பைனலுக்கு செல்லுமா சென்னை: குஜராத் அணியுடன் மோதல்
பிரிமியர் கிரிக்கெட் தகுதிச் சுற்று-1ல் இன்று சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை வென்றால், நேரடியாக பைனலுக்கு தகுதி பெறலாம்.
லீக் சுற்று முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த குஜராத் (20 புள்ளி), சென்னை (17), லக்னோ (17), மும்பை (16) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தன.
இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று-1ல், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த 'நடப்பு சாம்பியன்' குஜராத் அணி, 'நான்கு முறை சாம்பியன்' சென்னை அணியை எதிர்கொள்கிறது.
லீக் சுற்றில் சிறப்பான துவக்கம் தந்த கான்வே (585 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (504) ஜோடி இன்றும் கைகொடுத்தால் நல்லது.
இம்முறை 33 சிக்சர் விளாசிய ஷிவம் துபே (385), ரகானே (282) அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை பதிவு செய்யலாம்.
வேகப்பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே (20 விக்கெட்), பதிரானா (15), தீபக் சகார் (10) விக்கெட் வேட்டை நடத்தலாம். 'சுழலில்' ஜடேஜா (17), மொயீன் அலி (9), தீக்சனா (9) கூட்டணி மிரட்ட காத்திருக்கின்றனர்.
குஜராத் அணி, பேட்டிங்கில் சுப்மன் கில் (680) நம்பிக்கை அளிக்கிறார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (289), சகா (287), விஜய் சங்கர் (287), டேவிட் மில்லர் (255) கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
'வேகத்தில்' முகமது ஷமி, 'சுழலில்' ரஷித் கான் மிரட்டுகின்றனர். தலா 24 விக்கெட் சாய்த்துள்ள இவர்கள், சென்னை அணிக்கு தொல்லை தரலாம். மோகித் சர்மா (17), நுார் அகமதுவின் (13) பந்துவீச்சும் நெருக்கடி கொடுக்கலாம்.
இன்று சென்னை வெல்லும் பட்சத்தில், பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் 10வது முறையாக பைனலுக்கு முன்னேறலாம்.
இன்று குஜராத் அணி வெற்றி பெறும் பட்சத்தில், தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு தகுதி பெறலாம்.