Load Image
dinamalar telegram
Advertisement

பருந்தாகுது ஊர் குருவி

தயாரிப்பு - லைட்ஸ் ஆன் மீடியா
இயக்கம் - தனபாலன் கோவிந்தராஜ்
இசை - ரெஞ்சித் உன்னி
நடிப்பு - நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா, காயத்ரி ஐயர்
வெளியான தேதி - 24 மார்ச் 2023
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு வாரமும் ஐந்தாறு படங்கள் வரை வருகின்றன. அவற்றில் சிறிய பட்ஜெட் படங்கள் நிறையவே உண்டு. அப்படிப்பட்ட படங்களில் ஒரு சில படங்கள்தான் ரசிகர்களிடம் ஓரளவிற்காவது சென்று சேர்கின்றன. அந்தப் படங்களின் டீசர், டிரைலர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை வைத்தே அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். எதற்காக இப்படிப்பட்ட படங்களை எடுக்கிறார்கள் என்பது திரையுலகத்திலேயே பலருக்கும் புரியாத புதிராகத்தான் உள்ளது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ஒரு குறும்படமாக ஒரு அரை மணி நேரத்தில் கூட மொத்த படத்தையும் எடுத்து முடித்திருக்கலாம். ஆனால், இரண்டு மணி நேர முழு நீளத் திரைப்படமாக இப்படி நீட்டி முழக்கி எடுத்திருக்க வேண்டியதில்லை. படம் முழுவதும் படத்தின் நாயகன், ஒருவரது உயிரைக் காப்பாற்ற அவருடன் ஓடிக் கொண்டே இருப்பதுதான் படத்தின் கதை. அதில் எந்த அழுத்தமும் திருப்பமும் இல்லாமல் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ்.

நாயகன் நிஷாந்த் ரூசோ ஒரு சிறிய குற்றவாளி. காட்டில் யாரோ கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக காவல் நிலையத்திற்குத் தகவல் வர நிஷாந்த்தை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் செல்கிறார் சப் இன்ஸ்பெக்டர். அங்கு விவேக் பிரசன்னா கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். ஒரு பாதுகாப்பிற்காக விவேக் பிரசன்னாவையும், நிஷாந்தையும் கைவிலங்கிட்டு விட்டுவிட்டு அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா எனப் பார்க்கப் போகிறார் சப் இன்ஸ்பெக்டர். அந்த சமயத்தில் விவேக் இன்னும் சாகவில்லை எனத் தெரிகிறது. அவரைக் காப்பாற்ற அந்த இடத்திலிருந்து அவருடன் ஓடுகிறார் நிஷாந்த். சிலர் அவர்களைக் கொலை செய்ய துரத்துகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நிஷாந்தின் தோற்றத்திற்கு அவர் ஒரு சிறிய குற்றவாளி என்பதை நம்ப முடியவில்லை. இதற்கு முந்தைய படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவரும் விதத்தில் நடிக்கும் விவேக் பிரசன்னா கூட இதில் ஏனோ தானோவென்று நடித்திருக்கிறார். விவேக் பிரசன்னாவின் மனைவியாக காயத்ரி ஐயர். கதாநாயகி போல ஒரு வில்லி கதாபாத்திரம் அவருக்கு. இன்ஸ்பெக்டராக வினோத் சாகர். படம் முழுவதும் காக்கிச் சட்டை அணியாமலேயே வருகிறார். சப் இன்ஸ்பெக்டராக கோடங்கி வடிவேல். ஒரு காட்சியில் கூட தலையில் போலீஸ் கேப் அணியாமல் சீருடையுடன் மட்டும் சுற்றி வருகிறார்.

மலைப் பிரதேசத்தில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. ஒளிப்பதிவாளர் அஷ்வின் நோயல் தன் பங்கிற்குக் கொஞ்சம் உழைத்திருக்கிறார். ரெஞ்சித் உன்னியின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

ஒரு படம் என்றால் ஏதோவொரு விதத்தில் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை. பறப்பதற்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டும்.

பருந்தாகுது ஊர் குருவி - பறக்கத் தவிக்கும் ஊர் குருவி



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement