Load Image
dinamalar telegram
Advertisement

80ஸ் பில்டப்

தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - கல்யாண்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - சந்தானம், ராதிகா ப்ரீத்தி
வெளியான தேதி - 24 நவம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு துன்ப நிகழ்வு நடந்த வீட்டில் ஒரு காதல் கதையைச் சொன்ன முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன்பு சில காமெடி படங்களை இயக்கிய கல்யாண் இந்தப் படத்தையும் காமெடியாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். முழு காமெடி படமாகவும் இல்லாமல், ஒரு காதல் படமாகவும் இல்லாமல் ஆங்காங்கே ஒரு சில காமெடிகள், அதைவிட கூடுதலாகக் கொஞ்சம் காதல் என பயணித்திருக்கிறார்.

80களில் நடக்கும் கதை. கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் சந்தானம். அவருடைய தாத்தா சுந்தர்ராஜன் திடீரென இறந்துவிடுகிறார். அந்த துக்க நிகழ்வுக்கு சந்தானத்தின் முறைப் பெண்ணான ராதிகா ப்ரீத்தி வருகிறார். அவரைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் சந்தானம். ''ஆனால், அவள் மெட்ராஸ் பெண், நம் ஊரு பெண்கள் போல கிடையாது, இந்த துக்க வீட்டின் ஈரம் காய்வதற்குள் அவளை வந்து ஐ லவ் யூ' சொல்ல வை பார்ப்போம்” என சந்தானத்திற்கு சவால் விடுகிறார் அவரது தங்கை. இந்த சவாலில் சந்தானம் ஜெயிக்கிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

80களின் கால கட்டத்தை நடிகர்களின் ஹேர்ஸ்டைல், டிரஸ், அந்தக் கால சினிமா என கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். ஒரே வீட்டில் கதை நகர்ந்தாலும் போரடிக்காத விதத்தில் கதையை நகர்த்தியிருக்கிறார். முழு நகைச்சுவைக்கான இடங்கள் பல இருந்தும் அந்த இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

80களின் ஹேர்ஸ்டைலில் ஹீரோ மாதிரியே இருக்கிறார் சந்தானம். கமல்ஹாசன் ரசிகர் என்பதால் அவரது சாயலை ஆங்காங்கே காட்ட முயற்சித்திருக்கிறார். அதனால்தானோ என்னவோ படத்தில் அவரது காமெடியை விட காதல் தான் அதிகம் இருக்கிறது.

சந்தானம் வீட்டிற்கு வரும் முறைப் பெண்ணாக ராதிகா ப்ரீத்தி. சந்தானம் செய்யும் ஒவ்வொன்றையும் பார்த்து வியந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். பாவாடை, தாவணியில் கதாநாயகிகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று. இதற்காக 80களின் கதைகளில் படத்தை எடுத்தால்தான் அவற்றைப் பார்க்க முடியும் போலிருக்கிறது.

சந்தானத்தின் தங்கையாக சங்கீதா. சிறு வயதிலிருந்தே அண்ணன், தங்கை இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்பவர்கள். அந்த விதத்தில் சந்தானத்தின் காதலிலும் வில்லியாக குறுக்கே வந்து நிற்கிறார் சங்கீதா. கதாநாயகிக்கு படத்தில் தோழிகள் கிடையாது, ஆனால், தங்கையுடன் ஐந்தாறு தோழிகள் வலம் வருகிறார்கள்.

இந்தக் கதையில் வைரத்தை முழுங்கி, ஷாக் அடித்தும் செத்த சுந்தர்ராஜன், அவரை அழைத்துச் செல்ல வரும் எமதர்மன் ஆக கேஎஸ் ரவிக்குமார், சித்ரகுப்தன் ஆக முனிஷ்காந்த் என சில கதாபாத்திரங்களையும், சுந்தர்ராஜன் பிணத்திலிருந்து வைரத்தை மீட்க வரும் கும்பலாக மன்சூரலிகான், ஆனந்தராஜ், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், சந்தானத்தின் அப்பாவாக ஆடுகளம் நரேன் என மற்ற கதாபாத்திரங்களும் நகைச்சுவை செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் கவனம் செலுத்திய அளவிற்கு பாடல்களில் செலுத்தத் தவறிவிட்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான். ஒரே வீடாக இருந்தாலும் சுற்றிச் சுற்றி விதவித கோணங்களில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ்.

சந்தானம் என்றாலே அவரிடமிருந்து முழு நகைச்சுவை படத்தைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை காட்சிக்குக் காட்சி அவரை சிரிக்க வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அது போன்ற கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் சந்தானம் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இந்தப் படம் காமெடியும், காதலுமாக இருப்பதால் அப்படி எதிர்பார்க்கு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

80ஸ் பில்டப் - வீக் பில்டப்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement