Load Image
dinamalar telegram
Advertisement

தீராக் காதல்

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ரோகின் வெங்கடேசன்
இசை - சித்துகுமார்
நடிப்பு - ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, அம்ஜத்
வெளியான தேதி - 26 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

திருமணத்திற்குப் பிறகு, திருமணத்திற்கு முன் இருந்த, பிரிந்த காதல் மீண்டும் வாழ்க்கையின் குறுக்கே வந்தால் என்பதை இதற்கு முன்பும் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். இந்தக் காலத்து ரசிகர்களுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், 'சில்லுனு ஒரு காதல், ராஜா ராணி, 96' போன்ற படங்களைச் சொல்லலாம். இந்தப் படமும் அப்படியான ஒரு படம்தான், கொஞ்சம் சீரியசாக, கொஞ்சம் யதார்த்தமாக நிறைய காதலுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.

காதலித்துப் பிரிந்து போனவர்களுக்கு, காதலிக்கு நிம்மதியில்லாத வாழ்க்கை அமைந்தால் எப்படியிருக்கும், காதலனுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைந்தால் எப்படியிருக்கும். பிரிந்தவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க நேர்ந்தால் அவர்களது பழைய காதல் என்ன ஆகும், அவர்களது திருமண வாழ்க்கை பாதிப்படையுமா, அடையாதா என்பதை மிகவும் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் கல்லூரியில் படித்த போது காதலித்தவர்கள். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவரவர் அலுவலக வேலை நிமித்தமாக மங்களூர் சென்ற போது மீண்டும் சந்திக்கிறார்கள். சில நாட்கள் இருவரும் தங்களது பழைய காதல் ஞாபகங்களுடன் சுற்றுகிறார்கள். ஜெய் அவரது மனைவி ஷிவதா, மகள் ஆகியோரைப் பற்றியும், ஐஸ்வர்யா அவரது கொடுமைக்கார கணவர் அஜ்மத் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்கள். இனி மீண்டும் சந்திக்க வேண்டாம் எனச் சொல்லி ஜெய் சென்னை வந்துவிடுகிறார். ஐஸ்வர்யா அவரது வீட்டிற்குச் செல்ல அங்கு அவரது கணவர் அம்ஜத்துடன் கடும் சண்டை நடக்க வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதோடு ஜெய் பிளாட் எதிரிலேயே குடி வருகிறார். தன்னோடு வந்துவிடுமாறு ஜெய்யை வற்புறுத்துகிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இருவரும் அவரவர் வாழ்க்கையில் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்ட பிறகு மீண்டும் சந்தித்தாலோ, பேசினாலோ இந்த சமூகம் அவர்களை கள்ளக் காதலர்கள் என்றே சொல்லும். அப்படி ஒரு சொல்லை படம் பார்க்கும் ரசிகர்களும் சொல்லிவிடக் கூடாதென கவனமாக காட்சிகளுடன், வசனங்களுடன் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

'ராஜா ராணி' படத்தின் சூர்யா கதாபாத்திரத்தின் நிறைவான நடிப்பை மீண்டும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியருக்கிறார் ஜெய். அவ்வளவு நேசித்த காதலியை அத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது வரும் மகிழ்ச்சியை, அவருடன் திரும்பவும் சுற்ற கிடைத்த வாய்ப்பை, அந்த உணர்வை நமக்குள்ளும் கடத்துகிறார். பின்னர் தனது மனைவி, மகள்தான் பெரிது என முன்னாள் காதலி ஐஸ்வர்யாவைப் பார்ப்பதைத் தவிர்க்கும் ஒரு இயல்பான கணவனாக, அப்பாவாக ரசிக்க வைக்கிறார். கிளைமாக்சில் அவர் பேசும் அந்த வசனம் அவரு கதாபாத்திரத்தின் ஒட்டு மொத்த குணாதிசயத்தை ஒரே வரியில் சொல்லிவிடுகிறது.

ஜெய்யின் முன்னாள் காதலியாக ஐஸ்வர்யா ராஜேஷ். ஜெய் மீது அவருக்குள் புதைந்து கிடக்கும் காதலை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார். இடைவேளைக்குப் பின்பு வரும் சில காட்சிகள் அவரைக் கொஞ்சம் வில்லியாகக் காட்டு முற்படுகிறதோ என ஒரு அதிர்ச்சி உண்டானாலும், போகப் போக அதையும் அடுத்தடுத்த காட்சிகளால் சரி செய்துவிடுகிறார் இயக்குனர். ஆண்களின் காதல் வலிகளை மட்டுமே அதிகம் காட்டியுள்ள தமிழ் சினிமாவில், ஒரு பெண்ணின் காதல் வலி எப்படியிருக்கும் என்பதை உணர்வு பூர்வமாய் தன் நடிப்பில் ஐக்கியப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஜெய்யின் மனைவியாக ஷிவதா. ஒரு பாசமான, பாந்தமான மனைவியாக அவ்வளவு இயல்பாய் நடித்துள்ளார். பாசமான கணவன் கொஞ்சம் தடம் மாறிப் போகிறாரோ என்ற சந்தேகம் அவருக்கும் வருகிறது. அது தெரிந்ததும் அவர் வெடித்துப் பேசுவது அவர் மீதான பரிதாபத்தை அதிகரிக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் கொடுமைக்காரக் கணவனாக கோபப்பட வைக்கிறார் அம்ஜத். ஜெய், ஷிவதாவின் மகளாக வரித்தி விஷால், ஜெய்யின் நண்பனாக அப்துல் லீ ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

உட்புறக் காட்சிகளுக்கான ஒளிப்பதிவில் ரவிவர்மன் நீலமேகம் காட்சிகளின் தாக்கத்தை ஒளி வடிவில் வெளிப்படுத்துகிறார். சுரேந்தர்நாத்தின் வாழ்வியல் சார்ந்த வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன. சித்துகுமார் பின்னணி இசையில் கொஞ்சம் சமாளித்தாலும், பாடல்களில் ஏமாற்றியிருக்கிறார். இம்மாதிரியான படங்களுக்கு ஓரிரு சூப்பர் ஹிட் பாடல்கள் மிக அவசியம்.

ஏற்கெனவே பார்த்த சில படங்களின் காட்சிகள் ஞாபகப்படுத்திவிட்டுப் போகின்றன. மற்ற நடிகர்களை விடவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. படம் இப்படித்தான் முடியும் என்ற கிளைமாக்ஸ் இடைவேளைக்குப் பிறகே உள்ளுக்குள் ஓட ஆரம்பித்துவிடுகிறது.

தீராக் காதல் - ஆறாக் காதல்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement