தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - அகமது
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - ஜெயம் ரவி, நயன்தாரா
வெளியான தேதி - 28 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 33 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களே, இயக்குனர்களே, நடிகர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். சைக்கோ கில்லர், சீரியல் கில்லர், பெண்கள் மீதான பாலியல் கொடுமை ஆகியவற்றிற்கு சில ஆண்டுகள் ஓய்வு கொடுங்கள். பெண்கள் மீதான கொடுமைகளைக் காட்டுகிறோம் என ஒரு வரியில் சொல்லிவிட்டு, கொடூரமான கொலைகள், அருவெறுப்பான காட்சிகள், கெட்ட வார்த்தைகள் என இந்த மாதிரி படம் எடுத்தால் உங்களை அந்த 'இறைவன்' கூட மன்னிக்க மாட்டார்.
படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு இந்து மதத்தின் படைப்புக் கடவுளான பிரம்மா பெயரை ஏதோ ஒரு வன்மத்துடன் வைத்திருக்கிறார் இயக்குனர் அஹமது. இந்து மதத்தை வைத்து ஏதாவது சர்ச்சை வரும்படி செய்தால் அது பரபரப்பாகி படத்திற்கு இலவச பப்ளிசிட்டியைத் தந்துவிடும் என நினைத்து சில இயக்குனர்கள் செயல்பட்டால் அது அவர்களுக்கு எதிர்வினையைத்தான் தரும்.
6 மாதங்களில் 12 இளம் பெண்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புக்களை கொடூரமாக வெட்டி கொலை செய்கிறார் வில்லன் ராகுல் போஸ். அவர்தான் குற்றவாளி என கண்டுபிடித்து அவரை நெருங்குகிறார்கள் தனிப்படை போலீஸ் அதிகாரிகளான ஜெயம் ரவி, நரேன். அப்போது நடக்கும் மோதலில் நரேன் கொல்லப்படுகிறார். கைது செய்யப்பட்ட ராகுல் பின்னர் தப்பித்தும் விடுகிறார். நண்பன் இழப்பைத் தாளாமல் போலீஸ் வேலையைத் தொடர மாட்டேன் என ராஜினாமா செய்கிறார் ஜெயம் ரவி. இருந்தாலும் தொடர்ந்து இளம் பெண்களின் கடத்தல் நடக்கிறது. தனக்கு நெருக்கமானவரின் பெண்ணும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட மீண்டும் களத்தில் இறங்குகிறார் ஜெயம் ரவி. கொலைகாரனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் இதற்கு முன்பும் சில படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. அதே முறைப்பு, விறைப்பு என இந்தப் படத்திலும் செய்துவிட்டுப் போகிறார். இது போன்ற படங்களில் நடித்து தனக்கிருக்கும் குடும்பத்து ரசிகர்களை ஜெயம் ரவி இழந்துவிடக் கூடாது.
இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் நடித்திருக்கிறார் நயன்தாரா. அது ஒரு கட்டத்தில் தெரிந்த பின்புதான் இந்தப் படத்தை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கிறார் போலிருக்கிறது.
இடைவேளை வரை சைக்கோ கில்லராக ராகுல் போஸ். அதற்குப் பின் அதே சைக்கோ கில்லராக வினோத் கிஷன். இதற்கு முன்பும் ஒரு படத்தில் இதே போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வினோத். படத்தில் ஆசிஷ் வித்யாரித்தி, அழகம் பெருமாள், சார்லி, விஜயலட்சுமி என பலரது கதாபாத்திரங்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.
தனது இசையாவது படத்தைக் கொஞ்சம் காப்பாற்றட்டும் என என்னென்னமோ செய்து பார்த்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. 'சைக்கோ' படம் என்றாலே படத்தை இப்படித்தான் 'டல்' ஆக கிரேடிங் செய்ய வேண்டுமா ?. ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்த் உழைப்பெல்லாம் வீணாகிப் போனது போன்ற உணர்வு.
கசாப்புக் கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டித் தொங்க வைத்திருப்பது போன்று இந்தப் படத்தில் இளம் பெண்களில் உடல்களை வெட்டி கூறு போட்டு வைத்திருப்பது போல் காட்டுகிறார்கள். வில்லன் அசிங்கமான கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறார், இதற்கெல்லாம் சென்சார் அனுமதி கொடுக்கிறதா என்ற அதிர்ச்சி வருகிறது.
இளகிய மனம் கொண்டவர்கள், பெண்கள் தயவு செய்து இந்தப் படத்திற்குப் போக வேண்டாம். வெளியில் வரும் போது உங்கள் மீதே ரத்தம் தெறித்தது போன்ற உணர்வு வந்தாலும் வரும்.
இறைவன் - இறைவா, ரசிகர்களைக் காப்பாற்று…
வாசகர் கருத்து (3)
வில்லன் பெயர் பிரம்மா. Rating 1.5வில்லன் பெயர் முஹம்மது. Rating 3
இவ்வளவு கேவலமாக விமர்சித்ததை பார்த்தால் படம் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்று தெரிகிறது. படத்தின் ட்ரைலர்-ஐ பார்க்கும் போதே ஏன் இவ்வளவு வன்முறை என்று தோன்றியது. கடந்த 2 படங்களாக ஜெயம் ரவியின் படங்கள் பார்க்க சகிக்கவில்லை. அகிலன் என்று படம். ஏன் அவ்வளவு கேவலமாக அந்த ஹீரோ பாத்திரதை சித்தரித்தார்கள் என்று தெரியவில்லை. பொன்னியின் செல்வன் கொடுத்த பேரை 2 படத்தில் மொத்தமாக இழந்து உள்ளார். கதையை கேட்டுவிட்டு நடிங்க. இல்லைனா சீக்கிரம் Packup சொல்லிடுவாங்க
வில்லனுக்கு அல்லா என்று பெயர் வைத்து இருந்தால்நன்றாக இருக்கும்
இப்போது சிறுபான்மையினர் ஹிந்துக்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கிறார்கள், இதர்கெல்லாம் காரணம் இங்கு நடக்கும் ஆட்சியெ காரணம். ஹிந்துக்கள் நினைத்தால், இவர்கள் செய்யும் வியாபாரம் அனைத்தும் படுத்து விடும்.