Load Image
dinamalar telegram
Advertisement

கப்ஜா

இயக்கம் - சந்துரு
இசை - ரவி பர்சூர்
நடிப்பு - உபேந்திரா, ஸ்ரேயா
வெளியான தேதி - 17 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

கன்னடத் திரையுலகத்திலிருந்து ஒரு 'கேஜிஎப்' வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அதே சாயலில் சில கன்னடப் படங்களை எடுத்து வருகிறார்கள். அதில் முதலில் வெளிவந்திருக்கும் படம்தான் இந்த 'கப்ஜா'.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை 'பிரேம் பை பிரேம்' 'கேஜிஎப்' படத்தின் சாயல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு படத்தின் இயக்குனர் சந்துரு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது. 'கேஜிஎப்' படத்திலாவது என்ன நடக்கிறது என்பதை புரியும்படி சொன்னார்கள். இந்தப் படத்தில் எதையெதையோ சொல்லி எங்கெங்கோ சென்று குழப்பியடிக்கிறது திரைக்கதை.

சுதந்திரப் போராட்டத்திற்காகப் போராடிய ஒருவரின் இளைய மகன் உபேந்திரா. இந்திய விமானப் படையில் பணிபுரிந்து வருகிறார். அமராபுரா என்ற ஊரில்தான் உபேந்திராவின் அண்ணன், அம்மா ஆகியோர் வசிக்கிறார்கள். அந்த ஊரை தன் கட்டுப்பாட்டில் ஒரு ரவுடி வைத்துள்ளார். அவன் உபேந்திராவின் அண்ணனைக் கொடூரமாகக் கொலை செய்கிறார். அதற்குப் பழி வாங்க உபேந்திரா அந்த ரவுடியைக் கொலை செய்கிறார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவரும் பெரிய ரவுடியாக உருவெடுக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

உபேந்திரா பற்றிய பிளாஷ்பேக்கை 'கேஜிஎப்' பாணியில் சுதீப் சொல்ல ஆரம்பமாகிறது படம். அதற்குப் பிறகு படத்தில் எதையெதையோ சொல்லி, என்னென்னமோ காட்சிகள் வருகிறது. ஒரு கட்டத்தில் படத்தைப் பார்க்கும் போது பயங்கர கடுப்பாகி கடும் தலைவலி வந்ததுதான் மிச்சம். சமீப காலத்தில் இப்படி ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நீளமான தலைமுடியுடன் இந்திய விமானப் படையில் வேலை பார்க்கிறார் உபேந்திரா. அதிலேயே இயக்குனரின் அக்கறை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரிந்துவிடுகிறது. ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து நாம் பிரமித்தால் அதைப் போல ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு இயக்குனருக்கும் வரும். ஆனால், அதே போலவே செய்து பார்க்கலாம் என்ற ஆசை மட்டும் வரக்கூடாது. இந்தப் படத்தின் இயக்குனர் சந்துருவுக்கு அப்படியொரு ஆசை வந்திருக்கிறது. இன்னும் இரண்டாம் பாகம் வேறு வரப் போகிறது என கடைசியில் பயமுறுத்துகிறார்கள்.

கன்னட சினிமாவில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பெயரெடுத்தவர் உபேந்திரா. இந்தப் படத்திலும் அவரது ஆக்ஷன் நடிப்பிற்குக் குறைவில்லை. ஆனால், இப்படியான ஒரு 'காப்பி' கதையில் அது எடுபடாமல் போகிறது. உபேந்திராவின் காதலியாக ஸ்ரேயா. ராஜ வம்சத்து வாரிசு. அழகாக வந்து ஒரு அழகான நடத்தையும் ஆடிவிட்டுச் செல்கிறார் ஸ்ரேயா.

'கேஜிஎப்' படத்தின் இசையமைப்பாளர் ரவி பர்சூர். அந்தப் படத்திற்காகப் போட்டு வைத்த பின்னணி இசையின் மிச்சம் மீதியை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். 'கேஜிஎப்' படத்தில் இருந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஸ்டைல், அரங்க அமைப்பு அத்தனையையும் அப்படியே இருக்க வேண்டும் என அதைச் செய்தவர்கள் கடுமையாகக் காப்பி அடித்திருக்கிறார்கள்.

'கேஜிஎப்' படம் போல நாமும் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்.

கப்ஜா - காப்பாத்துங்கப்பா…வாசகர் கருத்து (1)

  • vijay - coimbatore,இந்தியா

    இந்த நடிகர் உபேந்திராவுக்கு திறமை எல்லாம் இருக்கு.ஆனால் இவரு போலீசா நடிச்சாலும், போர் வீரரா நடிச்சாலும் தனது ஸ்டைலான நீளமான தலைமுடியுடன்தான் நடிப்பார். இதுபோல நீளமான தலைமுடியுடன் திரையில் வந்தால்தான் தனது ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறார். ஏன்னா, ஒரு இயக்குனர் தனக்கு எப்படிப்பட்ட உடை, அலங்காரத்தில் நடிகர்கள் இருக்கவேண்டுமோ, அப்படிதான் ஹீரோ இருக்கவேண்டும் என்று சொல்லி படம் எடுப்பார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் புதுமுக நடிகர்கள் முதற்கொண்டு முன்னணி நடிகர்கள் வரை போலீஸ் போன்ற வேடங்களில் தலைமுடியை அதற்கேற்றாற்போல் குறைத்துகொண்டுதான் நடிக்கிறார்கள். உபேந்திரா இப்போது மட்டுமல்ல அவரது முந்தைய படங்களிலும் போலீஸ் வேடங்களில் பெரும்பாலும் இந்த ஸ்டைல் நீள தலைமுடிதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement