மும்பை அணி அசத்தல் வெற்றி: வெளியேறியது லக்னோ

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் 'எலிமினேட்டர்' போட்டியில், புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த லக்னோ, மும்பை அணிகள் மோதின.

மும்பை அணிக்கு இஷான் கிஷான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. குர்னால் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்தார் இஷான் கிஷான்.

குர்னால் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரோகித் (11), நவீன்-உல்-ஹக் பந்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த கேமிரான் கிரீன், நவீன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கினார். யாஷ் தாகூர் 'வேகத்தில்' இஷான் கிஷான் (15) வெளியேறினார்.

மோசின் கான் வீசிய 9வது ஓவரில் சூர்யகுமார், கிரீன் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டனர். பொறுப்பாக விளையாடிய சூர்யகுமார், ரவி பிஷ்னோய், நவீன் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. லக்னோ சார்பில் நவீன் 4, யாஷ் தாகூர் 3 விக்கெட் சாய்த்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு, மும்பை பவுலர்கள் தொல்லை தந்தனர். ஆகாஷ் மத்வால் 'வேகத்தில்' பிரேரக் மன்கட் (3) அவுட்டானார். ஜோர்டான் பந்தில் கைல் மேயர்ஸ் (18) சரணடைந்தார்.

பியுஸ் சாவ்லா 'சுழலில்' கேப்டன் குர்னால் பாண்ட்யா (8) சிக்கினார். மத்வால் வீசிய 10வது ஓவரில் ஆயுஷ் படோனி (1), நிக்கோலஸ் பூரன் (0) அவுட்டாகினர்.

கிருஷ்ணப்பா கவுதம் (2) ஏமாற்றினார். தொடர்ந்து மிரட்டிய மத்வால் பந்தில் ரவி பிஷ்னோய் (3) ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா (15) 'ரன்-அவுட்' ஆனார். மத்வால் 'வேகத்தில்' மோசின் கான் (0) போல்டானார்.

லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நவீன் (1) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை சார்பில் மத்வால் 5 விக்கெட் (3.3 ஓவர், 5 ரன்) சாய்த்தார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...