உலகின் அரிய பாரம்பரிய சின்னங்கள்... மம்மூத் குகைகள் !
எகிப்து பிரமிட், சீனப் பெருஞ்சுவர், கர்நாடகா ஹம்பி கோவில் உள்ளிட்ட யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 1,154 உலக பாரம்பரிய சின்னங்கள் தற்போது உலகளவில் பிரபலமாக உள்ளன.
பிரபலமான சில உலக பாரம்பரிய சின்னங்கள் மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், உலக கவனம் பெறாத ஏராளமான சின்னங்களில், அமெரிக்காவின் மம்மூத் குகைகள் ஒன்று.
கற்கால மனிதர்கள் பாறைகளைக் குடைந்து அதில் தங்குவதற்கு அறைகள் உருவாக்கி, பலநூறு ஆண்டுகளாகத் தங்கியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாகவே மனித நாகரிகம் தோன்றியது.
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தின் மத்திய மேற்குப் பகுதியில் 53 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள உலகின் நீண்ட தொடர் குகை மம்மூத் குகைகள்.
மம்மூத் குகைகளுக்குள் பிரம்மாண்ட சுவர்கள், உயரமான விட்டம் உள்ளது. 689 கி.மீ., தூரம் நீண்டுள்ள இந்த குகையின் பல பிரம்மாண்ட அறைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லலாம்.
குழந்தைகள், வயோதிகர்களுக்கு ரோப் கார் வசதியும் உள்ளது. கரடு முரடான பாதையில் நடக்க மரப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குகையை ஒட்டி நோலின் என்ற அருவியும் உள்ளது.
மிசிசிப்பி கால லைம்ஸ்டோன் கற்களால் ஆன இந்த குகை சுவர்கள் மிகவும் கடினமானவை. எப்பேர்ப்பட்ட காலச்சூழலையும் தாங்கும் தன்மை கொண்டவை.
கடந்த 1981 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக சேர்க்கப்பட்ட மம்மூத் குகைகளை ஒட்டி மம்மூத் தேசியப் பூங்காவும் உள்ளது.