நடிப்பு - வருண் ஐசரி, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - நட்டு தேவ்
இசை - தரண்குமார்
வெளியான தேதி - 11 அக்டோபர் 2019
நேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
இளம் ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அதற்காகவே இயக்குனர் நட்டு தேவ் என டைட்டிலில் கூட வைக்காமல் முரட்டு சிங்கிள் என வைத்து ரசிகர்களை ஈர்க்கப் பார்த்திருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு அவர்களது தடுமாற்றமான வயதில் வரும் ஆசையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ். மற்றபடி படத்தில் வேறு எந்த டிவிஸ்ட்டும் கிடையாது. அதை வைத்தே இரண்டு மணி நேரம் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். யோகிபாபு படம் முழுவதும் இருப்பதால் அவற்றை மறந்து ரசிக்க முடிகிறது.
இஞ்சினியரிங் நான்காம் ஆண்டு படிப்பவர் வருண். வகுப்பறையில் ஆபாச வீடியோ பார்த்ததால் கல்லூரியை விட்டு ஆறு மாதம் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். அவர்களது வீட்டு மாடிக்கு சம்யுக்தா ஹெக்டே குடும்பம் வாடகைக்கு வருகிறார்கள். சம்யுக்தாவைப் பார்த்ததும் நட்பாகி, அவருடன் ஒரே பாட்டில் நெருக்கமாகி விடுகிறார் வருண். இருவரும் தங்களுக்குள் காதல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே ஓர் இரவில் இருவரும் இணைகிறார்கள். அதனால் சம்யுக்தா கர்ப்பம் ஆகிறார். அதை கலைக்கச் சொல்கிறார் வருண், ஆனால், காப்பாற்ற நினைக்கிறார் சம்யுக்தா. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் நாயகன் வருண் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிய வைத்து விடுகிறார் இயக்குனர். பெண் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று துடிப்பவர்தான் வருண். ஆனால், அப்பாவைக் கண்டாலே பயந்து நடுங்குபவர். அப்படிப்பட்டவர் சம்யுக்தாவிடம் நெருங்கிப் பழகி அவருடைய ஆசையையும் தீர்த்துக் கொள்கிறார். அந்த வயது இளைஞர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை தன் நடிப்பில் தெளிவாகவே காட்டியிருக்கிறார் வருண். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு நாயகனாக முதல் படம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று நினைத்தது ஏன் என்று தெரியவில்லை.
சம்யுக்தா பெற்றோருடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள். மதுரைப் பெண்ணாக இருந்தாலும் வருணுடன் உடனேயே அவர் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் என்பது நம்பும்படியாக இல்லை. வருண் கேட்டதுமே இவரும் தன்னைக் கொடுக்க சம்மதிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆரம்பத்திலேயே வருண் கதாபாத்திரத்தைப் புரிய வைத்தது போல இவரது கதாபாத்திரத்தையும் அப்படி ஆசைக்கு ஏங்குபவர் எனச் சொல்லியிருந்தால் நம்பலாம்.
கோமாளி படத்தை ஜெயம் ரவியுடன் இரண்டாவது நாயகனாக இணைந்து காப்பாற்றிய யோகி பாபு, இந்தப் படத்திலும் இரண்டாவது நாயகனாக இருந்து காப்பாற்றுகிறார். அடிக்கடி சிரிக்க வைப்பவர் ஒரு காட்சியில் அழவும் வைக்கிறார்.
நாயகன் வருணுக்கு தாய்மை என்றால் என்ன என்பதைப் புரிய வைக்கும் பப்பி ஆக நாய் பிங்கி. கிளைமாக்ஸ் காட்சிகளில் அந்த நாய் கூட அருமையாக நடித்திருக்கிறது.
தரண் குமார் இசையில் யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், ஆர்ஜே பாலாஜி, கௌதம் மேனன் ஆகியோரைப் பாட வைத்து பாடல்களைப் பிரபலமாக்க முயற்சித்திருக்கிறார்கள்.
படத்தில் ஆபாசக் காட்சிகள் இல்லை. ஆனாலும் பல இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றதை சென்சாரில் கட் செய்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் இஞ்சினியரிங் படிக்கும் இளைஞர்கள் கூட இப்படி இருக்கிறார்கள் என்ற சித்தரிப்பு கவலைப்பட வேண்டிய ஒன்று.
ஜாலியான கதை என்ற பெயரில் சில தரக்குறைவான காட்சிகளை வைத்துவிட்டு, கடைசியில் தாய்மை, பாசம், புரிதல் என பாடம் நடத்தி படத்தை முடித்திருக்கிறார்கள்.
பப்பி - வயசுக் கோளாறு
பப்பி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!