Load Image
Advertisement

ஒரு பெரியவரின் தரிசனம்

1984ம் ஆண்டு.
பாரதியார் பிறந்தநாள் வரப் போவுதே.. என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டார்கள் திருநெல்வேலி வானொலி நிலைய நண்பர்கள்.
நான் யோசித்தேன்.
இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாமே...' என்று யோசனை கூறினார் ஒரு நண்பர்.
வித்தியாசமா...ன்னா...?'
பாரதியாரை நேரில் பார்த்தவர்கள், அவரோடு பழகியவர்கள், இப்படிப் பட்டவர்களை நேரிலே சந்தித்துப் பேசி... அதையெல்லாம் தொகுத்துக் கொடுக்கலாமே...!'

நல்ல யோசனைதான். இருந்தாலும் பாரதியாரோடு பழகியவர்கள் இந்தக் காலத்திலே இன்னும் யார் இருக்கப் போகிறார்கள்?'
என்ன சார் அப்படிச் சொல்லிபுட்டீங்க.. பாரதியாரின் தம்பி இருக்காரே... அவரைப் போய்ப் பார்க்கலாமே...!' என்றார் டி.கே.ஆர். (நண்பர் தெ.கு.இராமச்சந்திரன் அப்போது எங்களோடு வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொணிடருந்தார். அவரை எல்லோரும் செல்லமாக டி.கே.ஆர். என்றுதான் அழைப்பது வழக்கம்)
பாரதியாரின் தம்பியா?' என்றேன் ஆச்சரியத்தோடு.
ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!' என்றார் டிகேஆர்.
எங்கே இருக்கார்?'
மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.'
இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?'
அது... வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.'
இவ்வளவு விவரங்களும் தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருக்க முடியுமா?
அலுவலகத்தில் முறையான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஒலிப்பதிவுக் கருவிகளோடு நானும் நண்பர்களும் புறப்பட்டோம்.
மானாமதுரையில் எதிரே வந்த ஒருவரை நிறுத்தி வழிகேட்டோம்.
அதோ.. அந்தப் பாலத்தை தாண்டி அடுத்த பக்கம் போங்க... வாசலிலே கம்பி போட்டிருக்கும். அந்த வீடுதான்.'
வீட்டுக்கு முன்னால் எங்கள் கார் போய் நின்றது.
வாசல்புறம் நின்றிருந்த ஒருவரிடம் நாங்க வந்திருக்கின்ற விவரத்தைச் சொன்னோம்.
உடனே அவர் எங்களை அழைத்துக் கொண்டு மரப்படிகளின் வழியாக மாடிக்குச் சென்றார்.
அங்கே அந்தப் பெரியவரை - மகாகவி பாரதியின் சகோதரரைச் சந்தித்தோம்.
அன்போடு எங்களை வரவேற்று அமரச் செய்தார். உபசரித்தார். உயரே சுவரில் பழங்காலத்துப் படங்கள் நிறைய மாட்டப்பட்டிருந்தன. அந்தக் காலத்துப் பாரதியின் படங்களை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் பேட்டி தொடங்கியது.
வெளியுலகத்துக்குத் தெரியாத நிறைய விவரங்களை அவர் சொன்னார்.
எங்க அப்பா சின்னசாமி ஐயர்... அவருக்கு இரண்டு மனைவிகள்...'
முதல் மனைவி லட்சுமி அம்மா... அந்த லட்சுமி அம்மாளின் மகன்தான் பாரதி.
பாரதிக்கும் அஞ்சு வயசு ஆவதற்குள்ளே தாயார் இறந்துவிட்டார்.
அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கழிச்சி சின்னசாமி ஐயர் வள்ளியம்மாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். வள்ளியம்மாளின் பிள்ளை தான் நான். அதாவது எனக்கும் பாரதிக்கும் அப்பா ஒருவர் தான் அம்மாதான் வேறு.
உங்களுக்கு வேறு சகோதரர்கள் சகோதரிகள்...'
எனக்கு மூத்த சகோதரி ஒருத்தர் உண்டு. லட்சுமின்னு பேரு.. எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இறந்து போயிட்டாங்க'
பாரதி கூட நீங்க இருந்த நாள்கள்... இப்ப உங்களாலே ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?'
பாரதி சென்னையிலே இருந்தார் இல்லையா...?'
திருவல்லிக்கேணியிலே தானே...'
அதுக்கும் முன்னாடி மயிலாப்பூரிலே இருந்தார். சித்திரைக்குளம் கீழவீதியும் தெற்குவீதியும் சேர்ற இடம். அங்கே இருந்து தெற்கே போற ஒரு சின்ன தெரு. அங்கே ஒரு பெரிய வீட்டுலே நாங்க குடியிருந்தோம்.
அப்ப நான் மயிலாப்பூர் பி.எஸ்.ஹைஸ்கூல்லே இரண்டாவது பாரம் (ஏழாம் வகுப்பு) படிச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குப்புறம்தான் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுக்குப் போனோம். (வீரராகவ முதலி தெரு)
அதுக்கப்புறம் நல்லதம்பி முதலி தெருவிலேயும் இருந்தோம். அந்தச் சமயம் நான் திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல்லே படிச்சேன்.
1918க்கு அப்புறம் அவர் கடையத்துலேயும் எட்டயபுரத்திலேயும் மாறி மாறி இருந்தார். அப்பல்லாம் நானும் அவர் கூடவே இருந்தேன்.'
பாரதியார் உங்களைப் பத்தி பேசினது எழுதினது ஏதாவது ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?'
சிறு பிள்ளைகளைப் போல ஆர்வத்தோடு அவரை விசாரித்தோம்.
ஞானரதம்-ங்கற நூல்லே மண்ணுலகம்-ன்னு ஒரு பகுதி. அதுல எழுதியிருக்கிறதெல்லாம். நாங்க நல்லதம்பி முதலி தெரு வீட்டுலே தங்கியருந்தப்போ கிடைச்ச அனுபவங்கள். அதிலே அவர் என்னைப் பத்தி எழுதியிருக்கிறதைப் பாருங்க!' என்று சொல்லி ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து எங்களிடம் கொடுத்தார். அதில் அந்தப் பகுதியை எடுத்துப் போட்டிருந்தார்கள். அதில் பாரதியார் எழுதியிருக்கிற வாசகங்கள் இவை:
22ம் தேதி தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய நாள். நான் காரியாலயத்திலிருந்து பணம் கொண்டு வந்து வைக்க மறந்து விட்டேன். நான் சுதேசிய விஷயத்தில் பாடுபடுவதில் பொருட்டாக என்னை எப்பொழுதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என் தம்பியிடம் செய்த சம்பாஷணையில் உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னவரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்' என்ற மங்கள சமாசாரம் சொல்லிவிட்டுப் போனதாகத் தம்பி சொன்னார்.'
பாரதியார் பாடல்கள் இயற்றுவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாடவும் செய்வாராமே?'
1920ல் நாங்க திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் இருந்தப்ப வ.வே.சு. ஐயர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பாரதி அண்ணா, இன்று ஒரு பாட்டு இயற்றியிருக்கிறேன் கேட்கிறீர்களா?''ன்னார்.
ம்... சொல்லுங்க!'ன்னார் வ.வே.சு. ஐயர்.
உடனே பாரதி பாட ஆரம்பித்தார்.
காயிலே புளிப்பதென்ன?
கண்ணபெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்ன
கண்ணபெருமானே
அந்தச் சமயம் அவர் அதைக் கம்பீரமா பாடறப்போ நானும்கூட இருந்துகேட்டேன். மறக்க முடியாத அனுபவம்
பாரதி நூற்றாண்டு விழா ரஷ்யாவுலே கொண்டாடப் போறாங்களாமே கேள்விப்பட்டீங்களா?'
ஆமாம்... அதுலே வந்து கலந்துக்கணும்னு அந்த அரசாங்கமே என்னை அழைச்சிருக்கு.'
போக போறீங்களா?'
மனசுல ஆசை இருக்கு.. உடம்புல பலம் இல்லை' என்று சொல்லி லேசாக சிரிக்கிறார்.
அப்படின்னா...?'
நான் வர்றதுக்கு என் உடம்பு இடம் கொடுக்காதுன்னு அவங்ககிட்டே சொல்லிட்டேன்'
நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டோம். தள்ளாத வயதிலும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
அதற்கு அடுத்த வருடமே நான் சென்னை வானொலி நிலையத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.
இங்கு வந்த பிறகு ஒருநாள் நண்பர் ஒருவரிடம் நான் பாரதியின் தம்பியை பேட்டி கண்ட விஷயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்.
சந்தர்ப்பம் கிடைச்சா, இன்னொரு முறை மானாமதுரைக்கு போய் அந்தப் பெரியவரைப் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்!' என்றேன்.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, உனக்கு விஷயம் தெரியாதா?' என்றார்.
என்ன?' என்றேன்.
அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் காலமாகி விட்டதாக உறவினர்கள் சிலர் மூலமாகக் கேள்விப்பட்டேன்'
நான் ஒரு நிமிடம் மௌனமாகி... பிறகு யோசித்தேன்.
எத்தனை பெரியவர்கள் இந்த உலகத்தில் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.'

- தென்கச்சி கோ. சுவாமிநாதன்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement