dinamalar telegram
Advertisement

பிரண்ட்ஷிப்

Share

தயாரிப்பு - சென்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ்
இயக்கம் - ஜான்பால்ராஜ் & ஷாம் சூர்யா
இசை - உதயகுமார்
நடிப்பு - ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் மற்றும் பலர்
வெளியான தேதி - 17 செப்டம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

ஆண் -பெண் நட்பு பற்றி சொல்லும் புது வசந்தம் டைப் படம் இது. இந்த 2021லும் ஆண் பெண் நட்பு பற்றி சந்தேகத்துடன்தான் இந்த சமூகம் பார்க்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா.

கடந்த சில வருடங்களில் அடிக்கடி நிகழும் கொடூர சம்பவமான பெண் கற்பழிப்பு என்பதை கதையில் சேர்த்து ஒரு த்ரில்லராகவும் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், எதையாவது ஒரு விஷயத்தை மையமாக வைத்து சொல்லியிருந்தால் மனதில் இடம் பிடித்திருக்கலாம். இரண்டு, மூன்று விஷயங்களை மையமாக வைத்துள்ளதால் எதுவுமே முக்கியத்துவம் இல்லாமல் போகிறது.

ஹர்பஜன் சிங், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் கோவையில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முதலாமாண்டு படிக்கிறார்கள். பெண்களே சேராத அந்த குரூப்பில் லாஸ்லியா வந்து சேர்கிறார். அவரிடம் யாருமே பேசக் கூடாது என ஹர்பஜன் அன்ட் கோ சொல்கிறது. ஆனால், போகப் போக லாஸ்லியான குறும்பையும், நல்ல குணத்தையும் பார்த்து அனைவரும் அவருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் லாஸ்லியா பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவல் அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மேலே சொன்னது போல அதன்பிறகு திரைக்கதை நகராமல் எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ சொல்லி ஒரு வழியாக முடிகிறது. எதையோ சொல்ல வந்து தடம் மாறிவிட்டார்கள்.

ஹர்பஜன் சிங் கோபக்கார கல்லூரி இளைஞராக நடித்திருக்கிறார். ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். எப்போதும் நண்பர்கள் படை சூழ அவர் இருப்பதால் படத்தின் கதாநாயகன் அவர் தானா என்ற சந்தேகம் வருகிறது. அவர் கூடவே சதீஷ், இன்னும் சிலர் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் தர வேண்டி, வசனங்களையும் பிரித்துப் பிரித்து கொடுத்துள்ளார்கள். அதனால், ஹர்பஜன் தனி கதாநாயகனாகத் தெரியாமல் அவரது முக்கியத்துவம் குறைந்திருக்கிறது.

ஹர்பஜனின் நட்பு வட்டாரத்தில் தெரிந்த முகங்களாக சதீஷ், வெட்டுக்கிளி பாலா ஆகிய இருவர் மட்டுமே இருக்கிறார்கள். சதீஷ் வழக்கம் போல காமெடி என நினைத்து பேசி சிரிக்க வைக்கிறார். பாலா திடீரென வருகிறார், போகிறார். மற்ற நண்பர்கள் ஒவ்வொரு காட்சியிலும் ஆளுக்கொரு காட்சியில் வசனம் பேசுகிறார்கள்.

மெக்கானிக் இஞ்சினியரிங் சேர வேண்டுமென்ற ஆசையில் தேடி வந்து சேர்கிறார் லாஸ்லியா. குறும்புக்காரப் பெண் கதாபாத்திரம் என்கிறார்கள். ஆனால், எப்போதும் சிரித்துக் கொண்டே மட்டும் இருக்கிறார். இவருக்கு மேக்கப் போட்டதை கண்ணாடியிலும், காமிராவிலும் ஒழுங்காகப் பார்த்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. குளோசப் காட்சிகளில் மேக்கப் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அர்ஜுன். படத்தின் டைட்டில் காட்சியில் அதிரடி சண்டைக் காட்சியில் வருகிறார். அதன்பிறகு கிளைமாக்சில் நீதிமன்றக் காட்சிகளில் வந்து அதிரடியான கேள்விகளை எழுப்புகிறார்.

ஹர்பஜன் நடிக்கிறார் என்பதற்காக இடைவேளைக்குப் பிறகு தேவையில்லாத ஒரு கிரிக்கெட் மேட்ச்சைத் திணித்து நேரத்தைக் கடத்துகிறார்கள். அதையும் நிஜ விளையாட்டு மைதானத்தில் எடுக்காமல் கிரீன்மேட்டில் மோசமாக எடுத்திருக்கிறார்கள். நாட்டுக்காக பல சாதனைகளை படைத்த ஒரு கிரிக்கெட் வீரர் நடித்த படத்தில் இப்படியா கிரிக்கெட் காட்சிகளை படமாக்குவது ?.

பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவது சரியா என்ற கேள்விக்கு, பெண்கள் இந்த நேரங்களில் மட்டும்தான் வெளியில் போக வேண்டும், மற்ற நேரங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என எந்த சட்டமாவது உள்ளதாக என்று எழுப்பும் கேள்விக்கு தியேட்டர்களில் கைதட்டல் கிடைக்கிறது. நடுஇரவிலும் பெண்கள் பயமின்றி செல்லும் போதுதான் இந்த நாட்டிற்கு முழு சுதந்திரம் என்று காந்தி கண்ட கனவு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேறவில்லையே என்று யோசிக்க வைக்கிறது. அதற்காக நாம் என்ன செய்துள்ளோம் என்ற முக்கிய கேள்வியை எழுப்புகிறது இந்தப் படம்.

கிளைமாக்சில் வைத்துள்ள அழுத்தத்தை படத்தின் ஆரம்பத்தில் இருந்து வைத்திருந்தால் இந்த பிரண்ட்ஷிப்பில் நாமும் சேர்ந்திருக்கலாம்.

பிரண்ட்ஷிப் - நெருக்கமில்லை...

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • kannan -

    Malayalam queen movie copy

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement