திகிலூட்டும் பெலும் குகைகள்!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பெலும் குகை உள்ளது.
இந்திய துணைக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகை, சமவெளியில் உள்ள மிக நீளமான குகை எனப் பல சிறப்புகளைப் பெற்ற இந்தக் குகையில் பயணிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
2002ல் ஆந்திர அரசு இந்தக் குகையை சுற்றுலா தலமாக மேம்படுத்தியது. மூன்றரை கி.மீ., நீளம் வரை குகை ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் ஒன்றரை கி.மீ., தொலைவுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பெலும் குகைகளின் நுழைவாயிலுக்கு அருகில் ஒர் பெரிய புத்தர் சிலை பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் உள்ள குகையில் தான் அந்த காலத்தில் புத்த துறவிகள் தியானத்தில் ஈடுபட்டார்கள் என நம்பப்படுகிறது.
இந்தக் குகைக்குள் நுழைய மொத்தம் 16 பாதைகள் உள்ளது . வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குகை, தண்ணீர் சொட்டும் வடிவத்தாலான கூம்பு வடிவ பாறைகளால் ஆனது.
கசித்துளி படிகம் என்று சொல்லப்படும் இந்தப் படிகங்களில் சொட்டுச் சொட்டாக குளிர்ந்த, தூயத் தண்ணீர் வடிந்து கொண்டே உள்ளது.
குகையின் நடுவே சிறு அருவியையும் பார்க்க முடியும்.திறந்து விட்ட குழாயில் தண்ணீர்க் கொட்டுவது போல, பாறையைத் துளைத்துக் கொண்டு இடைவிடாது இந்த அருவியில் தண்ணீர்க் கொட்டுகிறது.
பெலும் குகைகளை பார்ப்பதற்கு உள்ளூர் மக்களிடம் 50 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளிடம் 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இக்குகைக்குள் நுழைவதற்கு ஒரு சிறு ஓட்டை வழியாகதான் நீங்கள் இறங்க வேண்டும்.
விசாலமான அறைகள், கசித்துளி படிவுகள், கருப்பு சுண்ணாம்பு கற்கள், நீண்ட சுரங்க வழிகள் என மர்மமான இடத்துக்குள் நுழைந்த திகில் அனுபவத்தை இந்த இடம் அளிக்கும்.