Advertisement

சூபியும் சுஜாதையும் (மலையாளம்)

Share

நடிகர்கள் ; ஜெயசூர்யா, அதிதி ராவ் தேவ் மோகன் (அறிமுகம்), சித்திக்
இசை ; எம்.ஜெயச்சந்திரன்
இயக்குனர் ; நாரணிபுழா ஷாநவாஸ்
தயாரிப்பு ; விஜயபாபு (நடிகர்)
ரேட்டிங் : 2.75/5

ஒடிடியில் வெளியாகியுள்ள முதல் மலையாள படம் இது. அழகான கிராமம் ஒன்றில் உள்ள பள்ளிவாசல் மதகுருவை சந்திக்க வருகிறார் சூபியான தேவ் மோகன்.. தன் தந்தையின் நண்பரான அந்த மதகுருவுக்கு அவ்வப்போது பணிவிடைகள் செய்து வரும் வாய்பேச முடியாத சுட்டிப்பெண் அதிதி ராவுக்கு(சுஜாதா) தேவ் மோகனை கண்டதுமே காதல் மலர்கிறது. ஒருகட்டத்தில் இவர்களின் காதல் மதகுருவுக்கும் அதிதியின் அப்பாவுக்கும் தெரிய வருகிறது.. மதகுருவின் கோபத்துக்கு ஆளாகி சூபி அந்த ஊரிலிருந்து வெளியேறுகிறார்.. காதலனுடன் செல்ல முயற்சித்தாலும் பெற்றோரின் அழுகையால் பின்வாங்குகிறார் அதிதி ராவ்.

பின்னர் ஜெயசூர்யாவுடன் திருமணமாகி துபாயில் செட்டில் ஆகிறார் அதிதி ராவ். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் அந்த கிராமத்துக்கு வரும் தேவ்மோகன் வந்த அன்றே பள்ளிவாசல் தொழுகையின்போது மரணம் அடைகிறார். இந்த தகவல் ஒருசிலரால் வேண்டுமென்றே ஜெயசூர்யாவுக்கு சொல்லப்படுகிறது. திருமணமானாலும் தேவ்மோகனின் ஞாபகத்தை தொலைக்காத அதிதியுடன் சந்தோஷமில்லாத வாழ்க்கை நடத்தும் ஜெயசூர்யா, தன் மனைவியின் மனம் இனியாவது மாறாதா என்கிற நம்பிக்கையில் அதிதியை அழைத்துக் கொண்டு தேவ் மோகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஊருக்கு வருகிறார். ஆனாலும் தாமதமாகிவிட, தேவ்மோகன் உடல் கல்லறைக்கு எடுத்து செல்லப்பட்டு விடுகிறது. பெண்கள் அங்கே செல்ல அனுமதியில்லை என்பதால் ஜெயசூர்யா மட்டும் இறுதி மாரியாதை செலுத்திவிட்டு வருகிறார்.

அதிதி ராவின் வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் விடியகாலையிலேயே துபாய் கிளம்பு திட்டமிட்டிருந்த ஜெயசூர்யா தங்களது பாஸ்போர்ட் காணாமல் போனதை உணர்கிறார். கல்லறையில் மண் அள்ளிபோட குனிந்தபோது அங்கே தான் விழுந்திருக்க வேண்டும் என நினைத்து, தேவ்மோகன் புதைக்கப்பட்ட குழியை தோட்டக்காரன் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் தோண்டுகிறார்கள்.. ஆனால் குழிக்குள் பாஸ்போர்ட் இல்லை.. பாஸ்போர்ட் என்ன ஆனது..? மீண்டும் கிடைத்ததா..? புதைக்கப்பட்டவரின் குழியை தோண்டியதால் பிரச்சனை ஏற்பட்டதா..? அதிதி ராவின் மனதில் மாற்றம் உண்டானதா என்கிற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

இதற்கு முன்பும் இந்துப்பெண்- முஸ்லீம் இளைஞன் காதல், காதலித்தவனை மறந்து வேறொருவருடன் திருமணம் என எத்தனையோ படங்கள் வந்துள்ளன... அப்படி இந்தப்படத்தில் அப்படி என்ன வித்தியாசப்படுத்தி விட்டார்கள் என்றால் காதலை மறக்காத பெண் மனதின் நுட்பமான உணர்வுகளை காட்டியுள்ளார்கள். இறந்துபோய் புதைகப்பட்ட காதலனின் முகத்தை பார்க்க அந்தப்பெண் எந்த எல்லைக்கு செல்கிறாள் என்பதை காட்டி அதிர வைத்துள்ளார்கள்.

படத்தில் ஜெயசூர்யா இருந்தாலும் இடைவேளைக்குப்பின் தான் வருகிறார். காதலை மறக்காத ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் மன அழுத்தம் கொண்ட கதாபாத்திரத்தை வெகு இயல்பாக பிரதிபலித்துள்ளார். அறிமுக கதாநயகன் தேவ்மோகன் அந்த சூபி கேரக்டரில் கன கச்சிதமாக பொருந்தியுள்ளார்.. இவருக்கும் அதிதிக்குமான காதல் அழகான ஹைக்கூ..

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அதிதி ராவ் வசனம் பேசாமல் முகபாவத்திலேயே கதை சொல்கிறார். இயலாமையால் தந்தை, கணவனிடம் காட்டும் கோபம் இருக்கிறதே.. அப்பப்பா. அதேபோல அவர் ஆடும் கதகளி நடனம் செம கிளாஸ். அதிதிராவ் ஆற்றங்கரை திட்டிலிருந்து தள்ளிவிடும் சைக்கிள் ஆற்றுக்குள் விழும் காட்சியில் நம்மால் வியப்படையாமல் இருக்க முடியாது. அதிதியின் பெற்றோராக வரும் சித்திக்கும் கலாரஞ்சனியும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள்.

எம்.ஜெயச்சந்திரனின் இசையும் அனு மூத்தேடாத்தின் ஒளிப்பதிவும் கேரளாவுக்குள்ளேயே ஏதோ வடமாநில கிராமத்தில் வலம்வந்த உணர்வை தருகின்றன. முதல் பாதிவரை பிளாஸ்பேக்கில் காதல் கதையாக மெதுவாக நகரும் படம் கிளைமாக்ஸுக்கு அரை மணி நேரம் முன்பாக பாஸ்போர்ட் காணாமல் போவதில் இருந்து சூடுபிடிக்க துவங்குகிறது. குறிப்பாக கல்லறை குழியை தோண்டும் வரை நமக்கும் திக்திக் தான்.. அதிதி ராவின் க்யூட் எக்ஸ்பிரஷன்களுக்காகவும் பாடல்களுக்காகவும் மற்றும் படம் முழுவதும் வரும் தெய்வீக இசைக்காகவும் ஒரு முறை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement