Advertisement

அஞ்சாம் பாதிரா (மலையாளம்)

நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன், உன்னிமாயா, ஷராபுதீன் மற்றும் பலர்
டைரக்சன் : மிதுன் மானுவேல் தாமஸ்
ரேட்டிங் : 3.5/5

சில நேரங்களில் சிறிய படமாக வெளியாகும் படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடும். அந்த வகையை சேர்ந்தது தான் இந்த அஞ்சாம் பாதிரா அதாவது பின்னிரவு என்று அர்த்தம்.

போலீஸ் அதிகாரி ஒருவர் நள்ளிரவில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு மறுநாள் கொலையாகி கிடக்கிறார். இந்த கொலை குறித்து கண்டறிய போலீஸாருக்கு உதவியாக கிரிமினாலஜிஸ்ட்டான குஞ்சாக்கோ போபன் அழைக்கப்படுகிறார். குற்றவாளிகளின் மனநிலையை திறமையாக உற்றுநோக்கும் குஞ்சாக்கோ போபன், இதேபோல அடுத்தும் ஒரு கொலை நிகழ வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.. ஆனால் போலீசார் அசட்டையாக இருக்க, மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரி இதேபோல கொல்லப்படுகிறார் இப்படியே தொடர்ந்து நான்கு போலீஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு காவல்துறைக்கே மிகப்பெரிய சவால் விடுகிறான் அந்த சீரியல் கொலைகாரன்.

மூன்று கொலைகள் நடக்கும் வரை ஒரு சிறு துரும்பு தடயம் கூட கிடைக்காத நிலையில் நான்காவது கொலை நடந்த பின்பு சிறு தடயம் ஒன்றை கைப்பற்றுகிறார் குஞ்சாக்கோ போபன் அதன்மூலம் ஒரு புதிய கோணத்தில் இன்ச் பை இன்ச்சாக அவர் குற்றவாளியை நெருங்க ஆரம்பிக்ககிறார். எதனால் இத்தனை காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர்.? அதன் பின்னணி என்ன என்கிற அதிர்ச்சிகரமான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பிக்கின்றன சீரியல் கில்லர் பிடிபட்டானா.. இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

மேலே சொல்லப்பட்ட கதைச்சுருக்கத்தை படிக்கும்போதே உங்களுக்கு ராட்சசன் படம் ஞாபகத்திற்கு வரலாம்.. கிட்டத்தட்ட அதே போலத்தான்.. ஆனால் கொல்லும் முறையும் கொல்வதற்கான காரணங்களும் கொல்லப்படும் நபர்களும், கொலைகளை துப்பறியும் விதமும் எல்லாமே அந்த படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.. அதனால்தான் இந்த அஞ்சாம் பாதிரா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு குஞ்சாக்கோ போபனுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரமும் ஒரு அசத்தலான வெற்றியும், இந்த படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. கிரிமினாலஜிஸ்ட்டான ஒரு கொலையை புதுபுது கண்ணோட்டத்தில் அணுகுவதும், அவரது கோணங்கள் சிலநேரம் காவல்துறை அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவதும், ஆனாலும் மனம் தளராமல் தனது பணியை தொடர்வது என ஒரு ஹீரோயிசம் இல்லாத துப்பறிவாளன் பணியை செவ்வனே செய்திருக்கிறார் குஞ்சாக்கோ போபன்.

படத்தின் கதாநாயகியாக குஞ்சாக்கோவின் மனைவியாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் ரம்யா நம்பீசனை ஒதுக்கித் தள்ளிவிட்டு படம் முழுவதும் போலீஸ் உயரதிகாரியாக சுமாரான தோற்றத்தில் வரும் உன்னிமாயா கதாநாயகி அந்தஸ்தை எளிதாக கைப்பற்றி கொள்கிறார். குறைந்த வயதிலேயே உயர் அதிகாரி பதவிக்கு வரும் பெண்ணின் நடை, உடை, பாவனை, உடல்மொழி என அனைத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் இவர்.. குறிப்பாக சீரியல் கொலைகாரனை பிடிப்பதற்காக ஒரு புதிய திட்டம் வகுத்து தனது உதவியாளருடன் அவர் நடந்து செல்லும் காட்சி அதைத்தொடர்ந்து நடக்கும் நிகழ்வு திக் திக் ரகம்

மற்றவர்களின் வங்கி கணக்கு, இமெயில் உள்ளிட்ட விவரங்களை ஹேக் செய்யும் பழக்கத்தை கைவிட முடியாத இளைஞனை இந்த சீரியல் கில்லர் கண்டுபிடிப்பதற்காக குஞ்சாக்கோ போபன் பயன்படுத்துவது அருமையான மாத்தி யோசி பிளான். இந்த கதாபாத்திரத்தை நகைச்சுவையுடன் சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்ரீநாத் பாசி. கிளைமாக்ஸுக்கு சற்று முன்னர் தன் முகம் காட்டும் அந்த கொலைகாரனாக நடித்திருக்கிறார் ஷராபுதீன்.. அவரது பின்னணியும் கொலைக்கான காரணமும் நம்மை பதைபதைக்க வைக்கிறது. இறுதியில் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமே என்கிற எண்ணத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது..

சுசின் சியாம் பின்னணி இசை பல இடங்களில் ராட்சசன் படத்தின் பின்னணி இசையை தழுவியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சிஜூ காலித்தின் ஒளிப்பதிவில் இரவு காட்சிகள் படபடப்பையும் பதட்டத்தையும் படம் நெடுகிலும் ஏற்படுத்துகின்றது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை துளியும் போரடிக்காமல் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ்.. அவருக்கு தாராளமாக ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்

மொத்தத்தில் இந்த ‛அஞ்சாம் பாதிரா - இன்னொரு ‛ராட்சசன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement