Load Image
dinamalar telegram
Advertisement

பத்து தல

தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - ஒபிலி கிருஷ்ணா
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 30 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 32 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தாதாக்களைப் பற்றிய படம் என்றாலே அதில் அரசியலும் வந்துவிடும். அப்படி ஒரு தாதா செய்யும் அரசியலைப் பற்றிய படம்தான் இந்த 'பத்து தல'. கன்னடத்தில் 'முப்டி' என்ற பெயரில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம், தமிழில் சில மாற்றங்களுடன் ரீமேக் ஆகியுள்ளது.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா. சிம்பு படத்தின் இடைவேளைக்கு முன்பாக மட்டுமே வருவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. ரீமேக் செய்யும் போதாவது அதை மாற்றியிருக்கலாம்.

தமிழகத்தை எந்தக் கட்சி ஆள வேண்டும், யார் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதை 'எஜிஆர்' என்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் மற்றும் தாதாவான சிலம்பரசன்தான் தீர்மானிக்கிறார். முதல்வர் சந்தோஷ் பிரதாப் திடீரென காணாமல் போகிறார். அவரைக் கடத்தியது யார் என்ற விசாரணையில் சிபிஐ இறங்குகிறது. இதனிடையே, அடியாளாக இருக்கும் கவுதம் கார்த்திக், சிம்புவிடம் வேலை செய்ய கன்னியாகுமரி செல்கிறார். ஆனால், அவர் ஒரு 'அன்டர்கவர்' போலீஸ். சிம்புவைப் பிடிப்பதே அவருக்கு வேலை. காணாமல் போன முதல்வர் கிடைத்தாரா ?, சிம்புவின் பின்னணி யார் ?, சிம்புவை கவுதம் கார்த்திக் பிடித்தாரா ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'பத்து தல' என டைட்டில் ரோலில் நடித்துள்ள சிம்புவை படம் முழுவதும் வர வைத்து தெறிக்கவிட்டிருக்க வேண்டும். ஆரம்பம் முதல் அவரை தூரத்தில் காட்டுவது, கால்களை மட்டும் காட்டுவது, கைகளை மட்டும் காட்டுவது என அவ்வப்போது மேஜிக் காட்டிவிட்டுச் செல்கிறார்கள். இடைவேளைக்கு முன்பாகத்தான் அதிரடியாக வருகிறார் சிம்பு. இடைவேளைக்குப் பின் மட்டுமே அவருடைய ராஜ்ஜியம் தொடர்கிறது. சிம்பு யார் என்பது படம் பார்ப்பவர்களுக்குத் தெரிய வரும் போது அவர் மீது நமக்கு பெரும் அனுதாபம் வர வேண்டும். அதை அழுத்தமாகப் பதிவு செய்யத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

'பாண்டியன், போக்கிரி', ஏன் சமீபத்தில் வந்த 'விக்ரம்' படம் வரையில் தொட்டுத் தொடரும் பாரம்பரியமான 'அன்டர்கவர் போலீஸ்' கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக். அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.

தாசில்தார் ஆக பிரியா பவானி சங்கர். கவுதம் கார்த்திக்கின் முன்னாள் காதலி. சிம்புவிடம் கவுதம் அடியாளாக இருப்பதாலும், முந்தைய காதல் பிரிவாலும் கவுதம் மீது கோபமாகவே இருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

படத்தில் துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் தான் படத்தின் மெயின் வில்லனாக இருக்க வேண்டும். ஆனால், மெயின் வில்லனாகவும் சிம்புவே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்திலும் துணை வில்லனாகவே தான் கவுதம் மேனனைப் பார்க்க முடிகிறது. வழக்கம் போல சிம்புவின் அடியாட்களாக சிலர், துரோகிகளாக சிலர் வந்து போகிறார்கள்.

ஏஆர் ரஹ்மான் இசையில் சாயிஷா ஆடியுள்ள 'ராவடி' பாடல் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. மற்றபடி பாடல்கள் பெரிய அளவில் மனதில் பதியவில்லை. பின்னணி இசையில் காட்சிகளை ஏஆர் ரஹ்மான் தூக்கி நிறுத்துவது போலத் தெரிகிறது. ஆனால், நாம் பார்த்த தியேட்டரில் சவுண்ட் சிஸ்டம் சரியாக இல்லாத காரணத்தால் அதுவும் அதிரடியாக இல்லை.

திரைக்கதை அழுத்தமாகவும், விறுவிறுப்பாகவும் நகராதது ஒரு குறை. கிளைமாக்சில் குதிரை மீது வந்து கத்தியால் சண்டை போடாமல் துப்பாக்கியால் சண்டை போட்டு, பின்னர் கீழிறங்கியதும் கத்தியால் சண்டை போடுகிறார் சிலம்பரசன். சிம்புவைக் கொல்ல துப்பாக்கிகளுடன் நூற்றுக்கணக்கான பேர் வந்தாலும் தனியாளாக நின்று சமாளிக்கிறார். இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி பார்ப்பது ?.

படத்தை முழுவதும் தாங்கிப்பிடிக்க சிம்பு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். ஆனால், அவரை 'பாதி தல' ஆக பாதிப் படத்தில் மட்டுமே காட்டுவதை நிச்சயம் மாற்றியிருக்க வேண்டும்.

பத்து தல - சிங்கிள் தல சிம்பு மட்டும்…வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement