Advertisement

மனோஹரம் (மலையாளம்)

Share

நடிகர்கள் : வினித் சீனிவாசன், அபர்ணா தாஸ், பஷில் ஜோசப் (இயக்குனர்), இந்திரன்ஸ், ஹரீஷ் பெராடி, டெல்லி கணேஷ் மற்றும் பலர்
டைரக்சன் : அன்வர் சாதிக்

ஒரு கதையை இப்படியெல்லாம் கூடவா உருவாக்க முடியும் என ஆச்சரியப்பட வைக்கும் விதமாக ஒரு பீல் குட் படமாக உருவாகியுள்ளது இந்த மனோஹரம்

தனது தந்தையைப் போலவே சிறுவயதிலேயே பெயிண்டிங் மற்றும் ஓவியம் வரைதல் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் வளரும் வினீத் சீனிவாசன், படிப்பு ஏறாமல் சுவர் விளம்பரங்கள் வரையும் ஆர்ட்டிஸ்டாக மாறுகிறார். அவரது திருமண தினத்தன்று அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவனுடன் ஓடிப்போக, அவமானத்தில் கூனிக்குறுகி போகிறார் வினீத் சீனிவாசன். அவரது நலம் விரும்பியாக இருக்கும் இந்திரன்ஸ், இதிலிருந்து அவரை திசைதிருப்பி ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வைக்க நினைக்கிறார். அதன்படி கோவையில் பிரின்டிங் மிஷின் விற்கும் டெல்லி கணேஷிடம் சென்று பிளக்ஸ் அடிக்கும் மிசின் ஒன்றை விலைபேசி பணம் கொடுத்து விட்டு வருகிறார்கள்.

வினீத்தின் தாய்மாமன் ஹரீஷ் பெராடிக்கு சொந்தமான கடை ஒன்றை அட்வான்ஸ் கொடுத்து வாடகைக்கு பிடிக்கிறார்கள். அதேசமயம் எப்போதுமே வினீத்தை மட்டம் தட்டும் அவரது தாய்மாமன், இன்னும் கூடுதலாக அட்வான்ஸ் கொடுக்கும் வினித்தின் எதிர்ப்பாளர் ஒருவருக்கு ஆதரவு கொடுக்கிறார். குறிப்பிட்ட நாளில் வினித் சீனிவாசன் கடையை திறக்கவில்லை என்றால் அதை அவர்களுக்கு மாற்றித் தருவதாக கூறுகிறார். இதனால் வைராக்கியத்துடன் கடைதிறப்பு வேலைகளை பார்க்கும் வினீத் சீனிவாசன் கோவை சென்று பிரிண்டிங் மிஷினை எடுத்துவர செல்லும்போது எதிர்பாராத அதிர்ச்சி அவரை தாக்குகிறது..

ஆம் முதல் நாள் குடோனில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக வினீத் சீனிவாசன் உட்பட பலருக்கு டெலிவரி செய்ய வைத்திருந்த மெஷின்களின் சாதனங்கள் பழுதடைந்து போனதால், மிகப்பெரிய நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் இரவோடு இரவாக டெல்லிகணேஷ் ஊரை விட்டு ஓடிப்போன செய்தி தெரிய வருகிறது. மிஷின் இல்லாமல் ஊருக்குச் சென்றால் அவமானம் என்று நினைக்கும் வினீத் சீனிவாசன், இயங்காத அந்த மிஷினை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு வருகிறார். ஒருவழியாக சமாளித்து கடை திறப்பு விழாவையும் நடத்தி விடுகிறார். ஆனால் அதன்பிறகு அவரைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு கோவை சென்று இரவோடு இரவாக பிரிண்டிங் செய்து வந்து தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து சமாளிக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த குட்டு வெளிப்பட்டு அவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய காண்ட்ராக்ட்டுக்கே வேட்டு வைக்கும் விதமாக கொண்டு வந்து விடுகிறது. அதுமட்டுமல்ல தனது இத்தனை நாள் பயணத்தில் நெருங்கி பழகிவரும் அபர்ணா தாஸுடனான காதலுக்கும் சிக்கலை கொண்டு வந்துவிடுகிறது. இதனால் அவர் கடையை காலி பண்ண வேண்டிய சூழலும், அதே கடைக்கு அவரது எதிராளி உள்ளே நுழையும் சூழலும் உருவாகிறது. இந்தநிலையில் எதை தொட்டாலும் தோல்வியிலேயே முடிவதால் வினித் சீனிவாசன் என்னவிதமான முடிவெடுத்தார்..? இல்லை நிலைமை சரியானதா..? காதல் கை கூடியதா..? இல்லை சோகம் துரத்தியதா என்பது மீதிக்கதை.

ஒரு நல்ல திறமையுள்ள ஆர்டிஸ்ட், அதேசமயம் திறமைகளை வெளிப்படுத்த களம் கிடைக்காமல் அதை நவீனமயமாக்கும் படிப்பறிவு இல்லாமல் மனதிற்குள் புழுங்கும் ஒரு சராசரி இளைஞனின் மனநிலையை படம் முழுவதும் அழகாக பிரதிபலித்திருக்கிறார் வினீத் சீனிவாசன். புதிதாக தொழில் துவங்கலாம் என்று நினைக்கும் இன்றைய இளைஞர்கள் சற்று அசட்டு தைரியத்தில் என்னவெல்லாம் செய்ய துணிகிறார்கள் என்பதை வினித் சீனிவாசன் காட்சிக்கு காட்சி செய்து காட்டுகிறார். அதேசமயம் கிளைமாக்ஸில் எதிர்பாராத ட்விஸ்ட் மூலம் அவரது வாழ்க்கையே மாறும்போது எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது.

இந்தப் படத்திற்கு இவர்தான் பொருத்தமானவர் என்கிற அளவில் ஒரு சராசரி சாதாரண வீட்டுப்பெண்ணாக நடித்துள்ளார் அபர்ணா தாஸ். அதேசமயம் முகபாவங்கள் மூலமே நடிப்பை அழகாக வெளிப்படுத்தவும் இவருக்கு தெரிந்திருக்கிறது.

அடியாட்களுக்கு கட்டளையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் கதாபாத்திரங்களில் மட்டுமே நாம் பார்த்து வந்த ஹரீஷ் பெராடி, இந்த படத்தில் அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறுக்காத ஒரு கதாபாத்திரத்தை தனது நடிப்பால் வித்தியாசப்படுத்தி இருக்கிறார். இவர்கள் தவிர நடிகர் டெல்லி கணேஷ் மிக முக்கியமான, கதைக்கு இரண்டு முறை திருப்புமுனையாக அமையும் ஒரு கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.. குறிப்பாக இடைவேளையில் காணாமல் போனவர் கிளைமாக்ஸில் என்ட்ரி கொடுக்கும்போது கடைசி கால் மணி நேரம் சூடுபிடிப்பது உண்மை.

இது தவிர வினீத் சீனிவாசனுக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்யும் இந்திரன்ஸ், மற்றும் படம் முழுதும் உற்ற நண்பனாக கூடவே வரும் (இயக்குனர்) பஷில் ஜோசப், வினீத் சீனிவாசனுக்கு பிரிண்டிங் ஆர்டர் கொடுத்து அவரை கைதூக்கி விட நினைக்கும் பஞ்சாயத்து பிரசிடன்ட், சீனிவாசனின் வளர்ச்சியை கண்டு தடுக்க நினைக்கும் இன்னும் இரண்டு இளைஞர்கள் என எல்லோருமே தாங்கள் பொருத்தமான தேர்வு தான் என்று சொல்லும் விதமாக கதாபாத்திரத்துடன் பொருந்திப்போய் நடித்துள்ளார்கள்.

கதையின் மையமே ஒரு பிளக்ஸ் பிரிண்டிங் மிஷின் கடை துவங்குவதுதான்.. அதை வைத்துக்கொண்டு அதில் சிலபல சிக்கல்களையும் திருப்பங்களையும் கொண்டுவந்து நம்மை நகம் கடித்துக் கொண்டே இருக்கை நுனியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் அன்வர் சாதிக். குறிப்பாக வினீத் சீனிவாசினின் குட்டு எப்போது உடையுமோ என நம்மை டென்ஷன் மற்றும் சந்தோசம் எனக்கு இரண்டு வித கலவையான உணர்வுகளுக்கு ஆட்படுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அன்வர் சாதிக்.

மொத்தத்தில் இந்த மனோஹரம் படம் உண்மையிலேயே மனோகரமான படம் என்பதில் சந்தேகமில்லை.

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement