Advertisement

கைதி

நடிப்பு - கார்த்தி, நரேன், மரியம் ஜார்ஜ், தீனா
தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - சாம் சி.எஸ்.
வெளியான தேதி - 25 அக்டோபர் 2019
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை. ஆனாலும் இரண்டரை மணி நேரம் நம்மை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பவிடாமல் வாட்சப்பில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்க்கவிடாமல் திரையிலேயே நம் கவனம் முழுவதும் இருக்கும்படி விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ போதைப் பொருளைப் பிடிக்கிறார் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் அதிகாரியான நரேன். அந்தப் பொருளை கமிஷனர் அலுவலகத்தில் மறைத்து வைத்திருக்கிறார். அது பற்றி அறிந்த கடத்தல் கும்பல், நரேனையும், அவர் டீமைச் சேர்ந்தவர்களையும் கொல்லத் துடிக்கிறது. ஐஜி வீட்டில் பார்ட்டியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நரேன் டீமைச் சேர்ந்தவர்களை போதைப் பொருளைக் கொடுத்து மயக்கமடைய வைக்கிறது அந்த கும்பல். அதிலிருந்து தப்பிக்கும் நரேன், ஐஜி உட்பட சக அதிகாரிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார்.

பத்து வருட சிறை தண்டனைக்குப் பிறகு அனாதை ஆசிரமத்தில் வளரும் தன் பெண்ணைப் பார்க்க வரும் கார்த்தி, நரேனுக்கு உதவியாக லாரி ஒன்றை ஓட்டும் வேலையில் இறங்குகிறார். அந்த லாரியில் மயக்கமடைந்த போலீஸ் அதிகாரிகளை மருத்துவனைக்குக் கொண்டு செல்கிறார்கள் நரேனும், கார்த்தியும். அதைத் தடுக்கவும், அதே சமயம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போதைப் பொருளை மீட்கவும் கடத்தல் கும்பல் இறங்குகிறது. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள், கார்த்தி அவருடைய மகளைப் பார்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான கதை.

படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள்ளாகவே மொத்த பரபரப்பும் ஆரம்பமாகிவிடுகிறது. அங்கிருந்தே கிளைமாக்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி ஒரு கதையை யோசித்து அதற்கான திரைக்கதை அமைத்து, கூடவே அப்பா - மகள் சென்டிமென்ட்டையும் இணைத்து இந்த தீபாவளிக்கு ஒரு 'பர்பெக்ட்' ஆன படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ்.

இப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்ததற்காக கார்த்தியைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும். ஜோடி இல்லாமல், கலர்கலரான ஆடை இல்லாமல் ஒரு அழுக்கு லுங்கி, சுமாரான கிழிந்த சட்டை, முகத்தில் தாடி, நெற்றியில் திருநீறு என அவருடைய தோற்றமும், பேச்சும், அதிரடியும் சிம்ப்ளி சூப்பர்ப். பன்ச் டயலாக்கே இல்லாமல் அவருடைய ஹீரோயிசத்தை அப்படி உயர்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர். மகள் சென்டிமென்ட்டில் கண்ணீர் விடவும் வைக்கிறார் கார்த்தி. அவருடைய சிறந்த படங்களின் பட்டியலிலும், சிறந்த கதாபாத்திரங்களின் பட்டியலிலும் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

போலீஸ் அதிகாரியாக நரேன். ஒரு கை உடைந்து கட்டுப் போட்ட நிலையில் கைகளை அதிகம் அசைத்துப் பேச முடியாமல் முகபாவங்களிலும், வசனங்களைப் பேசுவதில் மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஒரு 'டெய்லர் மேட்' கதாபாத்திரம் போல் அவருடைய நடிப்பு அமைந்துள்ளது.

ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் நரேனுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததோடு, கார்த்தி, நரேனுடன் லாரியில் சேர்ந்து பயணிக்கும் தீனா, கமிஷனர் அலுவலகத்தில் தனி ஆளாக நின்று கடத்தல் கும்பலைச் சமாளிக்கும் மரியம் ஜார்ஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.

அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் தான் வில்லன்கள். ஹரிஷ் லாக்கப்பில் இருக்க, அர்ஜுன் தாஸ் நடிப்பில் அதிகம் மிரட்ட, ரமணா அடிதடியில் மிரட்டுகிறார்.

சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் பரபரப்பை எந்த இடத்திலும் தொய்வடைய வைக்காமல் வைக்கிறது. ஒரே இரவில் நடக்கும் கதை, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனுக்கு அதிக வேலை. இடத்திற்குத் தக்கபடி ஒளிகளை அமைத்து அவருடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு சில நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளைத்தான் படத்தின் மைனஸ் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு சீரியசாக நகரும் படத்தின் கிளைமாக்சை அப்படிப்பட்ட அதிரடி சரவெடியுடன் முடித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தாலும் அதுவும் சுவாரசியமாகத்தான் உள்ளது.

வழக்கமான சினிமா வேண்டாம், வித்தியாசமான சினிமா வேண்டும் என்ற ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவரும் ரசிக்கும்படியான ஒரு வித்தியாசமான படம் 'கைதி'.

கைதி - காவலரைக் காத்தவன்(ர்)

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Aarkay - Pondy,இந்தியா

  எல்லாம் ஓகே ஆனால், இன்ட்ரோ சீன்-ம், மரண அடி வாங்கி, பத்து பேர் மேலே படுத்திருக்கும்போது, தன் பெண்ணிற்காக வாங்கிய ஜிமிக்கி கம்மலை வில்லன் ஆள் காலால் மிதிக்கும், எல்லோரையும் தூக்கிப்போட்டு மீண்டும் சண்டையிடுவதும், ரொம்ப ஓவர் எப்போதுதான் இந்திய சினிமா, இந்த சினிமாத்தனங்களிலிருந்து விடுபடுமோ? ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ சீன்-களுக்கு இந்த பில்டப் தேவையா? அவர்களென்ன வேற்று கிரகத்திலிருந்தா வந்தார்கள்? கொம்பு முளைத்திருக்கிறதா? எப்போதும் சுற்றி ஒரு துதிபாடும் கூட்டம்.... அவர்களைவிட வேறு யாரும் அழகாய் தெரியக்கூடாது.... இவையெல்லாம் எப்போது மாறும்? என்னதான் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை காலம் கடந்து சொன்னாலும், கைதியைவிட, அசுரன் எவ்வளவோ மேல்

 • Amirthaa Dresses -

  பார்க்க வேண்டிய நல்ல படம்

 • Amirthaa Dresses -

  இடைவேளை வரை நேரம் போனதே தெரியவில்லை. இடைவேளை க்கு பிறகு படம் கொஞ்சம் இழுவை... ஆனால் கண்டீப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்... வாழ்த்துக்கள் ...

 • HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ

  லுங்கி_ராம்போ.. கிளைமாக்ஸ் முடிந்ததும் இந்த டைட்டில் தான் மனதிற்கு வந்தது.. கடைசி கால் மணிநேரம் வரை, படம் வேற லெவல்.. கடைசியில், ஓவர் மசாலா நெடியை குறைக்க தவறி விட்டார் டைரக்டர்.. ஏனென்று தான் தெரியவில்லை.. தரமான அதிரடி படம்.. இன்னும் பல ஆண்டுகளுக்கு பிரபலமாக இருக்கும்... பல லாஜிக் ஓட்டைகள், அதில் பெரிய ஒன்று, அப்பட்டமாக தெரிந்தது..

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  லாஜிக் இல்லைனாலும் பரவாயில்லை, காப்பி படம்னாலும் பரவாயில்லை. வித்தியாசமான படம்.

 • Tanjore Hajamaideen -

  GOOD MOVIE! KARTHI GOOD ACTION!!

 • Venk@ -

  3Hrs Saravedi, characters ion and their acting was perfect, which gave strong support to the movie. Great acting by Villain Anbu character.

 • bugs - chennai,இந்தியா

  ://www.chennaimemes.in/kaithi-also-copied-from-this-cult-classic-hollywood-film-check-out

 • Udhaya Sankar - chennai,இந்தியா

  கைதி அந்தளவுக்கு நல்லா இல்லை ஆங்கில படத்தின் காப்பி ஓவர் பில்டப்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement