Load Image
dinamalar telegram
Advertisement

எண்ணித்துணிக

தயாரிப்பு - கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - வெற்றிச்செல்வன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர்
வெளியான தேதி - 4 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் இப்போது த்ரில்லர் சீசன் போல. வாராவாரம் தவறாமல் த்ரில்லர் படங்கள் வந்துவிடுகிறது. இந்தப் படமும் ஒரு த்ரில்லர் படம்தான். அமெரிக்காவில் படத்தை ஆரம்பித்து சென்னையில் முடிக்கிறார்கள்.

இயக்குனர் வெற்றிச்செல்வன் ஆரம்பத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதன்பின் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி பல திருப்பங்களுடன் படத்தை முடிக்க முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் பரபரப்பாகவும், சில இடங்களில் கொஞ்சம் தொய்வாகவும் நகர்கிறது கதை. ஆனாலும், சில முக்கிய திருப்பங்கள் படத்தைக் காப்பாற்றுகிறது.

ஜெய், அதுல்யா ரவி காதலர்கள். நகை ஒன்றை வாங்குவதற்காக அதுல்யா அமைச்சரின் பினாமி நகைக் கடை ஒன்றிற்குள் செல்கிறார். அந்த சமயம் அங்கு வரும் முகமூடி கொள்ளையர்கள் அங்குள்ள 2000 கோடி மதிப்பு வைரத்தைக் கொள்ளையடித்ததுடன், அதுல்யா உள்ளிட்ட சிலரைக் கொன்றுவிட்டுச் செல்கிறார்கள். தன் காதலியைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் ஜெய். அந்தக் கொள்ளையர்களை அவர் கண்டுபிடித்தாரா, பழிக்குப் பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் வைரக் கொள்ளையில் ஆரம்பித்தாலும், அதற்குப் பிறகு காதல் படமாக மாறிவிடுகிறது. ஜெய், அதுல்யா இடையிலான காதலைப் பற்றிச் சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். அதன்பிறகே த்ரில்லர் கதைக்கு வருகிறார். ஒரு பக்கம் அமைச்சர் தனக்குச் சொந்தமான 2000 கோடி வைரத்தை பறி கொடுத்தது, இன்னொரு பக்கம் கொள்ளையடித்த வைரத்தைக் காணாமல் வம்சி தலைமையிலான கொள்ளைக் கூட்டம் தவிப்பது, வம்சியை இந்த வேலையைச் செய்யச் சொன்ன அமெரிக்காவைச் சேர்ந்த சுரேஷ் மிரட்டுவது, மற்றொரு பக்கம் தன் காதலியைப் பறி கொடுத்ததால் பழி வாங்க ஜெய் துடிப்பது என திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

காதலியைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கும் காதலனாக ஜெய். முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறி நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க வைக்கிறார். போலீஸ் விசாரித்து செல்வதற்கு முன்பாகவே ஜெய் வேகவேகமாக விசாரிக்கிறார். ஒரு த்ரில்லர் படத்தில் கதாநாயகன் என்னவெல்லாம் செய்வாரோ அதைச் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஜெய்யின் காதலியாக அதுல்யா ரவி. டாஸ்மாக் கடைகளை எதிர்த்துப் போராடும் ஒரு போராளி. கல்லூரியில் படித்த காலத்தில் ஜெய்யை அதுல்யா காதலிக்க அவரை நிராகரிக்கிறார் ஜெய். ஆனால், நான்கு வருடங்களுக்குப் பிறகு தன் தவறை உணர்ந்து அதுல்யாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஜெய். கொஞ்ச நேரமே தான் வருகிறார் அதுல்யா. இன்னும் 'ழ' உச்சரிப்பை எப்போது சரியாக சொல்லப் போகிறாரோ ?.

நகைக்கடை கொள்ளையில் கொள்ளையர்களிடம் சிக்கி உயிர் பிழைத்தவராக அஞ்சலி நாயர், தனது வைரங்களைப் பறி கொடுத்த அமைச்சராக சுனில், அவரது ஆசை நாயகியாக வித்யா பிரதீப், நகைகளைக் கொள்ளையடிப்பவராக வம்சி என மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் பரவாயில்லை.

சாம் சிஎஸ் பின்னணி இசை பல இடங்களில் ஒரே மாதிரி இருக்கிறது. 'விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்தவரா என ஆச்சரியப்பட வைக்கிறார்.

'எண்ணித் துணிக' என அருமையான தலைப்பை யோசித்த இயக்குனர் அருமையான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அதை ஓரளவு நிறைவேற்றியும் இருக்கிறார். சில பல குறைகளைத் தவிர்த்திருந்தால் பாராட்டும்படியான த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

எண்ணித் துணிக - இழுக்கல்ல…

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement