Load Image
dinamalar telegram
Advertisement

லால் சிங் சத்தா (ஹிந்தி)

தயாரிப்பு - அமீர்கான் புரொடக்ஷன்ஸ், வியாகாம் 18 ஸ்டுடியோஸ்
இயக்கம் - அத்வைத் சந்தன்
இசை - ப்ரீதம்
நடிப்பு - அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா
வெளியான தேதி - 11 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

டாம் ஹான்க்ஸ் நடிப்பில் ராபர்ட் செமெக்கிஸ் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் 'பாரஸ்ட் கம்ப்'. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த விஷுல் எபெக்ட்ஸ், சிறந்த தழுவலுக்கான திரைக்கதை, சிறந்த படத் தொகுப்பு என இப்படம் அந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை இந்திய ரசிகர்களுக்காக கொஞ்சம் கதையில் மாற்றம் செய்து 'லால் சிங் சத்தா'வாக ஹிந்தியில் வெளியிட்டுள்ளார். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

தனது வித்தியாசமான படங்கள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் என ஹிந்தித் திரையுலகத்தை சர்வதேச அளவில் பேச வைத்தவர் அமீர்கான். அவரது நடிப்பில் நான்கு வருடங்களுக்குப் பிறகு வந்துள்ள படம் என்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழு அளவில் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார் படத்தின் இயக்குனர் அத்வைத் சந்தன்.

சிறு வயது முதலே மற்றவர்களால் பைத்தியம், லூசு என அழைக்கப்படுபவர் அமீர்கான். அவரது அம்மா என்ன சொன்னாலும் அதை மட்டுமே கேட்பார். ஒரு ரயில் பயணத்தில் அமீர்கான் தன்னுடைய கடந்த காலக் கதையை மற்ற பயணிகளிடம் சொல்வதில் இருந்து படம் ஆரம்பமாகிறது. பிளாஷ்பேக்கில் அவரது கடந்த காலத்தின் பல்வேறு கால கட்டங்கள் திரைக்கதையாக விரிகிறது. சிறு வயதிலிருந்தே அவர் நேசத்துடன் பழகும் கரீனா கபூர், அவருடைய கல்லூரிப் பருவம், ராணுவத்தில் சேர்ந்த பின் நாக சைதன்யா உடனான நட்பு, கரீனாவின் பிரிவு, நாக சைதன்யாவின் இழப்பு, சுயமாகத் தொழில் ஆரம்பிப்பது, போரில் தான் காப்பாற்றிய முஸ்லிம் தீவிரவாதியை நல்வழிப்படுத்துவது, அம்மாவின் இழப்பு, மீண்டும் கரீனாவுடன் சந்திப்பு என மிக நீளமாக, ஆற அமர படத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு மிக அப்பாவியாக இருப்பவர் அமீர்கான். மற்றவர்கள் அவரை பைத்தியம், லூசு என அழைத்தாலும் திறமைசாலி. ஓட்டப்பந்தயத்தில் சாதித்தவர், ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி வீர் சக்ரா விருது வாங்கியவர், சுயமாகத் தொழில் ஆரம்பித்து கார்ப்பரேட் கம்பெனியை ஆரம்பித்தவர், இலவச ஆஸ்பத்திரி நடத்தியவர், விவசாயம் செய்பவர், நான்கு வருடங்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடியவர் என அமீரின் சிறு வயது முதல் நடுத்தர வயதுப் பருவம் வரையிலான அவருடைய வாழ்க்கைப் பயணத்தைக் காட்டியிருக்கிறார்கள். அப்பாவித்தனமான நடிப்பில் ஆங்கோங்கே அனுதாபப்பட வைக்கிறார், சில இடங்களில் அழ வைக்கிறார் அமீர். ஆனாலும், ஒரு கட்டத்தில் அவை போரடிக்கவும் வைக்கின்றன.

படம் முழுவதும் வரவில்லை என்றாலும் திடீர் திடீரென வந்து போகிறார் கரீனா கபூர். மாடலிங் செய்து, பாலிவுட் நடிகையாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், சினிமா ஆசையில் பாலிவுட் சென்று ஏமாந்து போய் ஒருவருக்கு ஆசை நாயகியாக வலம் வருகிறார். திடீரென அமீர்கானை வந்து சந்தித்து அவருடன் ஒரு இரவைக் கழிப்பதெல்லாம் நம்ப முடியவில்லை. இப்படி பல இடங்களில் சினிமாத்தனமான காட்சிகள் இடம் பெறுகின்றன.

அமீர்கானுடன் ராணுவத்தில் பணியாற்றும் நாக சைதன்யா, அமீர்கானின் அம்மாவாக நடித்துள்ள மோனல் சிங் நிறைவாக நடித்துள்ளார்கள். படத்தில் ஷாரூக்கான் கூட ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார். அமீர்கான் படத்தில் தன்னைப் பற்றிக் கிண்டலடித்தாலும் பரவாயில்லை என ஷாரூக் நடித்திருப்பது ஆச்சரியம்தான்.

படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யஜித் பான்டே இந்தியாவின் பல பகுதிகளை தன் கேமராவில் பதிவு செய்துள்ளார். ப்ரீதம் இசையில் தமிழ்ப் பாடல்களும், பின்னணி இசையும் ரிசிக்க வைக்கின்றன.

அந்தந்த கால கட்டங்களைக் காட்டுவதற்காக எமெர்ஜெனி அமல், ரத்து, இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றது, அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், இந்திராகாந்தி கொலை, அதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீதான வன்முறை, மண்டல் கமிஷன் போராட்டம், அத்வானியின் ரத யாத்திரை, கார்கில் போர், மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் என பல நிகழ்வுகளை போகிற போக்கில் கதையின் பின்னணியாக அமைத்திருக்கிறார்கள்.

கார்கில் போரில் ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய அமீர்கான் கூடவே ஒரு முஸ்லிம் தீவிரவாதியையும் காப்பாற்றி அழைத்து வருகிறார். அந்தத் தீவிரவாதியை ராணுவம் கூட அடையாளம் கண்டு சிறையில் தள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுகிறது. அந்தத் தீவிரவாதி இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார். அவரை தன்னுடைய கார்மென்ட் கம்பெனியிலும் அமீர் சேர்த்துக் கொள்கிறார் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர். நம் ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற ஒரு தீவிரவாதிக்கு அமீர்கான் எப்படி அடைக்கலம் கொடுத்து அவரை பிஸினஸ் பார்ட்னராக சேர்த்துக் கொள்கிறார். ராணுவத்தில் நாயக் பதவியில் இருந்த அமீர்கானுக்கு அதெல்லாம் தெரியாதா ?. தன் நண்பன் நாக சைதன்யா அந்தத் தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதா ?. யாரையோ திருப்திப்படுத்த ஒரிஜனல் கதையை ஏன் இப்படி மாற்றி எழுதியிருக்கிறார்கள் என்பது நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும். படத்தில் கடவுள் மறுப்பு பற்றியும் அமீர்கான் வசனம் பேசியுள்ளார். ஒரு சீக்கியர் கதாபாத்திரத்தில் அவர் இப்படி பேசியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தலாம். அதுவே ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்திரமாக இருந்தால் அவர் இப்படி பேசியிருப்பாரா ?.

படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். இடைவேளை வரையிலான காட்சிகள் போவது தெரியவில்லை. ஆனால், அதற்குப் பிறகு படம் எப்போது முடியும் என நம் பொறுமையை சோதிக்கிறது. காதல் கதையா, சென்டிமென்ட் கதையா, தன்னம்பிக்கைக் கதையா என பிரித்து சொல்ல முடியாமல் அனைத்தையும் ஒரே படத்தில் கொட்டி ஓவர் டோஸ் ஆக்கிவிட்டார்கள். அதுவே படத்திற்கு வில்லனாக அமைந்துவிட்டது.

லால் சிங் சத்தா - சத்தில்லை…

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • suresh kumar - Salmiyah,குவைத்

  இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டது 'ஹிந்தி தெரியாது போடா' ' ஹிந்தி வேணாம் போடா' சங்கத் தலைவர்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  nizamudin: முரசொலியில் 5/5 கொடுப்பான்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  nizamudin: ஒரு தேச விரோதியை எப்படி தேசத்தின் மீது பற்று கொண்டவர் என்று கூசாமல் புளுக முடிகிறது? இவனது உண்மை சொரூபம் தெரிந்ததால் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாளும் 1800 திரை அரங்குகளில் படம் திரையிடுவது கேன்சல் ஆகி பயங்கர நஷ்டமாம்...GOOD.

  • nizamudin - trichy,இந்தியா

   ஒரு தேச விரோதியை இந்தியாவும் ராணுவமும் விட்டு வைக்காது அது நானாக இருந்தாலும் சரி சுட்டு தள்ளி பொசுக்கிவிடும்

 • nizamudin - trichy,இந்தியா

  இது ஒரு சிறந்த படம் ஆஸ்கார் அவார்டு விருது பெற்ற ஒரு பாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கில படத்தின் ரீ மேக் இது/ஒரு சில பத்திரிகைகள் 3.25 மற்றும் 3..75 ரேட்டிங் கொடுத்துள்ளன /மிகவும் தரமான படங்களை கொடுத்து உலக தரத்தில் இந்திய சினிமாவை கொண்டு சென்றவர் /பத்ம பூஷன் பத்ம விபூஷண் பெற்றவர் மேலும் பல முறை தேசிய விருது (7) பிலிம் FARE விருது பல முறை லகான் படம் ஆஸ்கார் கதவை தட்டியது /அமீர் கான் தேசத்தின் மீது பற்று கொண்டவர் ஒரு இந்தியரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது வருத்தம் உடையது

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  குப்பை படத்துக்கு 2.75 ரொம்பவே அதிகம். நான் 1.50 தான் எதிர்பார்த்தேன்....

  • nizamudin - trichy,இந்தியா

   டைம்ஸ் பத்திரிகை 3.75 /மாலைமலர் 3.25 /கொடுத்துள்ளது

 • rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்

  அப்பாடா.எங்கே இந்த படம் உருப்படுமா என்று நினைத்தேன், நல்லவேளையாக ஊத்திக்கொண்டது. இனிமேல் பழியை ஹிந்துக்கள் மீது போட்டு பாய்க்காட் செய்ததால் தான் அவுட் என்று ஊளை விடலாம்,நம்ம ஊர் கிரிப்டோ உலகமும் ஒத்து ஊதும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement