Advertisement

மண்டேலா

Share

தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ், விஷ்பெரி பிலிம்ஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - மடோனி அஷ்வின்
இசை - பரத் சங்கர்
நடிப்பு - யோகி பாபு, ஷீலா ராஜ்குமார்
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 4/5

தமிழ் சினிமாவில் எதிர்பாராத சமயங்களில் எதிர்பாராமல் வரும் சில படங்களால் நமக்கு நிறையவே நம்பிக்கை வருகிறது. அப்படி ஒரு நம்பிக்கையை விதைத்துள்ள படம் தான் இந்த மண்டேலா.

ஒரு முன்னணி நடிகர் இந்த மாதிரியான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க நிச்சயம் சம்மதித்திருக்க மாட்டார். இந்த ஆண்டிற்கான சிறந்த சமூக அக்கறையை வெளிப்படுத்திய படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட சில பல விருதுகளை வென்று வரக் கூடிய தகுதி இந்தப் படத்திற்கு உண்டு.

இடைவேளை வரை படத்தைப் பார்த்ததுமே படத்தின் இயக்குனர் யார் எனத் தேடி அவரை பாராட்ட வேண்டுமென்று மனம் துடித்தது. அதன்படியே அவரைப் பார்த்துப் பாராட்டினோம். படம் முடிந்த பின் இடைவேளையில் பாராட்டியதை விடவும் அதிகம் பாராட்டினோம், நம்முடன் பலரும் சேர்ந்து கொண்டார்கள். அதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றி.

தியேட்டர்காரர்கள் நிச்சயம் இது போன்ற படங்களை தவற விடுவது அவர்கள் எடுக்கும் தவறான ஒரு முடிவு. சமூக சிந்தனையுள்ள படம், தேசிய விருதுக்கான படம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை சிந்திக்க மட்டுமல்லாமல் சிரிக்கவும் வைத்திருக்கும் படம்.

அறிமுக இயக்குனர் மடோனி அஷ்வின் ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தத் தேர்தல் சமயத்தில் ஒருவருடைய வாக்கு எந்த அளவிற்கு வலிமையானது என்பதை பாமரனும் புரிந்து கொள்ளும் அளவில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். இப்படியான ஒரு கதை, காட்சிகள், வசனம், பின்னணி என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார். கமர்ஷியல் படங்கள் எடுத்து கோடி கோடியாள சம்பளம் வாங்கும் இயக்குனர்களும், நடிகர்களும் இம்மாதிரியான ஒரு படத்திலாவது அவர்களது திரையுலகப் பயணத்தில் நடித்தால் அவர்கள் இந்த சினிமா துறைக்கு வந்ததற்கான ஒரு அர்த்தம் இருக்கும். இயக்குனர் அஷ்வினுக்கு பெரும் வரவேற்பும், எதிர்காலமும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது சூரங்குடி ஊராட்சி. கிராமத்தின் மூத்தவர், முன்னாள் தலைவர் சங்கிலி முருகன். அந்த ஊராட்சியில் மக்கள் வடக்கூர், தெக்கூர் என இரண்டாகப் பிரிந்திருக்கிறார்கள். ஊர் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டுமென இரண்டு ஊரிலிருந்தும் வெவ்வேறு சாதியிலிருந்து இரு பெண்களைத் திருமணம் செய்து கொண்டவர் சங்கிலி முருகன். முதல் மனைவியின் மகன் சுந்தர், இரண்டாவது மனைவியின் மகன் கண்ணா ரவி. அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்தி போல அடிக்கடி சண்டையிட்டுக் கொள்பவர்கள்.

அந்த ஊராட்சியில் ஒரு தொழிற்சாலையை வரவைக்க தொகுதி எம்எல்ஏ முயற்சி செய்கிறார். அதற்காக 30 கோடி ரூபாயை கமிஷனாகத் தர தயாராக இருக்கிறது அந்த கார்ப்பரேட் நிறுவனம். ஊருக்குத் தலைவரைத் தேர்ந்தெடுத்து அவர் அனுமதி அளித்தால்தான் தொழிற்சாலையைத் திறக்க முடியும். சங்கிலி முருகனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட மகன்கள் இருவரும் தனித் தனியாக தேர்தலில் எதிர்த்து நிற்கிறார்கள். இரண்டு பேரும் கணக்கு போட்டு தேர்தல் வேலை செய்ய இருவருக்குமே சமமான வாக்குகள்தான் வரும் போலத் தெரிகிறது. எஞ்சிய ஒரு ஓட்டாக புதிதாக ஓட்டுச் சீட்டு வாங்கிய ஊரில் சலூன் கடை வைத்திருக்கும் யோகி பாபு யாருக்குப் போடுகிறாரோ அவரே வெற்றி பெறுவார் என்ற நிலை வருகிறது. யோகிபாபுவின் ஓட்டைப் பெற அண்ணன், தம்பி இருவரும் அவருக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறார்கள். அதனால் சில பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. முடிவில் யோகிபாபு யாருக்கு ஓட்டுப் போட்டார், யார் ஜெயித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தேர்தல் காலத்தில் இப்படி ஒரு படத்தை டிவியில் நேரடியாக வெளியிடுவது பல ரசிகர்களைச் சென்றடையும். ஆனால், ஒரு நல்ல படத்தை தியேட்டர்காரர்கள் மிஸ் செய்வதை நினைத்து பின்னால் வருத்தப்படுவார்கள்.

படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை ஸ்மைல், இளிச்சவாயன் என அழைக்கப்படும் யோகி பாபு அதன் பின் மண்டேலா, நெல்சன் மண்டேலா என அழைக்கப்படுகிறார். மற்றவர்களின் முடியைத் திருத்தி அவர்களை அழகாக்கும் மண்டேலா, கிழிந்த அழுக்கான சட்டை, பேண்ட், எண்ணெய் வைக்காத தலை முடி, எண்ணெய் வடியும் முகம் என மிகச் சாதாரண மனிதனாக அவரது கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். உடல் மொழியிலும் சரி, பார்வையிலும் சரி, எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதில் யோகி பாபுவின் நடிப்பு மிரட்டல். எத்தனை காலம்தான் டாப் ஹீரோக்களுக்கு மட்டுமே தேசிய விருதுகளையும், தாதா சாகேப் விருதுகளையும் வழங்குவீர்கள், இப்படியான மண்ணின் மைந்தர்களை தங்கள் நடிப்பில் வெளிப்படுத்தும் கதையின் நாயகர்களுக்கும் விருதுகளை வழங்கி அழகு பாருங்கள், அந்த விருதுகளுக்கும் பெருமையாக இருக்கும்.

ஷீலா ராஜ்குமார் போன்ற நடிகைகள் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் சொல்லி நடிப்பதே நடிப்பின் மீதும் சினிமாவின் மீதும் அவர்களுக்கு இருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது. எத்தனை நயன்தாராக்கள், கீர்த்தி சுரேஷ்கள் வந்தாலும் ஷீலாவின் நடிப்புக்கு ஈடாகாது. என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு.

படத்தில் யோகி பாபு தான் கதாநாயகன் என்றாலும், அவருக்கு இணையான கதாபாத்திரங்களில் சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் அப்பாவாக சங்கிலி முருகன், யோகிபாபுவின் உதவியாளராக கலக்கப் போவது யாரு ஜுனியர்ஸ் முகேஷ் ஆகியோரது நடிப்பும் குறிப்பிட வேண்டியவை. அவரவர் கதாபாத்திரங்களில் அப்படி ஒரு சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஊர் மக்களில் சிலராக நடித்திருப்பவர்களும் அவர்களெல்லாம் யார் எனக் கேட்க வைக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு தரமான படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வை டெக்னிக்கலாகவும் பதிவு செய்துவிட்டார்கள். இசையமைப்பாளர் பரத் சங்கர், ஒளிப்பதிவாளர் வித்யு அய்யன்னா, எடிட்டர் பிலோமின் ராஜ், கலை இயக்குனர் ராமு தங்கராஜ் இந்த மண்டேலாவுக்கு மகுடம் சூட்டியவர்களில் சிலர்.

ஒரே ஒரு வாக்கைப் பெறுவதற்காக அந்த வாக்கை வைத்திருக்கும் யோகிபாபுவை அண்ணன், தம்பி இருவருமே விழுந்து விழுந்து கவனிப்பதைப் பார்க்கும் போது இன்றைய அரசியல் நிலவரம் நம்மை நிறையவே யோசிக்க வைக்கும். தன்னுடைய வாக்குக்காக அவர்கள் தரும் பல வசதிகளை இலவசமாக வாங்கிக் கொள்கிறார் யோகிபாபு. ஆனால், சரியான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் எடுக்கும் முடிவு இந்த ஜனநாயகத்திற்கும் மக்கள் நலனுக்குமான ஒன்று. இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்த மண்டேலாவுக்கு சில பல விருதுகளை அள்ளி வழங்கலாம்.

படத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் திரைக்கதையில் மட்டும் சிறிய தொய்வுகள், அதை சரி செய்திருக்கலாம்.

மண்டேலா - தமிழ் சினிமாவில் மாற்றம், முன்னேற்றம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • ஐஷ்வர்யன் -

  நல்ல படம். ஆனால் விமர்சனம் ரொம்பவும் ஓவர். எப்போதும்போல ஜஸ்ட் இயல்பாக வந்து ஷீலாவை நயன்தாரா, கீர்த்தியுடன் ஒப்பிட்டு எழுதியதெல்லாம் விமர்சகரின் அமெச்சூர்த்தனம்! இடைவேளைக்கு பிறகு திரும்ப திரும்ப ஒரே மாதிரி காட்சிகளாக வந்ததில் அரைமணி நேரம் திரைக்கதையில் பெரிய தொய்வு. மற்றப்படி பாராட்டுக்குரிய படம்.. பாராட்டுக்குரிய இயக்கம்.. பாராட்டுக்குரிய யோகிபாபு.

 • Kabilan - Coimbatore ,இந்தியா

  முடி திருத்துவோரை மிக கேவலமாக சித்தறிக்கும் படம் கண்டிப்பாக அவர்களின் மனம் புண் படும்

 • ntgk - Chennai,இந்தியா

  இது ஒரு ஹாலிவுட் படத்தின் காபி. அந்த ஆங்கில படத்தை நானே பன்னிரண்டு வருடத்துக்கு முன் பார்த்து இருக்கிறேன்.

  • சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா

   என்னடா இன்னும் குறை சொல்ல யாரும் வரவில்லையே என்று பார்த்தேன். இந்தா வந்துட்டாருல்ல

 • சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா

  அருமையான அரசியல் நய்யாண்டி படம். யோகிபாபுவுக்குள் இப்படி ஒரு நடிகரா?

 • Ganesh Murali - Chennai,இந்தியா

  நல்ல திரை படம். Swing Vote என்ற ஆங்கில படத்தின் தழுவல். இந்த படம் 2008 வெளியானது.

 • Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா

  அரசியல் கட்சிக்கு எல்லாம் சாட்டையை சுழற்றிய படம். இதை பார்ப்பவர் யாவரும் சீமான் அவர்களுக்கு தான் ஒட்டு போடுவார்கள். நமது சின்னம் விவசாயி

 • šč Čóļòmbô -

  4/5 asuranukku appuram indha padathukku than dinamalar inthanai mark koduthirukanga

 • Sasi Kumar -

  இப்பதான் டிவியில் பார்த்தேன். சாதாரண மரத்தின் அடியில் உழைத்து சாப்பிடும் ஒருவனை எப்படி இலவசம் தந்து அவனை சோம்பேறி ஆக்குவது. தேர்தல் சமயத்தில் நல்ல படம்

 • rAstha - Chennai,யூ.எஸ்.ஏ

  என்னங்க ஒரு படத்தை இப்படி பொசுக்குன்னு நல்லாருக்குன்னு சொல்லிடீங்க கையும் ஓடல காலும் ஓடல

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement