Load Image
dinamalar telegram
Advertisement

பின்னவெல யானைகம் சரணாலயமும் - இலங்கை சாசனங்களும்

கண்டியில் இருந்து கொழும்பு வரும் பாதையில், கோசாலை நகரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குச் சரியாக ஒரு மணிக்கு வந்து சேர்ந்தோம். பின்னவெல யானைகள் சரணாலயமானது, சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சகத்தைச் சார்ந்த தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஓர் அரசு நிறுவனமாக உள்ளது.
இங்கு ஒரு கொட்டைகையில் இரண்டு அனாதைக் குட்டி யானைகளும், ஒரு பெரிய தாய் யானையும், அதன் நான்க மாதக் குட்டி யானையும் இருந்தன. நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பார்வையாளர்கள், அவைத் தெங்கின் ஓலைகளைப் பிய்த்துத் தின்பதைக் கண்டுகளித்தும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தனர்.

சரியாக 1.15 மணிக்க அங்கே மணியோசை கேட்டது. சிறிது நேரத்தில் நான்கு வாளியில் (பக்கெட்டுகள்) பசும்பாலும், ஒரு பெரிய புட்டியும் அதை இணைக்க ரப்பர் குழாயும் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்த இரண்டு குட்டி யானைகளுக்கும் புட்டியில் பால் ஊற்றி அதனுடன் ரப்பர் குழாயை இணைத்துப் பால் ஊட்டிவிட்டனர். இதைப் பலரும் ஒளிப்படம் எடுத்தனர். ஒரு கட்டி யானைக்கு நானும் பாட்டில் மூலம் பால் கொடுத்தேன்.
திறந்த வெளியில் சுமார் அறுபது யானைகள் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தன. அவற்றில் ஒரு சில தமது குட்டிகளுடன் வலம் வந்தன. அவற்றில் இரண்டு யானைகள், பார்வையாளர்கள் அனைவருடைய கருத்தையும் கவர்ந்தன. முதலில் நம்மைக் கவர்ந்தது ராஜா என்ற தந்தக் களிறு. அதற்கு முழுமையாகப் பார்வை இல்லை.
சரணாலயமானது ஏழு ஏக்கர் தென்னந்தோட்ட நிலப்பரப்பில் 1975ஆம் ஆண்டு ஏழு கைவிடப்பட்ட யானைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அவைத் தமது பேரக்குழந்தைகளுடன் அதே இடத்தில் இன்பமாக வாழும் நிலையைப் பெற்றுள்ளன. மிகக் குறுகிய காலத்தில், உல்லாசப் பயணிகள் வந்த பார்க்கக்கூடிய இடமாக இச்சரணாலயம் திகழ்கிறது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யானை வல்லநர்கள் உதவியுடன், யானை இனப் பெருக்கத் திட்டம் வெற்றிக்கரமாக இங்கே நடைபெற்று வருகிறது. யானைகள் தன் இச்சை போல் சுதந்திரமாக விடப்படுவதால் அவையே தன் துணையைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்கின்றன.
இங்கே இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளில், இரண்டாம் சந்ததி யானைகளை இச்சரணாலயம் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், பின்னவெலவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு குட்டிகளாகிலும் பிறக்கும். 1998ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த குட்டிகளில் மரபு அணுப் பரிசோதனை செய்யப்பட்டு அவற்றிற்கிடையேயான மரபணுத் தொடர்புகள் அடையாளங்கள் காணப்படுகின்றன.
பின்னவெலவின் வெற்றிகரமான ஆசிய யானைகளின் இனப்பெருக்கம் உலகமெங்கும் உள்ள விஞ்ஞசனிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல ஆய்வுக் கட்டுரைகளும் புத்தகங்களும் பல மொழிகளில் பின்னவெலவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
சரணாலயத்தில் இருந்து 0.5 கி.மீ. தூரத்தில் மா-ஓயா என்ற நதி உள்ளது. இந்தத் தூரத்தைப் பத்து அடி அகலமுள்ள பாதை இணைக்கிறது. பாதையின் இருபுறமும் பரிசுப் பொருட்கடைகள் தொடர்ந்து உள்ளன. இதன் வழியாகத்தான் சுமார் எழுபத்து மூன்று யானைகள் காலையிலும் பகலிலும் சரணாலயத்தில் இருந்து ஆற்றில் நீராடச் செல்கின்றன.
சிப்பாய்கள் நடப்பது போல் செல்கின்ற காட்சியை நாம் எங்கே காணமுடியும்? மனிதரால் பராமரிக்கப்படும் மிகப் பெரிய யானைக்கூட்டம் ஒரே பாதையில் தினமும், நீராடச் செல்வதைப் புகைப்படம் எடுக்கச் சுற்றுலாப்பயணிகள் ஆவலுடன் நிற்பதும், அவர்களை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டே யானைக் கூட்டம் செல்வதும், கண்கொள்ளாக் காட்சியாகும்! யானைகள் அருகில் சென்று திரு. குமரேசனுடன் படம் பிடித்தேன். யானைக் கூட்டம் இருக்கிறது என்ற பயமே நான் இருந்த மூன்று மணி நேரம் எனக்கு ஏற்படவில்லை! இனி கொஞ்சம் இலக்கியப் பக்கம் பயணிப்போம்!
ஈழத்தில் ஆரம்பக்காலத் தமிழ் ஆய்விதழ்களின் வரவு கலை, இலக்கிய, கல்வி அமைப்புகளோடு தொடர்பு பட்டுள்ளதாகவிருக்கிறது. இவ்விதத்தில் கலாநிலையம் (நிறுவனர்: கலைப்புலவர் க.நவரத்தினம்) வெளியிட்ட ஞாயிறு (1933)ம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் வெளியிட்ட கலாநிதி (1942)யும் முக்கியமானவை. இவ்விரு இதழ்களும் தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம் சார்ந்த விஷயங்களுக்கே முக்கியமளித்திருந்தன.
உயர்கல்வி நிறுவன வெளியீடு என்ற விதத்திலே இலங்கைப் பல்கலைக்கழக (பேராதனை) தமிழ்ச்சங்கம் வெளியிட்ட இளங்கதிர் (1942) சஞ்சிகை முதல் முயற்சியாகின்றது. இச்சஞ்சிகை மாணவர்களது ஆக்கங்களும், முதன்மை அளித்திருந்ததாயினும் பிற்காலப் பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, சி. தில்லைநாதன், பொ.பூலோகசிங்கம், தனஞ்செயராசசிங்கம் முதலானோரின் ஆரம்பகால ஆய்வு முயற்சிகளுக்குக் களம் அமைந்திருந்ததென்ற விதத்தில் முக்கியமானது.
அரசு சார்பான அமைப்பு என்ற விதத்தில் வெளிவந்த முதற்சஞ்சிகை ஸ்ரீலங்கா (1954) ஆகும். (ஆசிரியர்: குல.சபாநாதன் இலங்கை கலாசார தகவல் பகுதி). இவ்வழியில் இலங்கைச் சாகித்திய மண்டல வெளியீடான கலைப்பூங்கா (1964) வின் வரவும் முக்கியமானது. இவ்விரு ஆய்விதழ்களிலும் பண்டிதர் பரம்பரையினர் மட்டுமன்றிப் பல்கலைக்கழகப் பரம்பரையினரும் எழுதுகின்றனர்.
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1976ல் உருவானபோது சிந்தனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடாகி, இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது)
பல்கலைக்கழகம் சார்ந்த சிந்தனை ஆய்வு இதழுக்கு நிகராகவும் கால மாற்றங்களுக்கேற்ப பன்முகச் சிந்தனைகளுக்கு இடமளிக்கும் ஆய்வு இதழாக கொழும்பிலிருந்து வெளிவந்த இதழான கூடம் (2006 - 2011), ஈழத்துத் தமிழியல் ஆய்வு இதழ் வரலாற்றில் தனிஇடம் பெறக்கூடியது என்கிறார் நான் சந்தித்த ஸ்ரீதர் சிங் (பூபால சிங்கம் பதிப்பகம்).
கூடம் அண்மையில் நின்று போனாலும் அவ்வெளியை நிரப்புவது போன்று சமூக வெளி (2012) என்ற அதே போக்குடைய ஆய்விதழொன்று தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் சாசனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிந்து மகிழ்ந்தேன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஒரு நூல் வெறியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட சாசனங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றைப் பற்றிய கண்டுபிடிப்புகள் தொடர்கின்றன. 1960ஆம் ஆண்டு வரை தமிழ்ச்சாசன வரலாறு பல்லவரோடு ஆரம்பமானது என்றவொரு நிலை காணப்பட்டது. இன்று அது முற்றாக மாறிவிட்டது. இந்நாள்களில் தமிழ்ப் பிராமிச் சாசனங்களைப் பற்றிய ஆய்வுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
ஐராவதம் மகாதேவன் அவர்களால் வெளியிடப்பட்ட தொகுப்பு நூலின் பயனாகத் தமிழ்ப் பிராமிச் சாசனங்களைப் பற்றிய ஆய்வுகள் சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுவிட்டன. ஜெர்மனியிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், ஸ்கந்தினேவியாவிலும், ஜப்பான் தேசத்திலும் தமிழியல் ஆய்வுகளில் நாட்டங் கொண்டோர் அச்சாசனங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர்.
தமிழ்ப் பிராமிச் சாசனங்களைப் பற்றி இங்கு சுருக்கமாக விளக்குவது அவசியமாகும். இலங்கையிலே புராதன காலத்தில் ஏற்பட்ட தமிழரின் குடியிருப்புகள் பற்றியும் அங்குள்ள தமிழ்மொழி வரலாற்றின் ஆரம்ப கட்டங்களைப் புரிந்து கொள்வதற்கும் அத்தகைய விளக்கம் அவசியமாகும்.
தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. அவைத் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவை சமண சமயத் தொடர்பானவை. அவற்றிலே ஏறக்குறைய 20 விதமான சொற்கள் பிராகிருதமொழிச் சொற்கள். பேச்சு வழக்கமான மொழியில் அதேயளவிற் பிராகிருதச் சொற்கள் இடம் பெற்றிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆயினும் மிகப் புராதனமான ஆவணங்களில் அறிமுகமாகின்ற தமிழ் வழக்கிற் பிராகிருதச் செல்வாக்கக் கணிசமான அளவில் ஏற்பட்டுள்ளமை கவனத்திற்குரியது என்கிறார் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள்.
தமிழ் மொழியிலுள்ள மிகவும் புராதனமான சாசனங்கள் பிராமி என்னும் வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. நாவலந்தீவின் ஏனைய தேசங்களிலும் இலங்கையிலும் இதுவே சமகால வழமையாகும். ஆனால் அங்கெல்லாம் பிராகிருத மொழியிற் சாசனங்களை எழுதினார்கள். இன்று எவ்வாறு ஆங்கிலம் தொடர்பு மொழியாக விறங்குகின்றதோ அவ்வாறே அந்நாள்களிற் பிராகிருதம் தொடர்பு வழியாக விளங்கியது.
கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கும் பகுதிகளிலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு அம்மொழிகளிலன்றிப் பிராகிருத மொழியிலேயே சாசனங்களை எழுதினார்கள். இலங்கைச் சாசனங்களைப் பற்றிச் சிந்திக்குமிடத்து இதனைக் கருத்திற் கொள்ளவேண்டும்.
பிராமிச் சாசனங்களின் இரண்டாவது பிரதானமான அம்சம் அவற்றின் வரி வடிவங்கள் பற்றியது. தமிழ்ச் சாசனங்களும் பிராகிருத மொழிச் சாசனங்களும் பிராமி என்று வழங்கும் வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. ஆயினும், வடஇந்தியா, தக்ஷிணாபதம் ஆகியவற்றின் தேசங்களிற் பிராகிருத மொழிச் சாசனங்களை எழுதுவதற்கும் தமிழ்ச் சாசனங்களை எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்ட வரி வடிவங்களிற் சில வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபட்ட எழுத்துக்கள் தமிழ்ப் பிராமிக்குச் சிறப்பானவை. ழ, ள, ற, ன என்பனவே அவ்வெழுத்துக்கள்.
அத்துடன் ஈ, ம என்னும் எழுத்துக்களைத் தமிழ்ப்பிராமியில் எழுதும் முறையும் வேறுபட்டது. வேறு எழுத்துக்களின் வடிவமைப்பைப் பொறுத்தும் சில வேற்றுமைகளை ஆய்வாளர் அவதானித்துள்ளனர்.
ஆதி காலத்து இந்திய மொழிவல்லுநர்கள் தமிழ்ப்பிராமியின் சிறப்பியல்களை இனங்கண்டிருந்தனர். எனவே அதனைத் தாமிழி என்றும் திராவிடி என்றும் வர்ணித்துள்ளனர். வட இந்திய வழக்கமான பிராமி வடிவங்களை அசோக பிராமி என்று சொல்வது இந்நாள்களில் வழமையாகிவிட்டது.
ஆதிகாலத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் சாசனங்களைப் பிராகிருத மொழில் எழுதினார்கள். கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை தென்னாசிய முழுவதிலும் தொடர்பு மொழியாக விளங்கியது. இலங்கையில் வாழ்ந்த எல்லாச் சமூகத்தவரும் பிராகிருத மொழியினையே சாசன மொழியாகப் பயன்படுத்தினார்கள். இலங்கையிற் சாசன வழக்கமான பிராகிருதம் தமிழ்மொழியின் செல்வாக்கினைக் கணிசமான அளவிற்குப் பிரதிபலித்தது. பல தமிழ்ச் சொற்கள் பிராகிருத மொழி இலக்கண அமைதிகளுக்கு ஏற்பட உருமாறிய வடிவத்திலே ஆதியான பிராமிச் சாசனங்களில் வருகின்றன. அவற்றுட் பெரும்பாலானவை பெயர்ச்சொற்கள். அவை இயற்பெயர், காரணப் பெயர், பண்புப்பெயர், பதவிப்பெயர், இன உறவு சம்பந்தமான பெயர், இடப்பெயர் எனப் பலவகைப்படும்.

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement