Load Image
Advertisement

ஏப்ரல் - தலித் வரலாற்று மாதம் - சிந்து, சிலை, சின்னம் சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வரலாறு

மூன்று சம்பவங்களை விவரிப்பதன் மூலம் இக்கட்டுரையைத் தொடங்கலாம்.

1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் காஞ்சிபுரத்திற்கு அருகேயிருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த தலித்துகள் சிதறி ஓடத் தொடங்கினர். தாக்குதலை முடித்த கும்பல் குடிசைகளைக் கொளுத்திவிட்டுக் குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது. அந்த வீட்டின் வெளிப்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த குப்புசாமி சேரி மக்களின் நிலைமையை அறிந்ததோடு தம்வீடு சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் கண்டார். தன் குடும்பத்தினரின் நிலைமையை அறிய வீட்டிற்கு உள்ளே ஓடிய அவரைக் கடுமையான ஆயுதங்களோடு கும்பல் சூழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் கதவைத் தாளிட்டுக்கொண்டு வீட்டிலிருந்த துப்பாக்கியால் தற்காப்பிற்காகக் கூரையை நோக்கிச் சுட்டார். ஆனால் கும்பல் வீட்டை வைக்கோலிட்டுத் தீயிட முயன்றுகொண்டிருந்தது. வேறுவழியில்லாத குப்புசாமி உள்ளிருந்தவாறே கும்பலை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மொத்தம் இருபத்தோருமுறை சுட்டார். இதில் 15 பேர் காயமடைந்தனர். 9 பேர் படுகாயமுற்றனர். ஐந்து பேர் உயிர்களும் போயின. இவையெல்லாம் முடிந்தபோது காலை மணி ஆறாகியிருந்தது. பிறகு சென்னைப் போலீஸ் கமிஷ்னருக்கும் கலெக்டருக்கும் தந்தி அனுப்பிப் போலீசார் வந்தபின்பு குப்புசாமி அவர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரோடு ஏழு தலித்துகலும் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு அக்கம்பாக்கம் குப்புசாமி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதற்குக் காரணம் சாதி உணர்ச்சியேயாகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குப்புசாமி ஆங்கிலேயரின் ராணுவத்தில் அவுல்தாராகப் பணியாற்றிச் சொந்தக் கிராமத்திற்கு திரும்பி வந்து தலித் மக்களுக்கான முன்னேற்றப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். ராணுவப் பணியிலிருந்து திரும்பிய பலரும் ராணுவ வாழ்வு தந்த ஒழுங்கைத் தம் சமூக மக்களுக்கான நடைமுறையாக மாற்றுவதை அம்மக்களின் சுயமமரியாதைக்கான வழியாகக் கருதியிருப்பதைப் பரவலாகப் பார்க்க முடியும். இம்மானுவேல் சேகரன் இவ்வாறான போராளிதான். நவீனத்துவம் ஏற்படுத்தித் தந்த வெளிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் கல்வி அபிவிருத்திச் சங்கம் ஒன்றைத் தொடங்கி அங்கம்பாக்கத்தில் பாடசாலைகளைக் குப்புசாமி ஏற்படுத்தினார். அயோத்திதாசர் வழியில் ஏற்கனவே பௌத்த நெறியை ஏற்றிருந்த அவர் தனக்கிருந்த தொடர்புகள் மூலம் நிதிதிரட்டிப் பள்ளிக்கெனக் கட்டடங்கள், கருவிகள், ஆசிரியர்களுக்கான ஊதியம் போன்றவற்றை வழங்கிவந்தார். ஆங்கிலேய அதிகாரிகளோடு தொடர்புகொண்டு கூட்டுறவுச் சங்கம் மூலமாகத் தலித் விவசாயக் கூலிகளுக்குப் பணஉதவி கிடைக்கச் செய்து புறம்போக்கு நிலப்பகுதிகளை வாங்கி விவசாயம் செய்ய உதவினார். அதுவரையிலும் வட்டிக் கடனாலும், விவசாய அடிமைநிலைமையாலும் இடருற்று வந்த தலித்துகள் அவற்றிலிருந்து ஓரளவு விடுபட்டனர். தலித்துகளின் பொருளாதாரத் தற்சார்பு, அதன் மூலமாக உருவான சுயமரியாதை நடைமுறைகள் பாரம்பரியச் சாதிய வழக்கங்களுக்குச் சவாலாக மாறின. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களை உரிமையாகக் கொண்டிருந்த முதலியார், வன்னியர் முதலிய சாதியினரைத் திரட்டிக்கொண்டு தலித்துகளையும் அவர்களின் மேம்பாட்டுக்குக் காரணமாயிருந்த குப்பு சாமியையும் தாக்குவதென வந்தபோது நடந்த சம்பவம்தான் மேலே விவரிக்கபட்ட நிகழ்ச்சி. வெறும் 60 குடிசைகளைக் கொண்டிருந்த சேரி மீது 150 வீடுகளைச் சேர்ந்த ஊரார் தொடுத்த வன்முறையே இது.
குப்புசாமி கைதுசெய்யப்பட்ட பின் ஆதிக்க வகுப்பினர் பதினெட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டனர். வழக்கு நடந்தது. மற்றவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டாலும் ஐந்து கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முறையில் குப்புசாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பு தலித் மக்களால் வருத்தத்தோடு எதிர்கொள்ளப்பட்டது. அக்காலப் பகுதியில் சென்னையை ஒட்டி விழிப்புணர்வு பெற்றிருந்த தலித் அரசியல் சூழல்மீது இவ்வழக்கு பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் தலித் முன்னோடிகளும் மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இவ்வழக்கில் இறுதிவரையிலும் குப்புசாமியின் தரப்பை விலாவாரியாக எடுத்துரைத்துவந்த கோலார் தங்கவயல் தமிழன் இதழ் தன் வாசகப் பரப்பினரிடையே இத்தகவலைக் கொண்டு சேர்த்திருந்தது. முதலில் அங்கம்பாக்கம் துக்க நிவாரணச் சங்கம் ஒன்று வி. பி. எஸ். மணி தலைமையில் தொடங்கப்பட்டு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் நோக்கில் நிதி திரட்டப்பட்டது. இதற்கென 20.3.1929 தங்க வயல் தமிழன் இதழில் நீண்டதொரு அறிக்கை வெளியானது. ஜி. அப்பாதுரை, எம். சி. ராஜா, சுவாமி சக ஜானந்தர், வி. ஜ. முனுசாமி பிள்ளை உள்ளிட்ட பல்வேறு முன்னோடிகளும் இவ்வழக்கிற்கென நிதியுதவியும் பங்களிப்பும் செலுத்தினர்.
வழக்கு சைதாப்பேட்டை நீதி மன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர். வழக்கின் நிலைமை குறித்து அவ்வப்போது துண்டுப்பிரசுரங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன. குப்புசாமி சார்பாக வழக்கறிஞர் வி. எல். எத்திராஜ் திறமையாக வாதாடினார். வழக்கின் முடிவில் 1929 மே மாதம் 23ஆம் தேதி குப்புசாமி முற்றிலுமாக விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலை தலித் மக்களின் வெற்றியாகவே கருதப்பட்டது. அவருக்காகத் திரட்டப்பட்ட நிதியின் செலவினம் குறித்து அங்கம்பாக்கம் துன்ப நிவாரண சங்கத்தின் வரவு சிலவு கணக்கு புத்தகம் என்ற பெயரில் 12.7.1929ஆம் தேதியிட்டுச் சிறுநூல் வெளியிடப்பட்டது. மேலும் 1929இல் ‘அங்கம்பாக்கம் ஸ்ரீமான் எபயன் குப்புசாமியருக்கு ஜாதி இந்துக்களால் நேர்ந்த ஆபத்தின் தற்காப்பு சிந்து’ என்னும் தலைப்பில் ஜே. ஐ. பால் வண்ணம் என்பவரால் பாடப்பட்ட சிந்து சென்னையிலும் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலிலும் பாடப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆதிதிராவிட யூனியன் பேரால் அச்சிடப்பட்டுப் பரப்பப்பட்ட இச்சிந்துதான் வெகுசில துண்டுப்பிரசுரங்களைத் தவிர்த்து இச்சம்பவம் பற்றித் தற்போது விரிந்த அளவில் கிடைத்துள்ள ஆதாரமாகும்.
மதுரை மேலூரிலிருந்து திருச்சி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கக்கன் பிறந்த தும்பைப்பட்டிக்கு முன் அமைந்திருக்கும் கிராமம் வஞ்சிநகரம். ஊரின் தலித் பகுதிக்குள் நுழைந்து சற்றுத் தொலைவு சென்றதும் தெருப்பகுதியில் அரையாள் உயர சிமெண்ட் பலகை ஒன்றில் மார்பளவு ஆண் உருவம் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த உருவம் யாரென்பதைத் தியாகி செம்மல் க்ஷி. கந்தன் (03.09.1959 - 08.10.1987) என்று பதியப்பட்டிருக்கும் தகவல் மூலம் அறியலாம். இங்கிருக்கும் வீடுகளின் எந்த விசேசமும் இந்த சிமெண்ட் பலகையின் முன் வழிபட்ட பிறகே தொடங்கப்படுகிறது. திருவிழாவும்கூட அப்படியே எனச் சொல்லப்படுகிறது. நம்முடைய பழமரபான நடுகல் வழிபாட்டை ஒத்ததாக இந்நடைமுறை அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தம்முடைய குழுவிற்காக எதிரிகளுடன் போரிட்டோ கொடிய விலங்கு உள்ளிட்ட அச்சுறுத்தல்களுடன் போராடியோ இறந்துபட்ட ஒருவரை வீரனாகக் கருதி அவர் உருவத்தைக் கல்லில் வடித்து வழிபடுவதே நடுகல் மரபாகும். எனில் கந்தன் நடத்திய போராட்டமும் இழப்பும் எவை?
மதுரை மேலூர்ப் பகுதியில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகள் ஒப்பீட்டளவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இறுக்கமானவை. இங்கிருக்கும் சாதிய முறை பிராந்தியத் தனித்தன்மை கொண்டது. இப் பகுதியில் நிலவிய சாதிய முறைகள் குறித்து அம்பேத்கரே எழுதியிருக்கிறார். (அம்பேத்கர் நூல்தொகுதி 9 - தமிழ்). காந்தியின் அரிசன சேவாசங்கம் பணியாற்றத் தேர்ந்தெடுத்த ஊர்களுள் இதுவும் ஒன்று. 1992இலும் 1997இலும் முறையே சென்னகரம்பட்டி வேலு அம்மாசி, மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஆறுபேர் ஆதிக்க வகுப்பினரால் வெட்டிக் கொல்லப்பட்ட பகுதி இதுவாகும்.
இப்பகுதியின் பெரும்பான்மையான ஊர்களில் குடிகள்ளர் முறை நிலவியது. அதாவது ஒவ்வொரு கள்ளர் குடும்பமும் தங்கள் வீட்டிலோ நிலம் உள்ளிட்ட பிற பணியிடங்களிலோ வேலைசெய்ய ஊரின் ஏதாவதொரு தலித் குடும்பத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும். அத்தகைய தலித் குடும்பத்தின் ‘நல்லதையும் கெட்டதையும்’ அக்கள்ளர் குடும்பமே பார்த்துக்கொள்ளும். தலித் ஒருவரின் ‘தவறை’ கண்டிக்க விரும்பும் யாரும் முதலில் அக்குடி கள்ளர்களிடம் முறையிடும் வழக்கம் உண்டு. இந்நிலையைக் கடந்து தலித்துகள் படிக்கவோ மற்ற இழிவான நடைமுறைகளிலிருந்து விடுபடவோ முடியாத நிலையிருந்தது. சாதாரண சிவில் உரிமையைக்கூடப் பின்பற்ற வாய்ப்பிருக்கவில்லை.
இந்நிலையில் இவ்வூரில் 1959ஆம் ஆண்டு பிறந்து எட்டாம் வகுப்புவரை படித்துப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்த கந்தன் என்ப வரும் அவருடைய அண்ணன் சுப்பையாவும் கிடாரிப்பட்டி என்னும் ஊரில் கல்குவாரியில் கல் உடைக்கும் வேலைசெய்தனர். குவாரிகளில் கூலிகளாய் இருக்கும் தலித்துகள் அவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ளும் நிலைமைக்கு இன்றுவரையிலும் முன்னேறவில்லை. கந்தனின் மற்றொரு சகோதரர் முருகன் வாகன விபத்தொன்றில் இறந்ததால் இழப்பீடாக ரூபாய் ஒண்ணே முக்கால் லட்சம் கிடைத்தது. நான்கு வருடக் குவாரி அனுபவத்தையும் அப்பணத்தையும் வைத்துச் சகோதரர்கள் குவாரி ஒன்றைத் துணைக் காண்டிராக்ட் எடுத்தனர். தலித்தொருவர் காண் டிராக்ட் எடுத்தது இப்பகுதியில் இதுவே முதல்முறையாகும். இவ்வாறு சொந்தமாகக் குவாரி பணி தொடங்கியதும் குவாரிக்கான கருவிகளையும் பணியாட்களாகத் தலித்துகளையும் ஒருங்கிணைக்க முடிந்தது. இவற்றின் மறுதலையாகத் தலித்மக்கள்மீது திணிக்கப்பட்டிருந்த சாதிக்கட்டுப்பாடுகள் பற்றிய கேள்விகளும் எழத் தொடங்கின. இச்சூழல் சாதி இந்துக்களை எத்துணை தொந்தரவிற்கும் கோபத்திற்கும் ஆளாக்கியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. செருப்பணிவது, குடிநீர் எடுப்பது தொடர்பான கட்டுப்பாடுகளைச் சுட்டிப் பல்வேறு விண்ணப்பங்கள் எழுதப்பட்டு அரசிடம் முறையிடப்பட்டது. இவ்வூரில் நிலவிய சாதிப்பாகுபாட்டை ஆராய்ந்து முடிவெடுக்கும் அமைதிக் குழு ஒன்றை அரசு அமைக்கும் அளவிற்கு அந்த விண்ணப்பங்கள் நெருக்கடியை உருவாக்கின. தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்புவதில் கந்தன் முதன்மைக் காரணியாகச் செயற்பட்டார்.
அமைதிக் குழுவில் சிவில் உரிமைகள் மட்டுமல்லாது ஊர்ப் பொதுச்சொத்துகள்மீதான உரிமைகளும் தலித் இளைஞர்களால் கோரப்பட்டன. முதலில் சிவில் உரிமைகள் பற்றிய முடிவுகள் மட்டுமே எடுக்கப்பட்டன. அமைதிக் குழு முடிவின்படி செருப்பணிந்து செல்வது போன்ற முயற்சிகள் நடந்தன. தொடர்ந்து பொதுக்குளத்தில் தலித்துகள் நீரெடுக்க முயன்றார்கள். இம்முயற்சியில் கந்தனின் குடும்பமே முதலில் ஈடுபட்டது. பிறகு சில ஆண்டுகள் கழித்துக் கோவில் கட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையில் குவாரி மறு ஏலத்தில் டெண்டர் சாதி இந்து ஒருவருக்கே கிடைத்தது. டெண்டர் பெற்ற அவர் அதுவரை உடைக்கப்பட்ட கற்களைத் தனக்கே தர வேண்டுமெனக் கோரியதும் கந்தன் தரப்பு மறுத்துவிட்டது. இதே வேளையில் படிப்படியான போராட்டங்கள் மூலம் தலித்துடன் பெற்றுவந்த வாய்ப்புகளால் அவர்கள் சுய மரியாதை மேம்பட்டு நிலவிவந்த சாதியதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் சாதி இந்துக்களின் கோபம் ‘இயல்பாக’ கூடியது.
இதற்கிடையில் கந்தனைக் கொல்வதெற்கென்றே பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு ஒன்றில் கந்தன்மீது ஏவப்பட்ட கொலை முயற்சியிலிருந்து அவர் தப்பியிருந்தார். கந்தனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பக்கத்து ஊருக்குத் தனியாக சென்றிருந்தபோது 08.10.1987ஆம் நாளில் அவர் உடலில் 27 இடங்களில் வெட்டப்பட்டுக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு மலையில் வீசப்பட்டிருந்தார். அவரது உடல் அவயங்கள் மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தன. கந்தன் கொலைவழக்கு உள்ளிட்ட பிற ஆதரவுக் காரியங்களில் தலித் தலைவர்களான எல். இளையபெருமாள், வை. பால சுந்தரம் ஆகியோர் ஓரளவு உதவியிருந்தனர். அவ்வூரில் நடந்த தலித் உரிமை முயற்சிகளுக்காகப் போராடியவர் என்ற நினைவின் காரணமாக இம்மக்கள் கந்தனுக்கு அவர் உருவம் பொறித்த இப்பலகையைப் பின்னர் எழுப்பிக்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடிப் பேருந்து நிலையத்தின் வாயிலில் மார்பளவுச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது போன்ற சிலையை வேறெங்கும் பார்த்ததாக அறிய முடியாது. ஏனெனில் தமிழகத்தில் ‘பிரபலங்களாக’ அறியப்படுவோருக்கான எந்த அடையாளமும் அச்சிலையில் இல்லை. சிலைக்குக் கீழே இருக்கும் பெயர்ப்பலகையில் ரெட்டியூர் பாண்டியன் என்று பொறிக்கப்பட்டிருப்பதால் அவர் பெயரை அறியலாம். மற்றபடி அவர் பெயரை மட்டுமல்ல அவர் இறந்து சிலையான காரணமும் இங்கு அரசியல் ஞானமுள்ளவர்களுக்கும் தெரியாது என்பதே உண்மை. பாண்டியன் எனப்படும் அவர் தலித் என்பதும் தலித்துகள்மீதான இழி தொழில் மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 15.8.1985இல் மாண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும்.
நம்முடைய சாதியமைப்பு பிறப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுச் சாதிகளுக்கெனத் தொழில், குடியிருப்பு என்றமைக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டுவருகிறது. விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை முடக்கப்பட்டு ஒவ்வொரு சாதிக்கென மேலிருந்து கீழாகத் தொழில்கள் வகுக்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றில் அடிநிலை மக்களுக்குச் சுகாதாரமற்ற அழுக்கான தொழில்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. எனவே விதிக்கப்பட்ட தொழில் முறையிலிருந்து விடுபடுவதும் அதற்கு மாறாகக் கல்வி வேலை வாய்ப்பு என மாறுவதும் சாதி மறுப்பின் அடிப்படைகளாகின்றன. இந்நிலையைச் சாத்தியப்படுத்துவதில் நவீன கால அரசியலுக்குப் பங்கிருந்ததால்தான் தலித் முன்னோடிகள் நவீன அரசியலின் ஆதரவாளர்களாக இருந்தனர். தமிழகம் என்ற அளவில் இழிதொழில் மறுப்புப் போராட்டங்கள் பகுதியளவில் ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாக நடந்திருக்கின்றன. ஏறத்தாழ நூறாண்டுப் போராட்ட வரலாற்றைக் கொண்ட இவற்றுக்குப் பதிவுகள் இல்லை. அவ்வாறான பதிவுகளில் ஒன்றுதான் காட்டு மன்னார்குடியிலுள்ள பாண்டியனின் இச்சிலை. இன்றைய கடலூர் மாவட்டம் உள்ளடங்கியுள்ள பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் 1946 முதல் 2000 வரையிலும் மாட்டுத் தோலால் செய்யப்பட்ட பறைமேள எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்ததற்கான பதிவுகள் கிடைக்கின்றன. இதே போன்று செத்த மாடெடுக்க மறுப்பு, பிணக்குழி தோண்ட மறுப்பு போன்ற போராட்டங்களும் நடந்த பகுதிகளாக வட மாவட்டங்கள் அறியப்படுகின்றன. இவ்வகைப் போராட்டங்கள் உள்ளூர் சார்ந்தவை. மாநிலம் தழுவிய பேரளவு அரசியல் முழக்கமாக இருப்பதில்லை. அவ்வாறான கவனமும் கிடைப்பதில்லை. மக்களை ஓரிடத்தில் கூட்டித் தலைவர் ஒருவரால் நடத்தப்படுவதாக இருப்பதில்லை. மக்களால் தனியாகவோ கூட்டாகவோ நடத்தப்படுபவையாக இருக்கின்றன.
காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் யாரும் பறை அடிக்கக் கூடாது; மற்ற சாதியினருக்கும் அடிக்கப் போகக்கூடாது என்று 1962ஆம் ஆண்டு தீர்மானம் ஒன்று போடப்பட்டது. இவ்வாறுதான் இப்பகுதியில் இழிதொழிலுக்கு எதிரான விழிப்புணர்வை எல். இளையபெருமாள் ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் காட்டுமன்னார்குடிக்கு அருகில் 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாளில் தீமிதித் திருவிழா தொடங்கியது. அதில் உள்ளூர் தலித்துகள் பறையடிக்க வராததால் மாவட்டத்திற்கு வெளியிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். எனினும் மொத்தத்தில் பறைமேளத்திற்கு இப்பகுதி தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீஸ் குவிக்கப்பட்டது. பதினாறு கிராமங்களைச் சேர்ந்த தலித்துகள் கோவிலை நோக்கி வந்தனர். காவல் துறை தடுத்தது. தடியடி நடத்தியது. கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியது. இறுதியாகத் துப்பாக்கி சூடும் நடத்தியது. எதிர்த்தரப்புக்கோ காவல் துறைக்கோ சிறிதும் சேதாரமில்லை. ஆனால் தலித்துகளில் பத்துப் பேர் காயம்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் தலித் இளைஞர் பாண்டியன் மரணமடைந்தார். அவரது மரணம் போராட்டத்தைச் சூடாக்கியது. இப்பகுதியில் பறை மேளம் அடிப்பது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.
பிறகு பாண்டியனின் தியாகம் மக்களால் பலவாறாக நினைவில் கொள்ளப்பட்டது. அதாவது துப்பாக்கிச் சூடு நடந்த வடவாற்றின் தென்கரையில் (பூவிழுந்த நல்லூர்) நினைவுக் கம்பம், காட்டுமன்னார் குடியில் சிலையும் கம்பமும் அமைக்கப் பட்டுள்ளன. அதோடு பாண்டியனின் இழப்பைப் பற்றி அவர் தாயார் சின்னப்பொன்னு பாடுவதாக வீரானநல்லூர் முருகானந்தம் எழுதி மேடைகளில் பாடலாகவும் சாவில் ஒப்பாரியாகவும் வயற்காட்டில் நடவுப்பாட்டாகவும் பாடலொன்று இன்றளவும் பாடப்படுகிறது. இவ்வாறுதான் பாண்டியனின் நினைவு வெகுமக்களால் காப்பாற்றப்படுகிறது. பாண்டியனின் புகைப்படம்கூடக் கிடைக்காத நிலையில் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இன்றைய சிலையைப் பற்றித் தகவலாளி ஒருவர் கூறுவதாவது: “பாண்டியன் உருவத்தின் அசல் தன்மையைவிட அவரது தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் நாங்கள் தந்த உருவமாகவே அதைக் கொள்கிறோம்.”
பொதுவாகத் தலித்துகளின் போராட்டங்கள் பற்றிப் பேசும்போது அவை மற்றவற்றைப் போலத் தனி மனிதர்களின் செயற்பாடுகளை/கருத்துகளைச் சார்ந்தவையாக அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம். போராளி, தியாகி என்றாலே நமக்குப் பெரிய பிம்பங்களே நினைவுக்கு வருகின்றன. பலவேளைகளில் ‘சிறிய’ அளவில் செய்யப்பட்ட தியாகமும் போராட்டமும்கூடத் தலைவர் என்ற பிம்பத்திற்காகப் பெரிதாக்கப்படுகின்றன. தனிமனிதர்களின் பங்கை முற்றிலும் புறக்கணித்துப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்றாலும் நம்மில் குடிகொண்டிருக்கும் மரபான நாயக பிம்பம் பற்றிய ஈர்ப்பே இதில் அதிகமும் பங்காற்றுகிறது. சாதியால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சாதியையோ அது தரும் இழிவையோ ஏதோவொருவகையில் எதிர்கொண்டுவிடுகிறார். இந்த நிலைமையில் அவர் அதை எதிர்ப்பவராகவோ ஏற்பவராகவோ இருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு எதிர்கொள்ளுகிறவர் அதைப் பற்றி முன்திட்டமில்லாதவராகவோ யோசித்திராதவராகவோகூட இருக்கலாம். ஆனால் அவர் பிரச்சினைகளை எதிர்கொண்டேயாக வேண்டும். மேலே விவரிக்கப்பட்ட மூன்று சம்பவங்களிலும் அப்போராளிகள் பெரிய கருத்தியல் பின்னணியோ இயக்கத் தொடர்ச்சியோ கொண்டிருக்கவில்லை. வஞ்சிநகரம் கந்தன் எந்த அரசியல் பின்னணியும் இல்லாத, எம். ஜி. ஆர். அபிமானியாக இருந்தவர்தான். ரெட்டியூர்ப் பாண்டியன் தந்தையை இழந்தவர். கூலி வேலைக்குச் சென்ற எளிய குடும்பப் பின்னணி கொண்டவர். அவரின் அரசியல் செயற்பாடுகளைச் சொல்லும் எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. கடலூர்ப் பகுதியில் இழிதொழில் மறுப்பு விழிப்புணர்வு எல். இளையபெருமாளால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் பாண்டியனிடம் ஏற்பட்டிருந்ததா என்பதைக் கூறும் குறிப்புகள் இல்லை. ஆனால் கல்லூரியிலிருந்து வந்து அப்போராட்டத்தில் ஈடுபடவேண்டுமென அவரைப் போராட்டவுணர்வு உந்தியிருந்ததைப் பார்க்கிறோம். இங்கே சாதிக்கு எதிராக யோசிப்பதற்குப் பெரிய தர்க்கங்கள் தேவைப்படவில்லை. அவர் ஒடுக்கப்பட்டவராக இருந்த அனுபவமே போதுமானதாக இருந்திருக்கிறது.
இவ்வாறு இந்தியா / தமிழகம் எங்கும் கிராமங்கள் தொடங்கி நகரங்கள்வரை பிரச்சினைகள் இருக்கின்றன. இத்தகைய எதிர்கொள்ளலில் பெறக்கூடிய அனுபவங்கள் அதிகம். இதில் பலவகைப் போராட்டங்கள் ஊடகங்களின் கவனத்திற்கு வராமலே போய்விடுகின்றன. பலவும் செய்திமதிப்பு அளிக்கப்படாமலேயே மறைக்கப்படுகின்றன. அதேபோல உள்ளூர் அளவிலேயே தங்கிவிடுகின்றன. கட்சிகளாலோ அரசாங்கத்தாலோ போற்றப்படாமல் விடப்படுகின்றன. ஆனால் இவ்வாறு கவனப்படுத்தப்படாத அனுபவங்களும் போராட்டங்களே. இவையெல்லாவற்றையும்விட இப்போராட்டங்கள் வரலாறு என்ற சொல்லாடலுக்குள் கொண்டுவரப்படுவதில்லை.
சாதி வட்டாரங்களுக்கும் உள்ளூர் நிலைமைகளுக்கும் ஏற்ப அமைந்திருப்பதைப் போலவே அதை எதிர்கொள்ளும் போராட்டங்களும் வட்டார அளவில் நிலவுகின்றன. இவ்வாறான போராட்ட வரலாற்றை ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் சார்ந்து தொகுக்க முடியும். மேலே விவரிக்கப்பட்ட மூன்று சம்பவங்களும் வெவ்வேறு காலங்கள், இடங்கள், அனுபவங்கள் சார்ந்து நடந்தவையாகும். ஒன்றுக்கொன்று அறிமுகமானவை அல்ல. எனினும் இவை சாதியை எதிர்கொள்ளுவதில் நடந்த அனுபவங்கள். இவற்றை வரலாறு எழுதுபவர்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்கள்கூட நினைவில் கொள்ளுவதில்லை. ஆனால் இவற்றை அப்பகுதி மக்கள் தங்களுக்குகந்த/தெரிந்த வழிகளில் நினைவில்கொள்கின்றனர். இவ்வாறுதான் மேற்கண்ட மூன்று சம்பவங்கள் சிந்துப் பாடல், சிலை, நினைவுக்கல் என்ற அளவில் நினைவில் கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதில் இயக்கங்களின் ஆதரவு என்பது அவ்வப்போனதாக மட்டுமே அமைந்திருப்பதையும் அறிகிறோம். இக்கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு தலித் சாதிப் பதிவுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஆனால் தமிழகம் எங்கும் வட்டாரரீதியாக இவ்வகைப் பதிவுகளைத் திரட்ட முயன்றால் பல தாழ்த்தப்பட்ட சாதிகளின் போராட்டங்களைத் தொகுக்க முடியும். அவையே சாதி மறுப்புப் போராட்டங்களின் வட்டார வரலாறாக விளங்கும்.

உதவிய நூல்கள்
1. உரிமைகாக்கப் போரிட்ட உத்தமர் அங்கம்பாக்கம் குப்புசாமியார் - அன்பு பொன்னோவியம், சித்தார்த்தா பதிப்பகம், சென்னை, 2009.
2. வஞ்சிநகரம் கந்தன்- ஸ்டாலின் ராஜாங்கம், வணங்காமுடி பதிப்பகம், அலங்காநல்லூர், மதுரை, 2008.
3. ரெட்டியூர் பாண்டியன் பறை எதிர்ப்பு வரலாறு - பூவிழியன் கொதிப்பு வெளியீடு, சீர்காழி, 2007.
4. அயோத்திதாச பண்டிதர் இதழ்ப் பணி - புலவர் வே. பிரபாகரன், திருவள்ளுவர் ஆய்வு நூலகம், சென்னை, 2008.
(இக்கட்டுரை தூத்துக்குடி செயிண்ட்மேரீஸ் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை 2012 அக்டோபர் 4, 5ஆம் நாட்களில் நடத்திய தேசியக் கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்டது.)

- ஸ்டாலின் ராஜாங்கம்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement