Advertisement

அந்துமணி பதில்கள்

* ஆர்.விஜயலட்சுமி, விழுப்புரம்: பொது இடங்களில், பெண்களின் உடலை உரசி, ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல் நடிக்கும் கிராதகர்களைக் கண்டால், மனம் எரிமலையாகப் பொங்குகிறது. இவர்களை எதிர் கொள்வது எப்படி?
துஷ்டர்களைக் கண்டால் தூர விலகி விட வேண்டும்! அல்லது, இவர்களுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டுமென நினைத்தால், நீங்களும் அப்பாவி போல நடந்து, "சேப்டி பின் டிரீட்மென்ட்' கொடுத்து விடுங்கள்!
***

** எஸ்.சுரேஷ்குமார், சுல்தான் பேட்டை: நேரத்தின் அருமையை உணர்ந்து, அரட்டை அடிப்பதையும், வீணான மற்ற பொழுதுபோக்குகளையும் குறைத்துக் கொண்டேன்... "வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன்...' என, நண்பர்கள் என்னைக் கேலி செய்கின்றனரே...

பாழடித்த நேரத்தை எண்ணி பின்னர், "அனுபவிக்கப்' போகின்றனர் அவர்கள்! கண்டு கொள்ளாதீர்கள் அவர்களின், "கமென்டுகளை!'
***

*எஸ்.ஜீவா, காஞ்சிபுரம்: வயதுக்கு வந்த பெண்ணை, "டி' போட்டு அழைக்கலாமா?
"அழைக்கப்படுபவருக்கும், அழைப்பவருக்கும் இருக்கும் நெருக்கம், இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப அழைக்கலாம்... "டி'யில் வரும் நெருக்கம், சுகமே தனி...' என்கிறார் கேள்வியைப் படித்த லென்ஸ் மாமா!
***

*டி.சிவசந்தர், பசுமலை: சினிமாவில் நடிக்க நடிகர்கள் தேவை என்று விளம்பரம் செய்கின்றனரே... சினிமா உலகில் நடிகர்களுக்கு பஞ்சமா என்ன?
விளம்பரம் கொடுப்பவர்களுக்கு பணப் பஞ்சம். நாட்டுப்புறத்தில் இருந்து, "மஞ்சள்' கலர் துணிப்பையுடன், இவ்விளம்பரத்தை நம்பி வருபவர்களிடம் கறந்து விடுவர் பணத்தை!
***

** கே.சுமித்ரா, அருப்புக்கோட்டை: என் பெயருக்குப் பின்னால் 10 எழுத்துக்கள் கொண்ட, "டிகிரி குவாலிபிகேஷன்' இருந்தும், 10 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாதவளாக இருக்கிறேன். படிக்காதவர் பலர், கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். ஒரு சித்தாள் கூட தினக் கூலியாக 600 ரூபாய் சம்பாதிக்கிறாள். அப்படி என்றால் படிப்புக்கு மதிப்பே இல்லையா, இந்தக் காலத்தில்?
படிப்புக்கு ஏற்ற வேலைக்காக காத்திருப்பதில் பயன் இல்லை இக்காலத்தில். மூளையைக் கசக்குங்கள்... நேர்மையாக சம்பாதிக்க லட்சம் வழிகள் உண்டு இந்த நாட்டில்!
***

**ஆர்.பூங்கொடி, கருமத்தாம்பட்டி: குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லை என்பதற்காக மிரட்டுவதும், திட்டுவதும் சரியா... இல்லை, அதன் தலை எழுத்து அவ்வளவு தான் என, விட்டு விடுவதா?
நீங்கள் கூறிய எதுவுமே சரி இல்லை. அடிப்பதாலும், மிரட்டுவதாலும், திட்டுவதாலும் பாடத்தின் மீது வெறுப்பு தான் ஏற்படுமே தவிர, எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. சில குழந்தைகளுக்கு படிப்பின் மீது மெதுவாகத் தான் ஆர்வம் ஏற்படும். கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலே விட்டுப் பிடிப்பது தான் விவேகம்!
***

*நீ.பஞ்சலிங்கம், நெல்லை : வளை ஓசை... கொலுசு ஓசை... எது பிடிக்கும்?
அனுபவப்பட்டவர்களிடம் அல்லவா இதற்கான பதிலை வாங்க வேண்டும். லென்ஸ் மாமாவிடம் கேட்டேன். இரண்டாவது ஓசையை முதலில் ரசிப்பாராம். முதல் ஓசையை பின்னர், "என்ஜாய்' செய்வாராம்!
***

*வி.சொப்னா, மதுரை: பத்திரிகைகளில் வரும் ராசிபலனை நம்பலாமா?
சாதகமாக பலன் வெளியாகி இருந்தால், பேஷ், பேஷ் எனக் கூறி வேலையைத் தொடருங்கள்; பாதகமான பலனாக இருந்தால், சுத்த, "டுபாக்கூர்' என மறந்து விட்டு, கடமையை தொடருங்கள்; அழுவாதீர்கள்!
***

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement