Advertisement

மூத்தோன் (மலையாளம்)

Share

நடிகர்கள் : நிவின்பாலி, திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ, சஞ்சனா திபு, சஷாங் அரோரா, சோபிதா துலிபாலா, சுஜீத் சங்கர் மற்றும் பலர்
இசை : சாகர் தேசாய்
ஒளிப்பதிவு : ராஜீவ் ரவி
இயக்கம் : கீது மோகன்தாஸ்

கேரளாவில் கடற்கரையோர கிராமமொன்றில் உறவினர் ஆதரவில் வளர்கிறான் முல்லா.. அவனது அண்ணன் அக்பர் பல வருடங்களுக்கு முன்பு கேரளாவை விட்டு மும்பைக்கு சென்றுவிட்டான் என்கிற தகவல் மட்டும் முல்லாவின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.. அண்ணன் இருக்குமிடம் ஆமினா என்கிற பெண்ணுக்கு தெரியும் என்கிற தகவல் தெரிய வர, அவளது தொலைபேசி எண்ணை தெரிந்துகொள்கிறான்..

இளங்கன்று பயமறியாது என்பது போல் தனியாக படகை எடுத்துக்கொண்டு கடலில் செலுத்தி அலைகளில் சிக்கி பின்னர் கப்பலில் வந்தவர்களால் மீட்கப்பட்டு ஒருவழியாக மும்பை வந்து சேருகிறான். காவல் நிலையம், அனாதை இல்லம் என மாறி மாறி சிக்கி, அங்கிருந்து தப்பிக்கும் முல்லா ஒரு கட்டத்தில் போதை மருந்துக்கு அடிமையான சிறுவர்களை கடத்தி விற்கும் பாய் என்பவனின் கைகளில் சிக்குகிறான்.

பாயும், அவனது நண்பனான சலீமும் சேர்ந்து முல்லாவை மிகப்பெரிய விலைக்கு விற்பதற்கு ஏற்பாடு செய்து, அவனுக்கு தேவையான சில பயிற்சிகளை கொடுக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் முல்லா தேடிவந்தது தன்னைத்தான் என்று அறிகிறான் பாய்.. கேரளாவில் அக்பர் ஆக இருந்த மிதி இளைஞன், மும்பைக்கு வந்து எப்படி பாய் ஆனான் என்பதும் முல்லாவை அவனால் விலைக்கு விற்பதில் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்பதும் மீதி படம்.

வழக்கமான நிவின்பாலியை தேடி படத்திற்கு போகிறவர்களுக்கு இதில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அனுப்புகிறார் நிவின்பாலி.. அது பலருக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம்.. சிலருக்கு நிஜமான அதிர்ச்சியாகவே இருக்கலாம்.. அந்த அளவிற்கு அந்த அக்பர் மற்றும் பாய் என இரண்டு விதமாக கதாபாத்திரங்களிலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நிவின்பாலி. மும்பையில் குடியிருக்கவே லாயக்கு இல்லாத ஒரு ஏரியாவில் போதை மருந்து உட்கொண்டு, கிடைத்த மூன்றாம் தர வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தும் ஒரு சராசரி மனிதனின் கதாபாத்திரத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் நிஜமாகவே புதிது.. அதைவிட ஆச்சரியம் அல்லது அதிர்ச்சி என்னவென்றால் பிளாஷ்பேக்கில் அவருக்கும் அவரது நண்பன் அமீருக்குமான நட்பு தான்.. நிச்சயமாக இப்போது இருக்கும் முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்ல, சாதாரண ஹீரோக்களே நடிக்க தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்ததற்காக நிவின்பாலி பாராட்டியே ஆகவேண்டும்.

நிவின்பாலிக்கு அடுத்ததாக அவரைத் தேடிவரும் முல்லா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனா திபு, காட்சிக்கு காட்சி விதவிதமான முக பாவனைகளால் நம்மை அசத்துகிறார்.. என்னடா பெண்பிள்ளை பெயராக இருக்கிறதே என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் கிளைமாக்ஸில் அதுதான் மிகப் பெரிய டுவிஸ்ட்டே.. அதேபோல நிவின்பாலியின் நண்பனாக பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஷாங் அரோரா.. மூர்க்கத்தனம் காட்டுவதிலும் அடிவாங்கி கதறுவதிலுமாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிராமத்தில் நிவின்பாலியின் நெருங்கிய நண்பனாக வரும் அமீர் என்கிற வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஷன் மேத்யூ, எந்தவித முகச்சுளிப்புமின்றி, தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். நிவின்பாலியின் நலம் விரும்பியாக வரும் இயக்குனர் திலீஷ் போத்தனுக்கு மிக கச்சிதமான கதாபாத்திரம்.. தனது நடிப்பால் அதை மெருகேற்றி இருக்கிறார்..

மும்பையில் சிவப்பு விளக்குப்பகுதியில் விலைமாதுவாக வரும் சோபியா துலிபாலா நடிப்பைப் பார்த்தால் அவர் அதை நிஜம் என நம்மை நம்பவைக்கும் அளவிற்கு செய்திருக்கிறார்.. நிவின்பாலியின் இன்னொரு நண்பராக அரவாணி கேரக்டரில் வரும் சுஜித் சங்கர் தன் பங்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் தருகிறார்.. நடிப்பு என்று வந்துவிட்டால் நிவின்பாலி சுஜீத் சங்கர் சஷாங் அரோரா இவர்களுக்குள் ஒரு போட்டியே வைக்கலாம்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.. இயக்குனர் கீது மோகன்தாஸின் கணவர் ராஜீவ் ரவியே இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு என்பதால் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.. கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளாகட்டும், கிராமம் ஆகட்டும், மும்பையின் நெரிசலான வீதிகள் ஆகட்டும் அனைத்துமே நாம் அந்த பகுதியில் உலா வருவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது அவரது ஒளிப்பதிவு.. சாகர் தேசாயின் பின்னணி இசையும் படத்திற்கு வலுவூட்டுகிறது..

தேசிய விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் இயக்குனர் கீது மோகன்தாஸ் இந்தப் படத்திலும் அதையே தொடர்ந்து இருக்கிறார்.. ஆனால் அதே சமயம் விருது படம் என்று தெரியாத அளவிற்கு விறுவிறுப்பாகவும் கமர்ஷியலாகவும் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.. நல்ல படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்..

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement