ஹார்ட் வடிவ ஏரியின் அழகை காண அழைக்கும் செம்ப்ரா சிகரம் !
அடிக்கும் வெயிலுக்கு சாதாரணமான ஏரி என்றாலே பலரும் துள்ளிக்குதித்து ஓடுவர். ஆனால், இதய வடிவிலான ஏரி என்றால்.. கேட்கவா வேண்டும்? உற்சாகமாக விசிட் செய்வர்.
பச்சைப்பசேல் செடிகள், அழகிய மலைகள், தண்ணீரில் மிதக்கும் படகுகள் என இயற்கையின் சொர்க்கமாக உள்ளது கேரளா. இந்த சொர்க்கத்தில் தான் இதய வடிவிலான ஏரியும் உள்ளது.
கேரளாவின் வயநாடு அருகே கல்பெட்டாவில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் செம்பரா மலை அடிவாரத்தின் வனத்துறை பேஸ் கேம்ப் உள்ளது. அங்கிருந்து 3.5 கி.மீ., தூரத்துக்கு டிரெக்கிங் செல்ல வேண்டும்.
அப்போது, இந்த செம்பரா சிகரத்தின் உச்சியில் அழகிய 'ஹிருதயதடாகம்' என்ற இதய வடிவ ஏரியை கண்டு ரசிக்கலாம். இங்கிருந்து முழு வயநாடு, கோழிக்கோடு மாவட்டத்தின் சில பகுதிகளையும் ரசிக்கலாம்.
மூச்சடைக்கக்கூடிய அழகிய இயற்கைக்காட்சிகள் இங்கு ஏராளமாக கொட்டிக்குவிந்துள்ளன. ஏரியை சுற்றி சந்தன மரங்கள், நீலக்குறிஞ்சி உட்பட பல்வேறு தாவர இனங்கள் உள்ளன.
மரங்கள், மூடுபனி மற்றும் மென்மையாக வருடிச்செல்லும் காற்று என டிரெக்கிங் பயணம் இனிமையாக அமையக்கூடும்.
டிரெக்கிங் செய்ய 3 மணி நேரம் வரை ஆகிறது. ஆண்டு முழுவதும் வற்றாத நிலையில் இந்த இதய ஏரி உள்ளது. பருவமழை மாதங்கள் தவிர ஆண்டு முழுவதுமே இங்கு செல்லலாம்.
காலை 7.00 முதல் மாலை 5.00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது; வனத்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.