dinamalar telegram
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகை

Share

புண்ணியத்தால் பாவத்தை வெற்றிகொள்
நன்மையால் தீமையை வெற்றிகொள்
நட்பால் பகைமையை வெற்றிகொள்
மன்னிப்பால் எதிரிகளை வெற்றிகொள்
நிலையற்ற மனித வாழ்வில், தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் தனக்கு நன்மை செய்தவர்களுக்காகவும் மட்டும் இறைவனை வழிபடுபவன் சாதாரண மனிதன். தனக்குப் பாவமிழைத்த, வஞ்சித்த எதிரிகளின் செயல்பாடுகளை மன்னித்து, அவர்களின் நலனுக்காக இறைவனிடம் மன்றாடுபவன் மாமனிதன். அவன் கருணைபொழியும் ஆண்டவனுக்கு ஒப்பாகிறான். மற்றவர்கள் செய்த தவறையும், தீங்கையும் தன்மேல் ஏற்றுக் கொண்டு தண்டனையை அனுபவிப்பவன் இறைவனாகவே ஆகிறான்.
எல்லாம் வல்ல இயேசுபிரான் மனித குலத்தின் பாவங்களையும், அதன் விளைவான மரண தண்டனையையும் தான் ஏற்றுக் கொண்டு அதற்காகச் சிலுவையில் அறையப்பட்டு உயர் நீத்தவர். எவ்விதப் பேதமும் காட்டது மக்களுக்காகவே வாழ்ந்து எளியவர்க்கு அருள்புரிந்து, தீயோர்களை மன்னித்துத் தியாகச் சுடராய் வாழ்ந்து மறைந்து மீண்டும் மக்களுக்காகவே உயிர்த்தெழுந்து அற்புதம் நிகழ்த்தியவர் இயேசுநாதர்.
ஆங்கில மாதம் டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் மிகமுக்கியமான திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை. குளிர்காலக் கொண்டாட்டங்களில் மிக முதன்மையானது இப்புனிதத் திருநாள். எல்லா மதத்தினராலும் சமயச் சார்பற்றுக் கொண்டாடுவதற்கு ஏதுவாகத் தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் அனைத்திலும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு எடுக்கப்படும் விழா இது.
முற்பிறப்பில் யூதர் குலத்து ராஜாவாக இருந்தவர். கிறிஸ்து எனவும், மனித குலத்துக்கு நன்மை செய்து ரட்சிக்கவே கன்னிமரியாள் வயிற்றில் மீண்டும் உதித்தார் என்றும் வரலாறு கூறுகின்றது.
கிறிஸ்துவ மறைநூலாகிய விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாடு தரும் தகவல்படி கபிரியேல் என்ற இறைத்தூதன் கன்னிமரியாளிடம் பரிசுத்த ஆவி மூலமாக இயேசுபிரான் பிறக்கப்போவதை அறிவித்தார். அந்தச் சமயம் மரியாள் யோசேப் (ஜோசப்) என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தார். மரியாள் கருவுற்றதையறிந்த யோசேப், மணம் முடிக்கத் தயங்கிட, இறைத்தூதர் யோசேப் முன்னால் தோன்றி, பரிசுத்த ஆவியாலேயே மரியாள் கருவுற்றாள் என்று தெரிவிக்கவே, யோசேப் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
மரியாள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த அகஸ்துஸ் மன்னனின் கட்டளைப்படி, யோசேப்பும், மியாளும் யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு இடம் ஏதும் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அந்த மாட்டுத் தொழுவத்தில் பரவிக்கிடந்த வைக்கோல் புல்லில் மரியாள் இயேசுபிரானைப் பெற்றெடுத்தாள்.
அவர் அவதரித்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையரிடையே இறைத்தூதர் தோன்றி, ஏழை எளிய மக்களை இரட்சித்துக் காக்க இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். அப்போது வானில் இருந்த நட்சத்திரத்தின் ஒளியால் வழிகண்டு பிடித்து, இடையரும், மற்றவர்களும் குழந்தை ஏசுவை வணங்கினர்.
இதன் குறியீட்டாகவே அனைத்துக் கிறிஸ்துவ இல்லங்களிலும் நட்சத்திர வடிவிலான மின்விளக்குகள் அலங்காரமாகத் தொங்கவிடப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வீட்டினைச் சுத்தம் செய்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்வர். இதன் அர்த்தம் பசுமையான மரம்போல், வாழ்வில் எல்லா நலனும் பெற்று வளமையாக மேன்மேலும் உயர்வது என்பதாகும்.
இயேசுவின் பிறப்பிடமான மாட்டுத் தொழுவத்தையும், குடிலையும் அமைத்து மரியாள், யோசேப், இயேசுக்குழந்தை, இடையர்கள், மாடு கன்றுகள் ஆகிய உருவப் பொம்மைகளால் அலங்கரிப்பர்.
சாண்டகிலாஸ்' எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு மிட்டாய்களும், பரிசுப்பொருட்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவர். டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துவ ஆலயங்களில் பிரார்த்தனைப் பாடல்கள் பாடியும் இயேசுபிரான் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறியும் பிரார்த்தனை நடைபெறும். அன்றைய நாள் முழுவதும் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளித்து மகிழ்வர். ஏழை எளியவர்களுக்குப் பணம் பொருட்களை வழங்கி நன்மை செய்வர்.
கிறிஸ்துமஸ் நாளின் ஒர வாரம் முன்பிருந்தே கிறிஸ்து பிறப்பை அறிவித்து மகிழும் விதமாக அனைவரும் இணைந்து கிறிஸ்துவர் இல்லங்களுக்குச் சென்று கரோல் எனப்படும் பாடல்கள் பாடிப் பிரார்த்தனை செய்வர். இப்பண்டிகையின் பிரதான விருந்தாகச் சமைக்கப்படுவது கிறிஸ்துமஸ் கேக்' ஆகும்.
நன்றியறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும் நன்மை செய்பவரான இயேசுவை மனதாரத் துதிக்க வேண்டும். நமக்கு யாரேனும் இம்சை செய்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, அவர்கள் மனம் திருத்த வேண்டும் என்பதற்காக ஜெபிக்க வேண்டும். அதற்கு மாறாகப் பழி உணர்வைக் காட்டக்கூடாது. இவ்வாறு செய்வதால் பகைவர்களும் நண்பர்களாவர். கருணை பொங்கும் இறையருளும் நமக்கு கிட்டும்.
அனைத்து நாட்டவராலும் பேதமின்றிக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நாமும் கொண்டாடி அன்பினையும், மகிழ்வையும் பரிமாறி கர்த்தரின் அருள் பெருவோமாக!

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement