Load Image
dinamalar telegram
Advertisement

தாம்பிரவருணி கேள்வி - பதில்

* ஆர்.எஸ்.பதி -சேலம்: இராஜாஜி நினைத்திருந்தால் மகாகவி பாரதியாரைக் காந்தியிடம் சரியாக அறிமுகப்படுத்தியிருக்க முடியும் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?

இராஜாஜி, பாரதியைக் காந்திஜியிடம் முறைப்படி அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். என்ன காரணம் என்பது சரியாகப் புரியவில்லை. குற்றம் சாட்டுவதில் நியாயம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
உபரித்தகவல்: இராஜாஜிக்குப் பாரதி மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது என்பதும் உண்மை. பாரதியின் சில பாடங்களை மொழிபெயர்த்துக் காந்திஜியின் பெல் இந்தியா பத்திரிகையில் வெளியிடச் செய்தார். பாரதியின் ஞானரதம் நூலுக்க முன்னுரையும் எழுதியுள்ளார்.

* கனகவல்லிசுப்பிரமணியம் - பாண்டிச்சேரி: சிலருக்குப் போட்டோ மெமரி இருப்பது எப்படி?
ஒரு பொருளையோ, ஒரு படத்தையோ, ஒரு செய்தியையோ, ஒரு தகவல் அட்டையையோ பார்த்தவுடன் அதை அப்படியே சிலர் ஞாபகத்தில் வைத்துக் கொள்கின்றனர். அவர்களுடைய மூளை அதற்குத் தயாராகி விடுகிறது. இது ஒருவிதமான ஞாபகப் பயிற்சிதான். மன ஒருமைப்பாடு இதற்கு முக்கியம்.
உபரித்தகவல்: நெப்போலியன் போனபார்ட் அவரத நினைவாற்றல் பற்றி கூறும்போது சொல்கிறார், என்னுடைய மூளை மேலும் கீழுமாக வரிசையாக அமைக்கப்பட்ட இழப்பறைகள் போன்றது. என் இழப்பறையைத் திறந்தால் ஏனையவைத் தாமாகவே மூடிக்கொள்ளும். இந்தப் பயிற்சியை நானே ஏற்படுத்திக் கொண்டேன். ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும்போது இன்னொரு பொருள் என் நினைவில் குறுக்கிடுவதை நான் அனுமதிப்பதில்லை' இதுதான் ரகசியம் கனகவல்லி சுப்பிரமணியம் அவர்களே!

* வெ.பாண்டுரங்கன் -கோடம்பாக்கம்: தாம்பிரவருணியை சமீபத்தில் பாதித்த கவிதை ஏதாவது உண்டா?
பொதுவாகக் கவிதைகளை ரசிப்பவன் நான். சில கவிதைகளைப் படித்ததும் மனசுக்குள் போட்டுக் கொள்வேன். என்னை என்னவோ செய்த கவிதை இது:-
உன் வலியினால்
பிறந்ததினாலோ என்னவோ
எனக்கு
வலிக்கும் போதெல்லாம்
அழைக்கிறேன்
அம்மா...
உபரித்தகவல்: அம்மாவுக்கு இணை இன்பெனிட்டி.

* எல்.காசிவிஸ்வநாதன் - திருச்சி: சின்னமுள் - பெரியமுள் கடிகாரத்தில் இருப்பது எதைக் காட்டுகிறது?
சின்ன முள் - அடக்கமான மனிதராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பெரிய முள் - பெரிய மனிதராக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று காட்டுகிறது.
உபரித்தகவல்: அதுசரி கடிகாரத்தில் எப்போதும் சுற்றிவரும் வினாடி முள்ளை மறந்துவிட்டீர்களே! நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதையல்லவா அது ஞாபகப்படுத்துகிறது.

* ஐயாறு வாசுதேவன் - சென்னை-14: எல்லாத் திரைப்படங்களுமே ஏன் காதலையே மையமாக வைத்து வெளியாகின்றன?
காதல் அழிவில்லாதது. காதல் எல்லா யுகங்களிலும் நிரந்தரமானது. காதல் அதைச் சொன்னால்தான் பணம் வசூல் ஆகும் வாசுதேவன் சார்! நாம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் அடுத்தவர்களின் காதலைப்பற்றி எப்போதும் பேசிக் கொண்டே தான் இருப்போம். இது மனித இயல்பு.
உபரித்தகவல்: காதலிக்கும்போது ஸ்பைடர் மேன்! காதலில் செட்டிலானால் சூப்பர் மேன்! காதலியைக் கல்யாணம் செய்தால் - ஜென்டில்மேன்! கல்யாணமானால் - வாட்ச் மேன்! கல்யாணமாகித் தந்தையானால் - டாபர் மேன். எங்கேயோ படித்தது!

* மங்களம் ராமமூர்த்தி - பெங்களூரு: இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டுமல்லவா?
நாம் இறைவனிடம் வைக்கிற நம்பிக்கை உறுதியாக இருந்தால் மட்டும் போதாது! உண்மையாகவும் இருக்க வேண்டும். பிறர் கண்டு நம்மைப் பக்தர்கள் என்று சொல்வதற்காக மாத்திரம் நம்பிக்கை உள்ளவர்களைப் போல நடித்தால் ஆண்டவன் நம் உள்ளே நின்று சிரிப்பான்.
உபரித்தகவல்: மேலே சொன்னதை அப்பர் சுவாமிகளின் பாட்டில் காணலாம்.
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுகளே
புக்கு நிற்கும் பொன் னார் கடைப் புண்ணியன்
பொக்கமிக்கவர் பூவும் நீ ரும் கண்டு
நக்கு நிற்பவன் அவர்தமை நாணியே

* எஸ். ராஜதுரை -மதுரை: சாதாரண கவிஞர்களுடையது எல்லாம் கவிதை. அருணகிரியார் போன்றவர்கள் பாடியதெல்லாம் மந்திரம் என்கிறார்களே எப்படி?
எங்கள் கி.வா.ஜ. அவர்களைத் துணைக்கு அழைக்கிறேன். கி.வா.ஜ. கந்தர் அலங்காரச் சொற்பொழிவில் உள்ளது இப்பகுதி. தெய்வத்தன்மை நிறைந்த பெரியவர்களுடைய திருவாக்கில் சொல்லுக்குக் காணுகிற பொருளைவிட அனுபவத்தில் காணுகிற பொருள்தான் சிறந்தது. மற்றவர்கள் பாடங்கள் எல்லாம் சொல்லுக்கு உரிய பொருளோடு அமைந்துவிடும். இன்னும் சிறப்பானால் சற்று உணர்ச்சியைத்தரும். ஆனால் வாழ்க்கையில் சீரிய பயனைக் கொடுக்க வேண்டுமென்றால் அந்தச் சொல் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். அப்போது அதற்குச் சொல் என்று பெயரில்லை. அதுதான் மந்திரம்.
உபரித்தகவல்: பாரதி சொல்வார், மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்' மந்திரம் என்ற சொல்லுக்குத் தன்னை நினைப்பாருடைய துன்பத்தைப் போக்குவது என்றும் பொரும் கொள்ள வேண்டும். அருணகிரியாரின் பாடல்கள் சொல் கடந்து, பொருள் கடந்து, உணர்ச்சி கடந்து, வாழ்க்கைக்கு நற்பயனைத் தரக்கூடியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement