார் எழுதினார்.

8 ஜூன் 1949இல் மயிலாப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பாரதி பாடல் ஒலிபரப்புரிமையைக் கைமாற்றும் கொடை ஆவணத்தை சென்னை மாநிலத்தின் மேதகு ஆளுநருக்குப் பதிந்து கொடுத்தார். ஜூன் 8ஆம் நாள் பத்திரம் பதியப்பெற்றாலும் 12 மார்ச் 1949 முதல் செல்லத்தக்கதாக முன்தேதியிட்டு அதன் ஷரத்துகள் அமைந்திருந்தன. இவ்வொப்பந்தப் பதிவிற்கு முத்திரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

திரைப்படத் துறையின் பணத்தில் புரண்ட சாமர்த்தியமான வியாபாரியாகப் பார்க்கப்பட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் அப்பழியிலிருந்து தந்திரமாக மீண்டார். பாரதி பிரசுராலயம் பற்றிப் பல மனக்குறைகள் இருந்தாலும் அதற்கெதிராக இயக்கம் கூர்மை பெறவில்லை. ஆனால், அது பதிப்புரிமையினை வைத்திருந்த சி. விஸ்வநாத அய்யரையும் விரைவில் உள்வாங்கிக்கொண்டது. பாரதி விடுதலைக்கழகத்தின் கிளர்ச்சி முடிந்த ஓராண்டுக்குப் பின் சி. விஸ்வநாத அய்யர் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்: 'நான் முதல் நம்பர் பொது எதிரியாகக் கருதப்பட்டேன். மேடைகளிலும் பத்திரிகைகளிலும் அவ்வாறே நடத்தப்பட்டேன். பாரதியின் படைப்புகளை விற்று, அந்த வருமானத்தில் உடல் கொழுத்த ராட்சசனாகச் சித்தரிக்கப் பட்டேன்.' தன் பக்க நியாயத்தை விரிவாக முன்வைத்த அவர், 'ஏகபோகத்தைக் கைக்கொண்டு இலாபம் ஈட்டினேன் என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதா?' எனவும் கழிவிரக்கத்தோடு வினவினார். எளிய ஆசிரியரான சி. விஸ்வநாத அய்யருக்கு ஏவி. மெய்யப்ப செட்டியாரின் திறமை இருந்ததாகத் தெரியவில்லை என்பது மட்டுமன்றி, அவருக்குப் பணம் இல்லாமல் தம் உரிமையை விட்டுக்கொடுக்கக் காரணமும் இல்லை, வசதி வாய்ப்பும் இல்லை. பதினைந்தாயிரம் ரூபாய் மறுபயனுக்கானது (consideration). தம்மிடமிருந்த பாரதி பதிப்புரிமை முழுவதையும் அரசாங்கத்திற்கு மாற்றித் தர இசைந்தார். இது மட்டுமல்லாமல், முற்றிலும் எதிர்பாராதவிதமாக, தம்மிடமிருந்த பாரதியின் கையெழுத்துப்படிகள் முழுவதையும் அரசாங்கத்திற்கே கொடையாகத் தந்துவிடுவதாகவும் சி. விஸ்வநாத அய்யர் ஒரு ஒப்புதல் கடிதத்தை 12 மார்ச் 1949இல் எழுதிக் கொடுத்தார். ஏறத்தாழக் கால் நூற்றாண்டாகத் தாம் ஈடுபட்ட ஒரு வினைப்பாட்டை வலுக்கட்டாயமாக உரிமைக் கைமாற்றம் செய்துதர வேண்டிய நிலையில் அவர் இருந்தார். கையெழுத்துப்படிகளை அன்பளிப்பாக ஒப்படைத்து விடுவது என்பது கைப்பு நிலையில் எடுத்த முடிவாகவே தோன்றுகிறது.

1949 மார்ச் இரண்டாம் வார அளவில் சி. விஸ்வநாத ஐயர், ஏவி. மெய்யப்ப செட்டியார் ஆகியோருடனான அரசாங்கச் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கலாம் எனக் கணக்கிட முடிகிறது. அரசாங்கம் விரும்பியவாறு இப்பேச்சு வார்த்தைகள் முடிவுற்ற நிலையில் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் 12 மார்ச் 1949இல் கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் உலகம் காணாததொரு அறிவிப்பைச் செய்தார். 'நவீனத் தமிழ் மறுமலர்ச்சியின் மகாகவிஞனின் படைப்புகளை அரசுடைமையாக்கிப் பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தவும், கூடுமான அளவு குறைந்தவிலையில் அவற்றை வெளியிடவும்' அரசாங்கம் முடிவு எடுத்திருப்பதாக உறுப்பினர்களின் பேராரவாரத்தின் இடையே அவர் அறிவித்தார்.

பாரதியின் படைப்புகள் தனிமனிதர்களின் கையிலிருந்து மீட்கப்பட்டு மக்களுடைமை ஆவதற்கான ஓராண்டுக்கும் மேற்பட்ட போராட்டம் இவ்வறிவிப்பு மூலம் முடிவுக்கு வந்தது.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் ஆ.இரா. வேங்கடாசலபதியின் 'பாரதி: கவிஞனும் காப்புரிமையும். பாரதி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட வரலாறு' ஆய்வு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே இடம்பெற்றுள்ளன.

ஆ.இரா. வேங்கடாசலபதி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement